science

img

சிங்கப்பூரில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட நபருக்கு தீவிர சிகிச்சை

சிங்கப்பூர் நாட்டில் முதல்முறையாக ’மங்கிபாக்ஸ்’ என்ற குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக, அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த `மங்கிபாக்ஸ்' நோய் என்பது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கும் ஒரு அரிய வைரஸ் கிருமியால் பரவக்கூடியது. இந்த வைரஸ், மத்திய ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள வெப்ப மண்டல மழைக்காடுகளில்தான் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தப் பாதிப்பு ஏற்பட்டால், காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி, மூட்டு வலி மற்றும் தோல்களில் தடிப்பு, வீக்கம், நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் உண்டாகும். ஆனால், இந்த நோயால் இறப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. 

கடந்த 1958 -ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டைச் சேர்ந்த வைராலஜிஸ்ட் ப்ரீபென் வோன் மேக்னஸ் என்பவர் குரங்கில் இந்த வைரஸை முதன்முதலாகக் கண்டறிந்தார். கடந்த 1970-ஆம் ஆண்டு இந்த வைரஸ் மனிதர்களைத் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. 1970 முதல் 86 வரை 400 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். 

இந்நிலையில், சிங்கப்பூரில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு, சிங்கப்பூர் தேசிய தொற்று நோய் சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.