science

img

அறிவியல் கதிர் - ஆர்.ரமணன்

புதிர் ஏரியின் ஆழத்தில் தொன்மையான நுண்ணுயிரிகள்

அண்டார்டிக்கா கண்டத்தில் 14 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உறைந்து போன புதிர் ஏரியில்(Lake Enigma) உயிரினங்கள் உயிரோடு இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றதாம். இந்த ஏரியின் 30 அடி ஆழத்தில் உள்ள பெரும் நீர்ப் பகுதியிலிருந்து தனித்துவமான நுண்ணுயிரிகளை அறிவியலாளர்கள் மீட்டுள்ளனர். இத்தாலி நாட்டு துருவ ஆய்வு மய்யத்தை சேர்ந்த நுண்ணுயிரிலாளர்கள் ஃப்ரான்செகோ ஸ்மெடிலியும் வயலொட்டா லா கோனோவும் இத்தாலி நாட்டு புவி இயற்பியல் மற்றும் எரிமலைத் துறையை சேர்ந்த ஸ்டெஃபனோ அர்பினியும் முன்னணி ஆய்வாளர்களாக இருந்து இதை செய்துள்ளனர். ஏரியின் சேர்மானத்தை தரை துளைக்கும் ரேடார் கருவியைக் கொண்டு ஆய்வு செய்த பின், துளையிட்டு தண்ணீர் மாதிரிகளை சேகரித்தனர். நுண்ணுயிரிகளின் வாழ்விடத்தை மாசுபடுத்தாமல் இருக்க, முதல் மூன்று மீட்டர்கள் மின் துளைப்பானாலும் அதன்பின் வெப்ப நீர் துளையிடுதல் மூலமாகவும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த நுண்ணுயிரிகள், ஏரி உறைவதற்கு முன் இருந்த தொன்மையான நுண்ணுயிர்ச் சூழலை பிரதிநிதிப்படுத்தும் தலைமுறையாகும். இவை ஒளிச்சேர்க்கை, கூட்டு வாழ்வு மற்றும் இரையாக்குதல் போன்ற எளிமையான உணவுச் சுழலில் வெவ்வேறு பங்காற்றுகின்றன. பனிக் கட்டிக்கடியில் 12 மீட்டர் ஆழம் உள்ள நீர்ப் பகுதியானது வேதிப்பொருட்கள் கலந்ததும் நிலையானதும் அழுத்தப்பட்டும் உள்ளது. அருகிலுள்ள பனிப்பாறை இதற்கு நீர் அளிக்கலாம் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இந்த ஆய்வு ‘Communications Earth & Environment.’ எனும் இதழில் வந்துள்ளது. 

இரட்டைப் பிறவிகள் பரிணாம வளர்ச்சியில் ஒற்றையானது 

இரட்டைக் குழந்தைகள் பிறப்பது மனித வரலாற்றில் அரிதான ஒன்றாக உள்ளது. அதனாலேயே அது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ஆனால் அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் மனித இனத்தை உள்ளடக்கிய பிரிமேட்(primate) எனும் இனத்தின் பரிணாம காலத்தில் இரட்டைக் குழந்தைகள் என்பதே வழக்கமாக இருந்தது என்று தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் பாலூட்டிகளின் பரிணாமத்தையும் அவற்றின் இனப்பெருக்க வரலாற்றையும் படிம மற்றும் அண்மைக்காலங்களில் வாழும் விலங்குகளின் எலும்புகளைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டது. ஒரு பிரசவத்தில் எத்தனை குழந்தைகள் வளர்கின்றன எனும் தரவுகளை சேகரித்து கணித அல்கோரிதம் கொண்டு மாதிரிகள் கணிக்கப்பட்டன. ஒவ்வொரு பாலூட்டி இனத்திலும் அதன் வாழ்நாள் காலத்தில் எத்தனை குட்டிகள் ஈனுகின்றன. பிறக்கும்போதும் வளர்ந்தபின்னும் அவற்றின் சராசரி உடல் அளவு, பிரசவ கால அளவு ஆகியவையும் இதில் சேர்க்கப்பட்டன. ஆயிரம் இனங்களின் தரவுகளைக் கொண்டு வெவ்வேறு அம்சங்களுக்கிடையிலுள்ள தொடர்புகளை புள்ளிவிவர மாடலிங் மூலம் கணிக்கப்பட்டது. இதற்கு முன் செய்யப்பட்ட ஆய்வுகளில் இரட்டைக் குழந்தை என்பது பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட ஒன்று என்று கருதப்பட்டது. ஆனால் இந்த ஆய்வில் ஒற்றைக் குழந்தை என்பதே பரிணாம மாற்றத்தில் ஏற்பட்டது என்பது தெரியவந்துள்ளது.  பிரிமேட் இனங்களுக்கு அதிலும் குறிப்பாக மனிதர்களுக்கு குழந்தைப்பருவ கற்றல் என்பது மிகவும் முக்கியம். மேலும் நவீன மனிதர்களுக்கு தொழில்நுணுக்கங்களை உருவாக்குவதும் அதை மேம்படுத்தவும் உள்ள திறமை நம்முடய மூளையின் அளவைப் பொறுத்தது. எனவே குழந்தையின் அளவும் அதன் மூளையின் அளவும் பெரிதாக இருப்பது அவசியம். பல குழந்தைகளை ஒரே பிரசவத்தில் உருவாக்க தாய்க்கு அதிக ஆற்றல் தேவைப்படும். மேலும் அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் சிறியதாகவும் குறைப்பிரசவமாகவும் இருப்பதால், பெரிய குழந்தைகளை பெறும் தொடக்க கால பிரிமேட் இனங்கள் பிழைத்திருக்க உகந்ததாக இருந்திருக்கும்.  50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்கும் இந்த மாறுதல் பல தலைமுறைகளில் நடந்திருக்கும். இன்றைக்கு இரட்டைக் குழந்தைகள் பெறுவது எளிதாக உள்ளது. ஆனாலும் அமெரிக்காவில் அவை பிரசவ காலத்திற்கு முன்பே பிறக்கின்றன; அவை தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க வேண்டியுள்ளது. எப்படியிருந்த போதிலும் இரட்டைக் குழந்தைகள் நமது மரபணு வரலாற்றில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த ஆய்வு மேற்கு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டெஸ்லா மான்சன், யேல் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஜேக் மக்பிரைட் ஆகிய மானுடவியலாளர்களால் நடத்தப்பட்டது. 

