politics

img

எஸ்.பி.வேலுமணியும், வானதிசீனிவசனும் இணைந்து  தொழிலை முடக்கி மன உலைச்சலை ஏற்படுத்தியதாகக் கோவை பாஜக பிரமுகர் பரபரப்பு புகார்

கோவை, பிப்.15-

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், பாஜக எம்எல்ஏவுமான வானதி சீனிவாசனும் இணைந்து கோவை பாஜக பிரமுகரின் தொழிலை முடக்கி ரூ 1.5 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதோடு, கடும்  மனஉளைச்சலைக்கு உள்ளாக்கியதாகப்   புகார் அளித்துள்ளார். இது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

கோவை காந்திபுரம் 100 அடி ரோடு 1-ஆவது வீதியைச் சேர்ந்தவர் ரவிசங்கர் (54). காடேஷ்வரா என்ற பெயரில் கேபிள் நிறுவனம் நடத்தி வருகிறார். பாஜகவில் விவசாயிகள் பிரிவு துணைச் செயலாளராக இருந்துள்ளார்.  இவர் முதலமைச்சர் தனிப்பிரிவு, கோவை ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் மீது புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

நான் கோவையில் 1990ம் ஆண்டு முதல் கேபிள் தொழில் செய்து வருகிறேன்.  கடந்த 30 ஆண்டுகளாக பாஜ கட்சியிலிருந்து கொண்டு பல பொறுப்புகளையும் வகித்து இருக்கிறேன். 2017-ம் ஆண்டு குன்னூரைச் சேர்ந்த பாரூக் என்பவரிடம் சிடிஎன் கம்பெனி டிஷ்ட்ரிபியூட்டர் எடுத்து செட்டாப் பாக்சை கோவையில் உள்ள கேபிள் ஆப்ரேட்டர்களுக்கு வினியோகம் செய்து வந்தேன். பாஜகவில்  சீனியர் என்ற ஒரே காரணத்தால் பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் என் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியிலிருந்தார்.  அவருக்கு அடிபணியாத காரணத்தால், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உதவியுடன் கோவை மாநகராட்சியைப் பயன்படுத்தி என்னைப் பழிவாங்கத் திட்டமிட்டனர். 

அதன்படி  கோவையில் அனைத்து பகுதிகளிலும் உள்ள எனது காடேஷ்வரா கேபிள் நிறுவன வயர்களை கடந்த 28.09.2017 அன்று ஜேசிபி இயந்திரம் மூலமாக 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் முன்னிலையில், காவல்துறை உதவியுடன் கேபிள் மாபியா கும்பலுடன் சேர்ந்து சட்டத்திற்கு புறம்பாக  ரூ.75 லட்சம் மதிப்பிலான எனது கேபிள் நிறுவன அனைத்து ஒயர்களையும் துண்டு, துண்டாக வெட்டி எடுத்துச் சென்று விட்டனர்.

அப்போது பாஜ கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், டிடிவி தினகரன் ஆகியோர் தலையிட்டும் இவர்கள் செவிசாய்க்கவில்லை. அப்போது நான் உயர்நீதிமன்றத்திற்குச் சென்று   கோவை மாநகராட்சியிடம் உள்ள எனது பிராபர்ட்டிகளை எனக்கு வழங்க வேண்டும் என 11.10.2017 உத்தரவு பெற்றேன்.  ஆனால் மாநகராட்சி  நீதித்துறை உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை. எனது நிறுவன ஒயர்களை கட் செய்யும்போது எதிர்த் தரப்பு கேபிள் ஆபரேட்டர்களிடமிருந்து பல லட்சம் கைமாறாக வாங்கியிருக்கின்றனர்.

மாநகராட்சி எனது நிறுவன ஒயர்களை கட் செய்ய அதிகாரம் உள்ளதா? எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது மாநகராட்சிக்கு கேபிள் சம்பந்தமாக எந்த உத்தரவும் வழங்க அதிகாரம் இல்லை என 20.09.2021 அன்று பதில் அளித்துள்ளனர். மேலும் நான் கேபிள் நடத்தும் நிறுவனம் மூலமாக மாநகராட்சிக்கு ரூ.10 ஆயிரம் டெபாசிட் கட்டியிருந்தேன்.  அதனைத் திருப்பி தர இயலாது எனத் தெரிவித்து விட்டனர். இதிலிருந்தே மாநகராட்சி உள்நாக்கோடு செயல்பட்டிருப்பது உறுதியாகிறது.

இப்படி பல்வேறு வழிகளில் வானதி சீனிவாசனும், எஸ்.பி.வேலுமணியும் இணைந்து  அதிகாரத்தைப் பயன்படுத்தி நியாயமாகத் தொழில் நடத்திக் கொண்டிருந்த எனது தொழிலை முடக்கிவிடட்னர்.  இதனால் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஆகிவிட்டது. நான் கடனாளியாகி விட்டேன்.

எனவே, தகுந்த விசாரணை மேற்கொண்டு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மற்றும் மாபியா கேபிள் ஆப்ரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எனது பொருட்களை மாநகராட்சியிடமிருந்து மீட்டு இழப்பீடு வாங்கி தர வேண்டும்.கேபிள் மாபியா கும்பல்கள் கோவை கேபிள் ஆபரேட்டர்களிடம் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேபிள் லைன்களை மிரட்டி வாங்கிக் கொண்டனர். அதில் எனது கேபிள்களும் அடங்கும். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகாரில் தெரிவித்துள்ளார். 

;