politics

img

தோல்வியின் விளிம்பில் ‘காஸ்ட்லி’ வேட்பாளர்

வேலூர் தொகுதி நிலவரம் தோல்வியின் விளிம்பில் ‘காஸ்ட்லி’ வேட்பாளர்

திமுக வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் செல்லுமிடமெல்லாம் மக்கள் கூட்டம்

வேலூர் மக்களவைத் தொகுதி 1951 முதல் தேர்தலை சந்தித்து வருகிறது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ்  5 முறையும் திமுகவும், அதன் தோழமைக் கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஐந்து முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த முறையும் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி களம் காண்கின்றது. இந்த அணியின் சார்பில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் டி.எம்.கதிர்ஆனந்த் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

போணியாகாத ‘காஸ்ட்லி’ வேட்பாளர்

1984 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஏ.சி. சண்முகம், பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி புதிய நீதிக் கட்சியை துவக்கினார். தனித்து நின்று தனிமரமானார். பிறகு, 2014 ஆம் ஆண்டு தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டும் போணியாகவில்லை. கடந்த முறை தோல்வி அடைந்த அதிமுகவிடமே சரணடைந்து இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில், தொகுதி முழுக்க கல்லூரி ‘மாணவர்கள்’ மூலம் நடத்திய ஆய்வு முடிவுகள் தனக்கு சாதகமாக இருக்கிறது என தனக்குத்தானே அறிவித்துக் கொண்டாலும், கடந்த முறை வெற்றி பெற்ற அதிமுக எம்பி செங்குட்டுவன் தொகுதி பக்கமே தலையை காட்டாதது ‘கரன்சியில் காஸ்ட்லி’ வேட்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் ஏ.சி. சண்முகத்திற்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் அமைச்சர்கள் சகிதமாக அதிமுக மேலிடம் முகாமிட்டுள்ளனர்.

மறுபுறம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர், மக்களவைக்குழு தலைவர், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.ஆர். பாலு தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் க.பொன்முடி, ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, எ.வ.வேலு,  ஈரோடு முத்துச்சாமி ஆகியோர் தலைமையில் தொகுதி வாரியாக பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டு தினமும் வாக்காளர்களை சந்தித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதிதாக பொறுப்பேற்று இருக்கும் இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் தொகுதி முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். செல்லும் இடமெல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் வரவேற்பு கொடுத்தனர். ஸ்டாலின் பங்கேற்ற பிரச்சார பொதுக் கூட்டங்களில் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்றது களப்பணியில் திமுகவின் பலத்தை  அதிகரித்திருக்கிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் தனது வழக்கமான பாணியில், வேட்பாளர் கதிர்ஆனந்துடன் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் நிர்வாகிகளுடன்  மக்களோடு மக்களாக நடந்து சென்று டீக்கடை, காய்கறி கடைகள், சிறு வணிகர்கள், பேருந்து பயணிகள், ஆட்டோ, இருசக்கர வாகன ஓட்டிகளிடம் வாக்கு கோரியதும் கிராமங்களில் வீடுவீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் செய்ததும் தொகுதி மக்களிடம் வரவேற்பை பெற்றதோடு ஆதரவும் பெருகியிருக்கிறது. டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் ஆம்பூர், குட்டி சிவகாசியாக பார்க்கப்படும் குடியாத்தம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றதோடு அதிமுகவிடம் இருந்து கைப்பற்றியது திமுகவினருக்கு தேர்தல் களத்தில் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சொந்தப்பணத்தில் ...
மத்திய அரசு கொண்டு வந்த சரக்கு சேவை வரி விதிப்பால்  (ஜிஎஸ்டி) பீடி, கைத்தறி, தீப்பெட்டி, தோல் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வேலையின்றி பரிதவித்து வரும் தொழிலாளர்கள், ஆலை உரிமையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் ஆளும் கட்சி மீது கடும் கோபத்தில் இருப்பதை காண முடிகிறது. இந்த பகுதியில் நடந்த தேர்தல் பரப்புரையின்போது இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,”மத்திய அரசு விதித்திருக்கும் 28 விழுக்காடு ஜிஎஸ்டி வரிவிதிப்பை குறைப்பதற்கு முயற்சிப்போம்” என நழுவினார். இது போன்ற நழுவல்களால் “சொந்தப் பணத்தில் சூனியம் வைத்துக்கொண்டது” போன்ற கதையாக மாறியுள்ளது இரட்டை இலை வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தின் நிலை.

முகம் சுளிக்க வைக்கும் அமைச்சர்கள்
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி ஆந்திரா எல்லையை ஒட்டி உள்ளது. பாலாற்றின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகளை ஆந்திர அரசு தன்னிச்சையாக கட்டுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டிய தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. எந்த இடத்தில் அணை கட்டினாலும் 5 அடி உயரத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்பது பொதுவான சட்டவிதி ஆகும் ஆனால் ஆந்திர அரசு புல்லூர்  அருகே கனக நாச்சியப்பபுரத்தில் 12 அடி உயரத்திற்கு அணையை கட்டியிருக்கிறது. அதைத் தடுத்து நிறுத்தாமல் போனதன் விளைவு, மேலும் பாலாறு கிராமம் அருகே 22 அடி உயரம் கொண்ட கக்குந்தி அணையை 40 அடிக்கு உயர்த்திக்கட்ட  உள்ளனர். ஆளுங்கட்சித் தரப்பில் அந்தத் தொகுதியின் பொறுப்பாளரான பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினர் செய்தியாளர்கள்  அப்போது அவர், ‘கடிதம் எழுதியிருக்கிறோம். அதற்குமேல் என்ன செய்ய வேண்டும் கத்தி எடுத்து  குத்த வேண்டுமா?’ என அவர் ஆவேசம் அடைந்தது தொகுதி மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. 

ஒட்டாத தாமரையும்.. புளிக்கும் மாம்பழமும்
இவை ஒருபுறமிருக்க, தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று முழக்கமிட்டவர்களுக்கு தமிழக மக்கள் தகுந்த பாடத்தை புகட்டியதால், அந்த கட்சித் தலைவர்கள் வேலூர் பக்கமே தலை காட்டவில்லை. வேலூர் தொகுதியை தங்களுக்கு ஒதுக்கவில்லை என்ற கோபத்தில் உள்ள பாமக தொண்டர்களை சமாதானப்படுத்த ஒருநாள் மட்டுமே அன்புமணி தொகுதிக்குள் வந்து போயிருக்கிறார். ஆனாலும், அக்கட்சித் தொண்டர்கள் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று ஏ.சியார் புழுக்கத்தில் புலம்பிக் கொண்டிருக்கிறார்.

வேலூரில் இருந்து சி. ஸ்ரீராமுலு

 


 

;