politics

மோடி - எடப்பாடி ஆட்சிகளுக்கு முடிவு கட்டுவோம்

சென்னை, ஏப். 16-மோடி - எடப்பாடி ஆட்சிகளுக்கு முடிவு கட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று தமிழக வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் தமிழக வாக்காளர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள் வருமாறு:மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு கடந்த ஐந்தாண்டுகளில் இந்திய திருநாட்டைமுற்றிலும் சீரழித்துள்ளது. அரசியல் சாசனத்தின் அடித்தளத்தின் மீதும் கொடூரத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மதச்சார் பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி ஆகிய விழுமியங்களின் மீது அடுத்தடுத்து தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஐந்தாண்டு காலம் சாதித்தவைகளை சொல்லி வாக்கு கேட்காமல் ராணுவ வீரர்களின் உயிர்த் தியாகத்தில் மோடிஅரசு ஒளிந்து கொள்கிறது. தங்களது ஆட்சியில் மேற்கொண்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து மறந்தும் மோடி பேச மறுக்கிறார். ரபேல் விமான பேரத்தில் இந்தியாவின் பாதுகாப்பை காவு கொடுத்து ஊழல் புரிந்து விட்டு நான் தான் ‘காவல்காரன்’ என பசப்பி வருகிறார்.விவசாய விளை பொருட்களுக்கு உற்பத்திச் செலவைப் போல ஒன்றரை மடங்கு கூடுதல் விலை தருவோம் என்றவர்கள் விவசாயத் துறைக்கே விஷம் வைத்து கொல்லப் பார்க்கிறார்கள். விவசாயிகள் தற்கொலை என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. உரம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்த நிலையில், விளை பொருளுக்கோ நியாய விலை இல்லை. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, மறுபக்கம் விவசாயிகளுக்கு சல்லிக்காசு கூட தள்ளுபடி இல்லை. கல்விக்கடன் தள்ளுபடியும் இல்லை.


பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி போன்ற நடவடிக்கைகளால் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்களுக்கு மூடுவிழா நடத்தப்பட்டுள்ளது. புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப் படவில்லை என்பது மட்டுமல்ல, ஏற்கனவே வேலையில் இருந்தவர்களும் வீதிக்கு விரட்டப் பட்டுள்ளார்கள். 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலை பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. 100 நாள் வேலை முடக்கப்பட்டு நிற்கிறது.ரூ.380 ஆக இருந்த கேஸ் சிலிண்டர் விலை ரூ. 900 அளவிற்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல் - டீசல் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து ஏழை-எளிய மக்கள் மட்டுமின்றி, நடுத்தர மக்களும் வாழ்க்கைச் சக்கரத்தை சுற்ற முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள். பண புழக்கம் முடங்கி இந்திய பொருளாதாரம் சரிந்துவிட்டது.தமிழ் மொழியின் வளர்ச்சியை திட்டமிட்டு தடுக்கும் மோடி அரசு இந்தி சமஸ்கிருதத்தை வலிந்து திணிக்கிறது. கீழடி, ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தால், தமிழ் தொல்குடியின் தொன்மையை உலகம் அறிந்து கொள்ளும் என்பதால், அந்த ஆய்வுகளின் மீது இருள் சூழச் செய்ததை தமிழ் மக்கள் ஒரு போதும் மறக்கமாட்டார்கள்.


மோடி அரசின் ஊழல்கள் அனைத்திற்கும் உச்சமாக விளங்குகிறது ரபேல் போர் விமான பேர ஊழல். கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டின் வளம் அனைத்தையும் திறந்துவிட்ட மோடி அரசு, சாமானிய மக்களின் கடைசி கையிருப்பை யும் களவாடிவிட்டது.சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் நலிந்த பிரிவினருக்கு எதிராக துல்லியத் தாக்குதல் நடத்தியது மோடி தலைமையிலான அரசு. அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறை வேற்ற வக்கில்லாமல் கடைசி நேரத்தில் தேசத்தின்பாதுகாப்பையே தேர்தல் சதுரங்கத்தில் பகடைக்காயாக உருட்டிவிட்டு, பல் இளித்து இருக்கிறது மோடி அரசு.உயர்கல்வி நிலையங்கள் அனைத்தும் மதவெறியர்களால் நிரம்பி வழிகின்றன. மாநிலங்களின் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் காட்டாட்சி தர்பாருக்கு முடிவு கட்டியாக வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத தேசமாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது. பெண்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்க விடாமல், தடுக்கும் வகையில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை கிடப்பில் போட்டுள்ளது மோடி அரசு.ஜல்லிக்கட்டு போராட்டம் துவங்கி, நீட் தேர்வு, எட்டு வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன்-மீத்தேன் திட்டங்கள், ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, இயற்கை பேரிடர்களுக்கு உரிய நிவாரண நிதி ஒதுக்க மறுப்பது என தமிழகத்திற்கு மோடிஅரசு வன்மத்துடன் இழைத்துள்ள வஞ்சகங்கள்எண்ணிலடங்கா. இப்போதும் நீட் தேர்வு நீடிக்கும், 8வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர்கள் முதலமைச்சர் முன்னிலையிலேயே அறிவித்துள்ளார்கள். இதற்கு முதலமைச்சரோ வாய்திறக்கவில்லை.


பதவி நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மோடி அரசின் அத்தனை துரோகங்களுக்கும் துணை நின்றது மாநில அதிமுக அரசு. பொதுமக்கள், ஆசிரியர், அரசு ஊழியர் என அனைத்துப் பிரிவு மக்களின் போராட்டத்தையும் கொடூரமாக ஒடுக்கியது. முதலமைச்சர் துவங்கி அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்குகள் அணி வகுத்து நிற்கின்றன. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவ ங்கள் மக்களை கதிகலங்கச் செய்துள்ளன.இரண்டாண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் உள்ளாட்சி அமைப்புகள் நிலை குலைந்துள்ளன. இந்நிலையில் சொத்துவரி, குப்பை வரி, குடிநீர் வரி பல மடங்கு உயர்த்தப் பட்டுள்ளன.மத்தியிலும் மாநிலத்திலும் அநியாயக் காரர்களிடமிருந்து அதிகாரத்தைப் பறித்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்த தமிழக மக்களுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்புதான் இந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகும். வரலாறு முழுவதும் மக்கள் சக்திதான்மாற்றத்தை, முன்னேற்றத்தை சாத்தியமாக்கி யுள்ளது. மக்கள் விரோத ஆட்சி நடத்துவோரை தண்டிக்கவும், நியாயத்தை நீதியை நிலை நிறுத்தவும் இந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பணிவோடு கேட்டுக் கொள்கிறோம்.

;