politics

img

எவ்வித நேர்மையும் அற்ற ஏமாற்றுக் கூட்டம்....

பெட்ரோல் டீசல் விலையை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கிக் கொள்கிறோம் என்று அவர்கள் பேசினார்கள். அதற்கு காரணம் சொன்னார்கள் இந்தியாவில் பெட்ரோல்விலையை அரசு நிர்ணயிப்பதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் அந்த பலன் ஏழை-எளிய மக்களுக்கு சென்று சேர்வதில்லை. அதை செய்வதற்கு இந்த கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வது தான் சரியானது என்று சொன்னார்கள்.சாவர்க்கரின் வாரிசுகளுக்கு கோயபல்ஸ் தான் மிகப்பெரிய ஆதர்சம். இந்தப் பொய்யை அவர்கள் இந்திய மக்களை நம்ப வைத்தார்கள். இடதுசாரிகள் இந்த அரசின் நோக்கத்தையும் அதற்குப் பின்னால் உள்ள  கார்ப்பரேட் நலனையும் முன்வைத்துவாதாடிய போது ஒரு பகுதி படித்த மக்களுமே கூட, கச்சா எண்ணெய்விலை குறையும் போது பெட்ரோல் டீசல் விலை  குறைந்தால் சரிதானே என்று பேசினார்கள்.ஆனால் இப்போது கச்சா எண்ணெய்விலை குறைந்து கொண்டிருக்கும்போதும் தினசரி விடிகிறதோ இல்லையோ 24 மணி நேரத்திற்கு ஒரு விலை உயர்வு என்பதைமோடி அரசாங்கம் ஒரு தவம் போல் செய்து கொண்டிருக்கிறது.

இது தேசத்தை அழிக்கும் தவம். மக்கள் மீது கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்து விடும் தவம்.புலம்பெயர்ந்த தொழிலாளிகளுக்கு கூட 50 நாட்களுக்கு பின்பு தான் இரண்டு மாதத்திற்கு ரேஷன் பொருட்கள் தருகிறேன் என்றுசொன்ன அரசாங்கம்தான் பெட்ரோல், டீசல் விலையை தினசரி விலை ஏற்றுகிறது.இது சாதாரண மக்கள் மீதான மிகப்பெரிய தாக்குதல். இது அத்தியாவசிய பொருள்களின் விலையை உயர்த்தும் .பொதுப் போக்குவரத்துகள் முழுமையாக இல்லாத காலத்தில் சொந்த வாகனத்தை, வாடகை வாகனங்களை பயன்படுத்துவோர் மீது கடும் சுமையை இது ஏற்படுத்தும்.

ஒவ்வொரு நாளும் இந்த விலையை ஏற்றுகிற போது ரிலையன்ஸ் பெட்ரோலியம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் கல்லா நிறைகிறது. அதில் கொஞ்சம் போல கமிஷனை மட்டும் எலக்ட்டோரல் பாண்ட் (தேர்தல் பத்திரம்) மூலமாகவும் இன்னபிற வழிகளிலும்  இவர்களுக்கு கொடுத்துவிடுவது, இவர்களுடைய தேர்தல் செலவுகளை கவனித்துக்கொள்வது என்ற சின்ன கைமாறு செய்தால் போதும், தேசத்தையே அள்ளிக்கொடுத்துவிடுவார்கள்.

கொரோனா காலத்தில் அதைப் பேசாதே இதைப்பேசாதே  என்று சொல்லிக் கொண்டிருக்கிற இந்த அரசாங்கம்தான், இந்தக் காலத்தில் மின்சாரத்தை தனியாருக்கு கொடுப்பதற்கு கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. 41 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதற்கு பணிகளை துவக்கியிருக்கிறார்கள்.ஒரு பக்கம் கொரோனா காலம் அல்லது பொருளாதார நெருக்கடி அல்லது கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் அல்லதுபாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுத்து இருக்கிறோம் அல்லது சீனாவுக்கும் நமக்கும் பிரச்சனை இருக்கிறது; எனவே இந்த காலத்தில்அரசாங்கத்தை எதுவும் விமர்சிக்காதீர்கள் என்று சொல்லிக் கொண்டே இந்த தேசத்தில் நீண்ட நெடிய காலமாக போராடிப் பெற்றஉரிமைகளையும் இந்தியாவின் இறையாண்மையை மீறும்  அட்டூழியங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது சாவர்க்கர் கும்பல் .மக்கள் தங்களை தயார்ப்படுத்திக் கொண்டு போராடவில்லை என்றால் இந்த தேசம் நமது தேசமாக இருக்காது.கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாகும் சாவர்க்கர் கும்பல் யாருக்கு விசுவாசமாக இருக்கிறதோ அவர்களின் மேய்ச்சல் காடாகவும் மாறிப்போகும்.

===க.கனகராஜ்===

மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

;