politics

img

கொரோனாவும் சீனாவும்

பேரா. விஜய் பிரசாத் 

இந்திய வரலாற்றியலாளர், 
முதன்மை ஆசிரியர், லெப்ட் வேர்டு புக்ஸ், இயக்குநர், டிரைகான்ட்டினென்டல் 
சமூக ஆராய்ச்சிக்கழகம்.

டு ஜியாவோஜுன்

சர்வதேச அரசியல் ஆய்வாளர், 
மொழியியல் மற்றும் சமூகவியல் ஆய்வாளர், ஷாங்காய்.

வெய்யான் ஜூ

வழக்கறிஞர், 
சமூக, அரசியல்
 ஆய்வாளர், பெய்ஜிங்.

தமிழில்:

எம்.கிரிஜா

 

2020 மார்ச் 25    

 

ஜி-7 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் அறிக்கை ஒன்றை வெளியிடத் தவறினர். இந்த அறிக்கையைத் தயாரிப்பதற்கான பொறுப்பு, ஜி7 நாடுகளின் தற்போதைய தலைவராக உள்ள அமெரிக்காவிடமே கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அமெரிக்கா அளித்த அறிக்கை இதர பல உறுப்பினர்களுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. இந்த அறிக்கையில் “வுஹான் வைரஸ்” என்ற சொற்றொடர் அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டிருந்தது. 

மேலும், உலகளாவிய தொற்றுநோய்க்கு சீன அரசே பொறுப்பாகும் என அது வலியுறுத்தியிருந்தது. இதற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் “சீன வைரஸ்” என்ற சொற்றொடரை பயன்படுத்தியிருந்தார். மேலும், டிரம்ப்பின் ஊழியர்களில் ஒருவர் இகழ்ச்சியாக “குங்ஃப்ளூ” என்ற வார்த்தையை பயன்படுத்தியதாகவும் சொல்லப்பட்டது. “சீனாவில் ஏன் (வைரஸ்) தோன்றியது.  ஏனெனில், வௌவால்களையும், பாம்புகளையும் வேக வைக்காமல் பச்சையாக சாப்பிட அளிக்கிற சந்தைகள் அங்குதான் இருக்கிறது” என ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி அலைவரிசையின் தொகுப்பாளர் எவ்வித ஒளிவு மறைவின்றி தனது இனவெறியை வெளிப்படுத்தினார்.  சீனாவிற்கு களங்கம் ஏற்படுத்துகிற வகையில் டிரம்ப் நிர்வாகம் நடந்து கொள்வதன் விளைவாக ஆசிய நாட்டைச் சார்ந்தவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் அமெரிக்காவில் அதிகரித்துள்ளன. 

கொரோனா வைரஸ் ஐரோப்பிய அல்லது வட அமெரிக்க நாடுகளைத் தாக்குவதற்கு நீண்ட காலம் முன்னதாகவே உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் – ஜெனரல் டெட்ரோஸ் அதநோம் கெப்ரெயேசஸ், பிப்ரவரி 14ம் தேதியன்று உரையாற்றுகிறபோது ‘நமக்குத் தேவை ஆதரவே அன்றி வெறுப்புணர்வு அல்ல” என வேண்டுகோள் விடுத்தார்.  வைரஸ்சுக்கு சீனாவைக் காரணம் காட்டி பழி தூற்றுவதற்கான உந்துதல் இருக்கும் என கெப்ரெயேசஸ்சுக்குத் அப்போதே தெரிந்திருந்தது. இன்னும் சொல்லப் போனால், மிகவும் அருவருக்கத்தக்க வகையில் சீனாவைத் தாக்குவதற்கு வைரஸ் ஓர் ஆயுதமாகப் பயன்படும்.  உலகளாவிய தொற்றுக்கு எதிரான நடவடிக்கையில் சர்வதேச மனிதாபிமானத்துடனான அணுகுமுறையையும், குறுகிய நோக்கத்தோடு கூடிய மதவெறி பிடித்த, அறிவியலுக்கு ஒவ்வாத அணுகுமுறையையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்பதையே ‘நமக்குத் தேவை ஆதரவே அன்றி வெறுப்புணர்வு அல்ல” என்று அவர் முன்வைத்த முழக்கம் நோக்கமாகக் கொண்டிருந்தது.

 

கோவிட் வைரஸ்சின் தோற்றுவாய்கள்

சார்ஸ்-கோவ்-2 என அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்ட வைரஸ், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிற இதர பல வைரஸ்களைப் போன்றே பரவியது. இந்த வைரஸ் எங்கிருந்து பரவியது என்பதில் உறுதியான கருத்தொற்றுமை இன்னமும் ஏற்படவில்லை.  சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரத்திலுள்ள ஹுனான் பகுதியின் மேற்கு எல்லையில் உள்ள கடல் உணவுகளின் மொத்த விற்பனைச் சந்தையில் இது தோன்றியதாக சொல்லப்படுகிறது.  வனப்பகுதிகளுக்குள்ளும், கடலோரப் பகுதிகளுக்குள்ளும் விவசாயத்தை விரிவுபடுத்துவதால், சார்ஸ்-கோவ்-2 போன்ற நோய்க்கிருமிகள் மனிதர்களை நெருங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்பதே இதன் மையமான பிரச்சனையாக உள்ளது.

