science

img

அறிவியல் கதிர்

♦ மஞ்சக் கலரு ஜிங்கிச்சா! 
உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் நிறமிகளில் டைட்டானியம் டை ஆக்சைடு, சிலிக்கான் டை ஆக்சைடு போன்ற வேதிப்பொருட்கள் நானோ துகள்களாக உள்ளன. இவை நமது குடல்பகுதிகளை சேதப்படுத்தும் என ஒரு ஆய்வு கூறுகிறது. செரிமானம் மற்றும் உட்கிரகிக்கும் முக்கிய புரதங்கள் மீது இவை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இந்தப் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்று அறிவியலாளர்கள் கூறவில்லை என்றாலும் மக்கள் இது குறித்து விழிப்புணர்வு கொள்ள வேண்டும் என்கிறார்கள். 

♦ஓவியர் வரைந்த முக்கோணம் 
1452 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15இல் பிறந்து 1519 ஆம் ஆண்டு மே 2வரை வாழ்ந்த லியோனார்டோ டா வின்சி ஒரு ஓவியர் மட்டுமல்ல; வரைவிய லாளர், பொறியியலாளர், அறிவியலாளர், கோட்பாட்டா ளர், சிற்பி, கட்டிடக் கலைஞர் என்கிறார்கள். கலிபோர்னியா விலுள்ள கால்டெக் பொறியாளர்கள். புவி ஈர்ப்புவிசை குறித்த அவரது புரிதல் முற்றிலும் துல்லியமானது இல்லை யென்றாலும் பல நூற்றாண்டு முந்தியது. அவர் புவிஈர்ப்பு விசை ஒரு உந்து விசை என்பதைக் காட்ட சோதனைகளை வடிவமைத்தார். ஈர்ப்புவிசை நிலைப்புள்ளியை 97சதவீதம் சரியாகக் கணித்தார்.  கீழே விழும் ஒரு பொருள் கடக்கும் தூரமானது விழத் தொடங்கிய நேரத்தின் வர்க்கத்திற்கு நேர்மறை விகிதம் என்பதை கலீலியோ நூறாண்டுகள் கழித்துதான் உருவாக்கி னார். இரண்டு பொருட்களுக்கிடையேயான ஈர்ப்பு குறித்த பொதுவான ஈர்ப்புக் கோட்பாட்டை 17ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் ஐசக் நியூட்டன் உருவாக்கினார்.  ஆனால் இதற்கெல்லாம் முன்பே டா வின்சி இந்தக் கருதுகோள்களை ஆராய்ந்துள்ளார். அவர் ஒரு பூவாளியி லிருந்து மணலோ அல்லது தண்ணீரோ கீழே விழும்போது மாறா வேகத்தில் விழுவதில்லை; ஈர்ப்பு விசையால் வேகம் அதிகரிக்கிறது என்று குறித்துள்ளார்.  பூவாளியின் இயக்கத்தினால் அதன் கிடைமட்ட வேகம் அதிகரிப்பதில்லை; மாறாக அதன் அதிகரிப்பு கீழ்நோக்கியே இருக்கிறது என்பதையும் கூறினார். இந்த சோதனைகளில் கிடைத்த முடிவுகளை வரைபடமாகவும் காட்டியுள்ளார். பூவாளி மாறா வேகத்தில் சென்றால் கீழேவிழும் கோடு நேராக வும் சீரான உந்துவிசையில் சென்றால்கோடு சாய்வாகவும் விழுகிறது. இது ஒரு முக்கோணத்தை உண்டாக்குகிறது. பூவாளியின் உந்துவிசையும் ஈர்ப்பு விசையும் சமமாக இருந்தால் ஒரு சமபக்க முக்கோணத்தை உண்டாக்குகிறது என்பதையும் காட்டினார். இதிலிருந்து தூரத்திற்கும் நேரத்திற்கும் உள்ள தொடர்பை கணித ரீதியாக காட்டும் போது மட்டும் சிறிய தவறு செய்துள்ளார். கீழே விழும் பொருள் கடக்கும் தூரம் நேரத்தின் வர்க்கம் (t2 )என்பதற்குப் பதிலாக 2t என்று கணக்கிட்டுவிட்டார். அதாவது சரியான வழியில் தவறான சமன்பாட்டை பயன்படுத்தியிருந்தார்.

