சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி தெளிக்க பயன்படும் ’ஸ்மார்ட் அக்ரிகாப்டர்’ என்ற ட்ரோனை வடிவமைத்துள்ளனர்.
ஹெக்சாகாப்டர் வகையைச் சேர்ந்த இந்த ட்ரோன் ஸ்மார்ட் மேப் மற்றும் நவீன கேமராவின் உதவியுடன் விவசாய நிலத்தின் பரப்பளவை அறிந்து, 10 மடங்கு அதிக வேகமாக பூச்சிக்கொல்லியை தெளிக்கும் திறன் கொண்டது. அதுமட்டுமின்றி பயிர்களின் நிலையை அறிந்து தேவையான அளவு பூச்சிக்கொல்லி அளிக்கக்கூடியது. இந்த ட்ரோனை பயன்படுத்த பழகிவிட்டால், ஒரே நபரே நான்கு, ஐந்து ட்ரோன்களை ஒரே ரிமோட் மூலம் ஒரே நேரத்தில் இயக்க முடியும்.
சமீபத்தில் மும்பை ஐஐடியில் நடத்த இந்திய கண்டுபிடிப்பு வளர்ச்சி திட்டம் போட்டியில், சென்னை ஐஐடி மாணவர்களின் அக்ரிகாப்டர் ட்ரோன், ரூ.10 லட்சம் பரிசு வென்றுள்ளது. விவசாயிகள் தாங்களே பூச்சிக்கொல்லி இடுவதால் வேதிப்பொருட்களின் பாதிப்புக்கு ஆளாகி ஆண்டுதோறும் சுமார் 10,000 விவசாயிகள் இறக்கின்றனர் என்பதை மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் துணை இயக்குநர் சந்திரா பூஷணின் ஆய்வின் மூலம் தெரிந்துகொண்ட சென்னை ஐஐடி மாணவர்கள் ரிஷப் வர்மா, கவின் கைலாஷ் மற்றும் ஆகாஷ் ஆனந்த், கடந்த 2018-ஆம் ஆண்டு இந்த ட்ரோனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஏற்கெனவே விவசாயத்துக்கான ட்ரோன்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் அவற்றின் ஆரம்ப விலையே ரூ.15 லட்சம் ஆகும். ஆனால், அனைத்து பாகங்களையும், அதனை இயக்கும் மென்பொருளையும் மாணவர்களே தயாரித்துவிட்டதால் அக்ரிகாப்டர் ட்ரோனுக்கு 5.1 லட்சம் ரூபாய் வரையே செலவாகியதாக தெரிவித்தனர்.
இந்த ட்ரோனில் பயன்படுத்தப்பட்டுள்ள மல்டி ஸ்பெக்ட்ரல் இமேஜிங் கேமரா (multispectral imaging camera) மற்றும் 15 லிட்டர் வரை பூச்சிக்கொல்லியை தானாகவே திரும்பவும் நிரப்பிக்கொள்ளும் அம்சம் ஆகியவற்றால் செலவு அதிகமானது என்றும் கூறுகின்றனர். இந்த ட்ரோன் இன்னும் சில சோதனைகளுக்குப் பின் செப்டம்பர் மாதம் பயன்பாட்டுக்கு ஏற்றதாக தயாராகிவிடும் என்று தெரிவித்துள்ளனர்.