science

img

அறிவியல் கதிர்

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்தவிடத்து 
கணவாய் மீன்களின் புத்திக் கூர்மைக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளனவாம். மாலையில் செம்மீன்கள் உணவாகக் கிடைக்கும் என்று தெரிந்தால் அவை பகலில் குறைவான நண்டுகளை உண்கின்றனவாம். செம்மீன்கள் தொடர்ச்சியாக இல்லாமல் சீரற்ற முறையில் கொடுக்கப்பட்டால், தங்களது தெரிவு முறையை கைவிட்டு சந்தர்ப்பவாத பழக்கமாக பகலில் நிறைய நண்டுகளை உண்ணுவது தெரிய வந்துள்ளது.

ஓவியத்திற்குள் ஓவியம் 
லியோனார்டோ டா வின்சி வரைந்த ‘விர்ஜின் ஆப் தி ராக்ஸ்’ (‘Virgin of the Rocks’) ஓவியத்திற்குப் பின்னால் மறைந்திருந்த ஓவியம் ஒன்றை லண்டன் இம்பீரியல் கல்லூரி மற்றும் தேசிய அருங்காட்சியக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இதற்குப் பயன்படுத்திய தொழில்நுட்பம் மேக்ரோ எக்ஸ் ரே ஒளிர்வு ஊடு பதிவு (macro X-ray fluorescence (MA-XRF) ஆகும். இது ஓவியங்களுக்குள் இருக்கும் வேதிப்பொருட்களை காட்டுகிறது. இப்போதுள்ள ஓவியத்திற்கு முன்பு ஒரு தேவதையையும் குழந்தை ஏசுவையும் டா வின்சி வரைந்திருந்தது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

பிளாஸ்டிக் எனும் அசுரன்  
இதுவரை உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் பிளாஸ்டிக்கின் அளவு எவ்வளவு இருக்கும் என்று நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? 800 கோடி டன் என்கிறது ஒரு செய்தி. அது மட்டுமல்ல அத்தனை டன்னும் மக்காமல் அப்படியே இருக்கிறதாம்.  எல்லா நாடுகளும் விதிகளை தீவிரமாக அமுல்படுத்தினாலும் இதில் பாதிகூட இன்னும் பத்தாண்டுகளில் மறு சுழற்சி செய்யப்படாது. பிளாஸ்டிக் தொடர்பான பரந்து விரிந்த தடைகள், வரிகள் ஆகியவற்றால் பாதிக்கப்படும் நிறுவனங்களின் சந்தை மதிப்பு 3.5 டிரில்லியன் டாலர்களாம். அதாவது 245 லட்சம் கோடி ரூபாய்கள்.  

ஆழ் கடல் ஆய்வில் ஜெல்லி மீன்கள்

கடலின் ஆழ்பரப்பை ஆய்வு செய்வதில் சில சிரமங்கள் உள்ளன. செயற்கைக் கோள்கள், ரோபோ படகுகள் போன்ற தொழில்நுட்பங்களைக் கொண்டு மேற்பரப்பை ஆய்வு செய்துவிடலாம். ஆனால் 65அடிக்குக் கீழ் உள்ளவற்றைப் பற்றிய புரிதல் குறைவு. அதை ஆய்வு செய்ய கப்பலிலிருந்து கீழிறக்கும் கருவிகளையோ அல்லது தண்ணீரினடியில் இயங்கும் சிறிய ஊர்திகளையோ சார்ந்து இருக்க வேண்டும். முதலாவது அதிக செலவாகும்; இரண்டாவதில் அதனுள் இருக்கும் குறைந்த மின்சக்தியின் காரணமாக ஒரு நாள் மட்டுமே இயக்க முடியும். எனவே கடல் வாழ் ஜெல்லி மீன்களின் உடலில் மிகச் சிறிய மின்னணு சாதனத்தைப் பொருத்தி ஆழ் கடல் பரப்பை ஆய்வு செய்யும் முறையை கண்டறிந்துள்ளனர் கலிபோர்னியா மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள். ஜெல்லி மீன்கள் முதுகெலும்பில்லாத கடல் வாழ் விலங்கினமாகும். அவற்றின் உடலில் செயற்கை துடுப்புகளைப் பொருத்தி அவை வேகமாகவும் இலகுவாகவும் நீந்த வைக்கப்படுகின்றன. அவைகளை மேற்பரப்பில் விட்டு கடலின் எவ்வளவு ஆழத்திற்கு அவைகளால் போகவும் சேகரிக்கப்பட்ட தரவுகளுடன் மீண்டும் மேலே வரவும் முடியும் என்பதை கண்டறிவார்களாம்.  அடுத்த நிலையில் ஜெல்லி மீன்கள் போகும் இடத்தை கட்டுப்படுத்தவும் சிறிய உணர்விகள் மூலம் கடலின் வெப்பம், உப்புத் தன்மை, அமிலத் தன்மை, ஆக்சிஜன் அளவுகள், சத்துப் பொருட்கள் மற்றும் நுண்ணுயிர் கூட்டங்கள் ஆகியவற்றை நீண்ட கால அளவில் கண்டறிவது இவர்களது திட்டங்களாகும். இந்த சோதனையில் 4-8 அங்குலமுள்ள (10-20செ.மீ) மூன் ஜெல்லிமீன்எ (MOON JELLY FISH) ன்றழைக்கப்படும் சாதாரண வகை பயன்படுத்தப்பட்டன. தன் உடல் தசைகளை சுருக்கி விரித்து இவை நீந்துகின்றன. இந்த சோதனையில் பொருத்தப்பட்ட செயற்கை துடுப்பு ஒரு சிப், பேட்டரி மற்றும் மின் முனைகள் கொண்டது. அது மீனின் உடலில் அதிக அளவு துடிப்புகளை உண்டாக்குகிறது. நமது இதய துடிப்பை அதிகரிப்பதற்காக பொருத்தப்படும் பேஸ் மேக்கர் போன்று இது வேலை செய்கிறது. இந்த துடுப்பானது ஒரு அங்குலத்திற்கும் குறைவானது.  ஜெல்லி மீன்கள் அழுத்தத்திற்குள்ளாகும்போது சளி போன்ற ஒரு திரவத்தை சுரக்கும்.ஆனால் இந்த சோதனையின் போது அப்படி நிகழவில்லை. மேலும் செயற்கை துடுப்பை நீக்கிய பிறகும் அவை சாதாரணமாகவே நீந்தின என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள். அதாவது ஜெல்லி மீன்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்கப்படவில்லை என்கின்றனர். இயல்பான நீந்தும் அசைவுகளைக் கொண்ட விலங்குகள் மூலம் சோதனைகள் நடத்தப்படுவதால் நீர்மூழ்கிக் கப்பல்கள் போல் சுற்று சூழலை பாதிக்காது எனவும் எனவே பல தரப்பட்ட சூழல்களையும் கண்காணிக்க முடியும் என்கின்றனர். (ராய்ட்டர் செய்தியிலிருந்து)

;