♦ இரண்டு உதயங்கள் 
பூமியின் எதிர்எதிர்ப் பக்கங்களில் ஒரே நாளில் காணப்பட்ட சூரிய உதயக் காட்சிகளை பன்னாட்டு விண்வெளி நிலையம்(international space station) பகிர்ந்துள்ளது. ஒரு படம் நியுசிலாந்தின் வட கிழக்கே பசிபிக் கடலின் மேலும் இன்னொரு காட்சி தென் பிரேசிலின் மேலும் சூரியன் தோன்றும் காட்சிகளாகும். பூமியின் காற்று மண்டலம் ஒளிமயமாவதும் அதன் மேலுள்ள மேகக்கூட்டங்களும் கொண்ட இந்த புகைப்படங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த விண்வெளி நிலையம் 90 நிமிடங்களில் பூமியை ஒரு சுற்று சுற்றி வருவதால் ஒரே நாளில் 16 சூரிய உதயங்களைக் காண முடியும். 

♦ பண்பாட்டு அழிவும் சுற்றுச்சூழல் அழிவும் 
கடல் பசு என்றழைக்கப்படும் கடல்வாழ் பாலூட்டிகளான மனாட்டி (manatee) மற்றும் டுகாங் (dugong) இந்தியப் பெருங்கடலிலும் பசிபிக் பெருங்கடலிலும் வாழ்கின்றன. இவை தாவர உண்ணிகள். சுற்றுச்சூழல் மாசினாலும் வாழ்விட இழப்பினாலும் இவை அழியும் அபாய இனம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இவற்றைப் பாதுகாக்கும் ஆஸ்திரே லியப் பழங்குடிகளின் அரவணைப்பை யும் அவை இழக்கும் அபாயம் உள்ளது. இந்தப் பழங்குடிகள் அவற்றை அள வோடு வேட்டையாடியும் அவற்றின் எண்ணிக்கையை கண்காணித்தும் வந்துள்ளனர். ஆனால் இப்போது உயர்ந்து வரும் கடல் மட்டத்தினால் அந்த சமுதாயம் அபாயத்திற்குள்ளாகியுள்ளது. மேலும் காற்று மற்றும் கடல் வெப்பம் உயர்வதால் அந்தப் பகுதியில் வாழ்வது கடினமாகியுள்ளது. இந்த விலங்கினங்கள் மட்டுமல்ல, உலகளாவிய ஆய்வில் 385 தாவர மற்றும் விலங்குகள் அங்கு வாழும் மனிதர்களின் பண்பாட்டுப் பாதுகாப்பை இழக்கும் அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.  ஆகவே சுற்றுச்சூழல் பாதுகாப்பில், பண்பாட்டு காரணிகள் முக்கிய இடம் பெற வேண்டும் என்கிறார் பார்சி லோனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பண்பாட்டு மானுடவியலாளர் விக்டோரியா ரெய்ஸ் கார்சியா. ஒரு பண்பாடு சுருங்கும்போது அந்தக் குழுவிற்கு தேவைப்படும் முக்கியமான இனங்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. ஆகவே ஒரு உயிரினத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் அவற்றின் பிழைப்பு அச்சுறுத்தல்களோடு அவற்றை பல்லாயிரம் ஆண்டுகளாக பாதுகாக்கும் மனிதர்களின் அழிவையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  ‘மனிதர்களை இயற்கைச் சூழலிலிருந்து பிரிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையில் இயங்கும் பலர் எண்ணுகிறார்கள். ஆனால் பல கலாச்சாரங்கள் இயற்கையை அரவணைக்கும் தொடர்பை இந்த சிந்தனை மறந்து விடுகிறது. இதற்கு ஒரு வழி பாதுகாப்பு நடவடிக்கைகளை ‘உயிரின பண்பாட்டு நிலை’க்கு மாற்றுவது’ என்கிறார் அவர்.  ரெய்ஸ் கார்சியாவின் குழு மொழிகளின் வளமை குறித்த ஆய்வை பயன்படுத்தி ஒரு பண்பாடு அழியும் அபாயத்தை நிர்ணயித்தனர். எந்த அளவு ஒரு மொழியின் பயன்பாடு குறைகின்றதோ அந்த அளவு அந்தப் பண்பாடு அச்சுறுத்தலுக்குள்ளாகின்றது; அந்த அளவுக்கு அதற்கு அவசியமான உயிரினங்களும் அழியும் அபாயம் ஏற்படுகிறது. ஆகவே ஒரு இனத்தின் உயிரின அழியும் அபாயத்தோடு(biological vulnerability) கலாச்சார அபாயத்தையும் (cultural vulnerability) சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த அணுகுமுறை மூலம் ஒரு உயிர்இனத்தை அரவணைக்கும் மனிதர்களையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இணைக்க முடியும். அந்தப் பாதுகாவலர்களுக்கு, எப்போது ஆதரவு தேவை என்பதையும் வலியுறுத்த முடியும். இயற்கையோடு இயைந்த நமது தொடர்புகளை அதிகம் சார்ந்த ஒரு சுற்றுச் சூழல் பாதுகாப்பு முயற்சிகளை தூண்டும் என்கிறார் கார்சியா.

;