மது அருந்துவதை தடுக்க விளம்பரமும் அறிவுரையும் 

மது அருந்துவதை தடுப்பது அல்லது குறைப்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று மது அருந்துவதன் தீமையை அறிவுறுத்துவதும் அதை குடிக்கும் எண்ணிக்கையுடன் இணைப்பதும் நல்ல பலனைத் தருகிறது என்று தெரிய வந்துள்ளது. மிதமிஞ்சிக் குடிப்பதனால் புற்று நோய் மட்டுமல்ல, மரணம், இதய நோய், செரிமானக் கோளாறுகள், மறதி நோய் அதிகரிக்கும் அபாயம் ஆகியவையும் அதனுடன் தொடர்புடையன.  உலகளாவிய உடல்நலத்திற்கான ஜார்ஜ் நிறுவனத்தை சேர்ந்த பொருளாதார மற்றும் உளவியல் நிபுணர் சிமோன் பெட்டிகுரூவ் ஓர் ஆய்வை நடத்தினார். இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் வெவ்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவர்களுக்கு வெவ்வேறு விளம்பரங்களும் குடிப்பழக்கம் குறித்த அறிவுரைகளும் காட்டப்பட்டன. குடிப்பழக்கத்தையும் புற்றுநோயையும் தொடர்புபடுத்திய விளம்பரத்தையும் அவர்கள் குடிக்கும் மதுவின் எண்ணிக்கையை கணக்கிடும் ஆலோசனையையும் பார்த்த குழுவினர் குடிப்பதை குறைக்க முயற்சிப்பது தெரியவந்தது. ஆறுவார காலத்தில் குறிப்பிட்ட அளவு குறைத்ததும் இந்தக் குழுவினர் மட்டுமே. இந்த ஆய்வு ஆஸ்திரேலிய மது குடிப்போர் இடையே நடத்தப்பட்டது. எனவே இது மற்ற பகுதிகளுக்கு பலனளிக்கும் என்று உறுதியாகக் கூற இயலாது. மது குடிப்பதை தடுக்கும் பரப்புரைக்கு ஒதுக்கப்படும் நிதி ஆதாரங்கள் குறைவாகவே இருப்பதால், எந்த பரப்புரை அவர்களுடன் இயைந்து போகிறது என்பது முக்கியம் என்கிறார் பெட்டிகுரோவ். உலகளாவிய அகால மரணத்தில் 7% மது குடிப்பதனால் ஏற்படுகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம். மது எளிதாக கிடைப்பதை தடுப்பது, அதன் விலையை அதிகமாக்குவது போன்ற அணுகுமுறைகளை உடல்நல முகமைகள் முன்வைத்தாலும் தனிப்பட்ட தேர்வே குடிப்பழக்கத்தை முடிவு செய்யும். இந்த ஆய்வு ‘Addictive Behaviors’ என்கிற இதழில் வெளிவந்துள்ளது.