science

img

புதிய உலக சாதனை படைத்த அண்ணா பல்கலைக்கழகம் தயாரித்த ட்ரோன்!

உலக அளவில் வான்வெளி விளையாட்டுகளை மேற்பார்வையிடும் அமைப்பான ஃபெடரேஷன் ஏரோனாட்டிக் இண்டர்நேஷனல் (ஃப்ஏஐ) சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தயாரித்த ஆளில்லா ட்ரோனை உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள ஏரோஸ்பேஸ் ஆராய்ச்சி மையத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ட்ரோன், கடந்த 2018-ல் ஜூலை மாதத்தில், ஏரோனாட்டிக் இண்டர்நேஷனல் கூட்டமைப்பு மற்றும் இந்திய ஏரோ கிளப் ஆகிய அமைப்புகளின் அதிகாரிகள் முன்னிலையில் பறக்கவிடப்பட்டது. 

5 முதல் 25 கிலோ எடை பிரிவைச் சேர்ந்த இந்த ட்ரோன் தரையில் இருந்து 10 முதல் 15 அடி உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு, 6 மணி நேரம் 7 நிமிடம் 45 விநாடிகள் வரை பறந்தது. இதன்மூலம், அதிக நேரம் வானில் பறந்த சாதனையை படைத்தது. இது இதுவரை இல்லாத புதிய உலக சாதனை எனவும், கின்னஸ் சாதனைக்குப் பரிந்துரைக்க உள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

இதை அடுத்து, அண்மையில் பெங்களூரில் நடைபெற்ற ''ஏரோ இந்தியா 2019'' விமானம் மற்றும் ட்ரோன் ஒலிம்பிக்கில் 5 பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில் 4 கிலோவுக்கும் அதிகமான கண்காணிப்புப் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து 1.5 லட்சம் பரிசுத் தொகையை கைப்பற்றியது. மேலும் 4 முதல் 20 கிலோ எடையிலான கண்காணிப்புப் பிரிவில் முதலிடத்தை பிடித்து 3 லட்சம் பரிசை வென்றது. அதேபோல பறக்கும் தொழில்நுட்ப சவால் பிரிவில் 2 இடத்தை தக்கவைத்து 3 லட்சம் வாங்கியது. இப்படி மொத்தம் 7 லட்சம் ரூபாய் பரிசு தொகையை வென்றுள்ளது. 

உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்ததைத் தொடர்ந்து, தற்போது ஃபெடரேஷன் ஏரோனாட்டிக் இண்டர்நேஷனல், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆளில்லா ட்ரோனை உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது.