science

img

அறிவியல் கதிர் - இரா.இரமணன்

1) உடல் பருமன்

ஒரு முறை கூட கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாத மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு தடுப்பு ஊசியால் கிடைக்கும் பாதுகாப்பு குறைவாக உள்ளதாக ஒரு சோதனை காட்டுகிறது. உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி செலுத்தியதில் சாதாரண உடல் பருமன் உள்ளவர்களை விட மூன்று மடங்கு குறைவான நோய் எதிர்ப்பு காரணிகளே உண்டாயின என்று கண்டறியப்பட்டது.  


2) வீனஸ் கிரகம்

சூரிய மண்டலத்தில் அதிக வெப்பமான வீனஸ் கிரகத்தை சுற்றுவதற்கு ஒரு விண்கலத்தை இஸ்ரோ நிறுவனம் செலுத்த தயாராகிறது.இந்த திட்டம் ஆலோசனைகள் முடிந்து திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாம்.தேவையான நிதியும் கனகிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் தெரிவித்திருக்கிறார்.இது 2024 டிசம்பர் மாதம் ஏவப்பட்டு அதற்கு அடுத்த ஆண்டு அதன் சுற்று வட்டப் பாதையை மாற்றுவதாக இஸ்ரோ நினைக்கிறது. அந்த வருடம் வீனசின் சுற்றுவட்டப் பாதையில் விண்கலத்தை நிலைநிறுத்துவதற்கு குறைவான எரிபொருளே தேவைப்படும் விதத்தில் பூமியும் வீனசும் அமைந்திருக்கும்.இது போன்ற அடுத்த அமைப்பு இனி 2031இல் தான் கிடைக்கும்.ஏற்கனவே வீனசுக்கு ஏவப்பட்ட திட்டங்களில் செய்யப்பட்ட சோதனைகளை செய்யாமல் தனித்துவமான அதிக முடிவுகளை கொடுக்கும் சோதனைகளை செய்யுமாறு திட்ட குழுவினரை சோமநாத் கேட்டுக்கொண்டார். 

மிகப் பெரும் கிரகங்கள் எவ்வாறு உண்டாகின்றன என்பது குறித்து பல ஆண்டுகளாக வானவியலாளர்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.,மையத் திரள்(core accretion) எனும் கருதுகோளின்படி ஒரு இளம் நட்சத்திரத்தை சுற்றும் வாயு,தூசி,பனி ஆகியவற்றாலான ஒரு  கிண்ணத்தில் சிறு பொருட்திணிவுத் துகள்களாகவே  முதலில் தொடங்குகிறது. இவை மற்ற பொருட்களை சிறிது சிறிதாக சேகரித்து புதிய கிரகத்தின் மையமாக மாறுகின்றன.தாய் நட்சத்திரத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரம் வரை இந்த மையப் பொருள் ஹைட்ரஜன்,ஹீலியம் ஆகியவற்றாலான ஒரு கனத்த போர்வையை திரட்டிக் கொள்கிறது.இப்போது அது ஊதிப் பெருத்த ஒரு வாயு உலகமாக மாறுகிறது. இதுதான் மையத் திரள் கருதுகோள். ஆனால் இப்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கிரகமானது அதன் நட்சத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது.எனவே இது மையத் திரள் நிகழ்வின் மூலம் உண்டாகியிருக்க முடியாது. அதற்கு மாறாக வாயுக்கள் மற்றும் தூசிகளின் ஒரு அதி வலிய உள்வெடிப்பினால் ஒரே சமயத்தில் உண்டாகியிருக்கலாம் என்கிறார் ஹவாயிலுள்ள சுபரு தொலைநோக்கி மய்ய நிலையத்தை சேர்ந்த தைனே கரி (Thayne Currie). இந்தக் கருதுகோளுக்கு கிண்ண நிலைத்தன்மை குலைதல் என்கிறார்கள்.