 தற்போது பரவியுள்ள இந்த வைரஸ் மனிதகுலத்திற்கு மிக அபாயகரமான ஒன்று என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. எனினும், இவ்வாறு பரவுவது இதுபோன்ற வைரஸ்கள் மட்டுமல்ல. சமீபகாலத்தில், ஹெச்1என்1, ஹெச்5என்எக்ஸ், ஹெச்5என்2 மற்றும் ஹெச்5என்ல போன்ற பல்வேறு பறவைக் காய்ச்சல் நோய்க்கிருமிகளை நாம் கண்டுள்ளோம். ஹெச்5என்2 வைரஸ் அமெரிக்காவில் தோன்றியது என்றாலும் கூட, அது “அமெரிக்க வைரஸ்” என்றழைக்கப்படவில்லை. மேலும், இதற்கு அமெரிக்காவை பழித்துரைக்க யாரும் முயலவில்லை.

இதுபோன்ற வைரஸ்களுக்கு இவ்வுலகின் எந்தவொரு நாடும் தனிப்பட்ட முறையில் பொறுப்பல்ல என்பதால் இவற்றை விவரித்திட அறிவியல்பூர்வமான பெயர்களைப் பயன்படுத்துகின்றன. காடுகளுக்குள் மனிதர்கள் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்வது குறித்தும், விவசாயம் மற்றும் நகர்ப்புறம் சார்ந்த மனித சமூகத்திற்கும் வனவிலங்குகளுக்கும் இடையேயான சமநிலை குறித்தும் அடிப்படையான கேள்வியை இதுபோன்ற வைரஸ்களின் பரவல் எழுப்புகிறது.  

வைரஸ்க்கு பெயரிடுவது சர்ச்சைக்குரிய விஷயமாகும்.   1832-ல் காலரா நோய் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டிருந்த இந்தியாவில் தோன்றி ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவியது.  அப்போது அது “ஆசிய காலரா” என்றழைக்கப்பட்டது. தாங்கள் ஜனநாயகவாதிகளாக இருப்பதால் சர்வாதிகார நோயான காலராவிற்கு பலியாகமாட்டோம் என பிரெஞ்சு நாட்டைச் சார்ந்தவர்கள் கருதினர். காலரா நோயானது நுண்ணுயிர்களையும், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவினுள் நிலவிய சுகாதார நிலையையும் சார்ந்திருந்தது. இவ்விஷயத்தில் அந்நாடுகளைப் போன்றே இருந்த பிரான்ஸ் காலராவால் அழித்தொழிக்கப்பட்டது. 

(1848ல் காலரா நோய் அமெரிக்காவைத் தாக்கியபோது, பொது குளியல் இயக்கம் தோன்றியது.)

முதல் உலகப் போரில் ஈடுபட்ட நாடுகள் பெரும்பாலானவற்றில் பத்திரிகைகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்த காலத்தில் தோன்றிய ஃப்ளூ நோய்க்கு, ஸ்பெயின் நாட்டின் பெயர் சூட்டப்பட்டு “ஸ்பானிஷ் ஃப்ளூ” என்றழைக்கப்பட்டது. போரில் ஈடுபடாமல் இருந்த ஸ்பெயின் நாட்டின் ஊடகங்கள் ஃப்ளூ குறித்த செய்திகளை பரவலாக வெளியிட்டன. எனவே, இத்தொற்றுக்கு ஸ்பானிஷ் ஃப்ளூ என்ற பெயர் வந்தது. உண்மையில் இந்நோய் அமெரிக்காவில் தோன்றியது. அந்நாட்டின் ராணுவ தளமான கன்சாஸ்சில் கோழிகளிடமிருந்து ராணுவ வீரர்களுக்கு பரவியதாக சான்றுகள் நிரூபித்தன.

அங்கிருந்து பின்னர் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டிருந்த இந்தியாவிற்குப் பரவியது. அந்நோய்க்கு உலகம் முழுவதிலும் பலியானவர்களில் 60 சதவீதத்தினர் இந்தியர்களாக இருந்தனர். இருந்தபோதும், இந்நோய் “அமெரிக்க ஃப்ளூ” என ஒருபோதும் அழைக்கப்படவில்லை.  மேலும், அமெரிக்க நாட்டில்தான் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு இந்நோய் பரவியது என்பதால் அந்நோய் தொடர்பான செலவுத் தொகையை அமெரிக்காவிடமிருந்து எந்தவொரு அரசோ, இந்திய அரசோ கோரவில்லை. 

 


 

;