ஹோசிமின் சிட்டி, பிப்.25- வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் சோசலிச வியட்நாம், தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. நெல் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விளைச்சலில் பெரும் அளவு அதிகரிப்பைக் கண்டுள்ள வியட்நாம், திட்டமிட்ட முறையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வியக்கத்தக்க சாதனைகளைச் செய்துள்ளது. இந்தத் துறைகளில் எட்டப்பட்ட சாதனைகள் உள்நாட்டில் ஏராளமான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியதோடு, ஏற்று மதியில் கணிசமான உயர்வையும் காண உதவி யுள்ளது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியி லும் அதிகரிப்பைக் காட்ட முடிந்திருக்கிறது. 2021 ஆம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையை கனடாவின் சர்வதேச மேம்பாட்டு ஆய்வு மையம் மற்றும் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு ஆகிய இரண்டு நிறுவனங்களும் தயார் செய்தன. இதன்படி, செயற்கை நுண்ணறிவுக்கான தயார் நிலை பற்றிய தரப்பட்டியலில் ஆசியன் நாடுக ளில் ஆறாவது இடத்தையும், உலக அளவில் 62ஆவது இடத்தையும் வியட்நாம் பிடித்தி ருந்தது.
ஓபன்கவ் என்ற மற்றொரு ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வில், பத்து ஆசியன் நாடுகளில் ஆறாவது இடத்தையும், உலக அளவில் 55ஆவது இடத்தையும் வியட்நாம் பிடித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்தத் துறையில் வியட்நாமின் முன்னேற் றமே 2020 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் தொடங்கி யது. 2020இல் 58 ஆயிரம் மின்னணு தொழில் நுட்ப நிறுவனங்கள் வியட்நாமில் இருந்தன. இரண்டே ஆண்டுகளில் கூடுதலாக 5 ஆயிரத்து 600 நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களும் மிகவும் உயரிய தொழில்நுட்பங்களுடன் செயலாற்றி வரு கின்றன. வியட்நாமின் தயாரிப்புகள் என்ற பட்டியலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவை தயார் செய்யப்பட்டுள்ளன. தகவல் தொழில் நுட்பத் துறையில் 10 லட்சம் பேர் வியட்நா மில் பணியாற்றி வருகிறார்கள். தகவல்தொழில் நுட்பப் படிப்பில் பல்கலைக்கழக மற்றும் கல்லூரிகளில் 80 ஆயிரம் பட்டதாரிகள் ஒவ்வொரு ஆண்டும் பயின்று வருகிறார்கள். செயற்கை நுண்ணறிவுக்கான தயார் நிலையில் மூன்று அம்சங்களைப் பிரதான தூண்க ளாகப் பார்க்கிறார்கள். அரசு, தொழில்நுட்பம் மற்றும் தகவல் களஞ்சியம் ஆகியவையே அந்தத் தூண்களாகும். செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஏராளமான முதலீடுகளை வியட்நாம் குவித்து வருகிறது. தொழில்நுட்ப ரீதியாகப் பலப்படுத்திக் கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.
புதிய திட்டம்
அண்மையில் தேசிய மின்னணு மாற்றத் திட்டத்திற்கு வியட்நாம் அரசு ஒப்புதல் அளித்தி ருக்கிறது. 2050 ஆம் ஆண்டுக்குள் அனைத்துத் துறைகளையும் முழுமையாக கணினி மய மாக்கும் திட்டத்தை உருவாக்கி வருகிறார்கள். அடுத்து வரும் ஆண்டுகளில் ஏராளமான மனித வளம் தேவைப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. வருங்காலத்தை மனதில் கொண்டு சுமார் 2 ஆயிரம் வியட்நாம் இளைஞர்கள் பல்வேறு படிப்புகளில் வெளி நாடுகளில் பயின்று வருகிறார்கள். இவர்களில் சுமார் 300 பேர் செயற்கை நுண்ணறிவில் வல்லுநர்களாக உருவாக்கப்படுகிறார்கள். உள்நாட்டிலும் பல பல்கலைக்கழகங்கள் செயற்கை நுண்ணறிவுப் பாடங்களைப் பயிற்றுவித்து வருகின்றன. ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் துறைக்கு ஏராளமான ஆதரவுத் திட்டங்களை வியட்நாம் அரசு செய்து வருகிறது. செயற்கை நுண்ணறி வுத்துறையில் ஆசியாவின் தரப்பட்டியலில் முதல் நான்கு நாடுகளில் வருவதை உடனடி இலக்காக வியட்நாம் நிர்ணயித்துக் கொண்டுள்ளது. வரும் ஆண்டுகளில் ஏராளமான நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, இந்த இலக்கை அடைய முடியும் என்று வியட்நாமின் தகவல்தொழில்நுட்பத்துறை குறித்த ஆய்வுகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.