3) பெரு நகரங்கள்,  சிறு நகரங்கள்

பெரு நகரங்களில் வாழ்பவர்களை விட அவற்றிற்கு அப்பால் வாழ்பவர்கள் சுற்றியுள்ள வழிகளை கண்டறிவதில் சிறப்பாக இருக்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு. 38 நாடுகளை சேர்ந்த  400000 நபர்களிடம் ஒரு வீடியோ விளையாட்டை நடத்தியதில் இது தெரிய வந்துள்ளது. இந்த விளையாட்டில் பல்வேறு இலக்குகளை ஒரு படகின் மூலம் அடைய வேண்டும். நகரில் வாழ்ந்தவர்களைவிட நகருக்கு வெளியே வாழ்ந்தவர்கள் இலக்குகளைக் காண்பதில் சராசரியாக வெற்றி கண்டனர்.சிறு நகரங்கள் கிராமப்புறங்களில் வளைந்து நெளிந்து செல்லும் பாதைகள் அவர்களுக்கு பழக்கம் என்பதால் அவர்களால் இதை செய்ய முடிந்திருக்கும். மேலும் எளிதாகவும் சட்டகம் போலவும் அமைந்திருக்கும் நகரங்களிலிருந்து வந்தவர்களிடையே இந்த வேறுபாடு அதிகம் காணப்பட்டது. இந்த தரவுகளிலிருந்து குழந்தைப் பருவத்தில் வாழ்ந்த சூழல்களே இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என உறுதியாகக் கூற முடியாதாம். வயது,பால்,கல்வி ஆகியவையும் காரணிகளாக இருக்கலாம்.


4) புவி வெப்பம்

உயர்ந்து வரும் புவி வெப்பத்தினால், வன விலங்குகள் அதிகமாக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு இடம் பெயர்தல் நடைபெறும் என்கிறது ஒரு புதிய ஆய்வு.இதனால் நுண்கிருமிகள் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு தாவும் வாய்ப்பு அதிகமாகி பெரும்தொற்று ஏற்படக் காரணமாகலாம். இந்த இடம் பெயர்தலின்போது பல்வேறு வகை பாலூட்டி விலங்குகள் முதன்முதலாக ஒன்றையொன்று எதிர்கொள்ளும். இதை புவியியல் இடம்பெயர்தல் என்கிறார்கள். இந்த நிகழ்வின்போது அவை ஒன்றுக்கொன்று ஆயிரக்கணக்கான நுண்கிருமிகளை பகிர்ந்து கொள்ளுமாம்.


5) தாய் நட்சத்திரம்

தைனே கரியும் அவரது குழுவினரும் தாய் நட்சத்திரமான ஏபி ஆரிகா(AB Aurigae)வை சுபரு தொலைநோக்கி மற்றும் ஹப்பிள் தொலைநோக்கி கொண்டு 2016இலிருந்து 2020வரை அவ்வப்போது கவனித்துக் கொண்டிருந்தனர். அந்த நட்சத்திரத்தின் அருகில் ஒரு பிரகாசமான புள்ளியைக் கண்டனர். அருகில் என்றால் 14 பில்லியன் கிலோமீட்டருக்கு அப்பால். இது ஒரு கருநிலை கிரகம் என்பது தெளிவானது.அதற்கு ‘ஏபி ஆரிகா பி’ எனப் பெயரிட்டுள்ளனர். ஒரு கிரகம் மையத்திரள் மூலம் உருவானதா அல்லது கிண்ண நிலைத்தன்மை குலைதலா என்பதை தொலைநோக்கியின் மூலம் கவனிப்பதால் மட்டும் கூற முடியாது.ஆனால் புதிய கிரகம் நட்சத்திரத்திலிருந்து வெகு தொலைவில் பிரிந்து இருப்பது கிண்ண வெடிப்பு கருதுகோளுக்கு நல்ல ஆதாரம் என்கிறார் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த கொனோபேக்கி.இதில் இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியதிருக்கிறது என்கிறார் அவர். பெரும் கிரகங்கள் எவ்வாறு உருவாகின என்பதைக் கண்டறிய இந்த கண்டுபிடிப்பு உதவும். ஏப்ரல் 4ஆம் தேதியிட்ட ‘நேச்சர் அஸ்ட்ரோநாமி’ இதழில் இந்த ஆய்வு வெளிவந்துள்ளது.


 

;