politics

img

காலத்தை வென்றவர்கள் : எழுத்து வேந்தர் தோழர் இ.எம்.எஸ்.... (மார்க்சியப் பேரறிஞர் இ.எம்.எஸ். நினைவு நாள்)

“அவர் பிறந்தது செல்வச் செழிப்புமிக்க பெருநிலக்கிழார் குடும்பத்தில். ஆனால், இறுதிவரை சாமானியரைப் போலவே வாழ்ந்துவந்தார். இந்த எளிமை, லட்சிய மனத்தில் எதார்த்த நிழல்.அவருடைய உருவமே எளிமையானது. பேச்சும் அப்படியே.
ஆனால் தோற்றத்துக்கு மாறானது அவருக்கு உள்ளே இருந்த ஞானம். அது அபூர்வமானது-அசாதாரணமானதும்கூட. சாதாரண உருவத்துக்குள் அசாதாரண உள்ளம்!

தமது கடைசி நாள்களில் கட்சி ஏற்பாடு செய்த வாடகை வீட்டில் வசித்தார். அரசியலுக்கு வந்த பிறகு ‘தியாகங்கள்’ அதிகரிக்க, அதிகரிக்க சொத்துக்கள் குவிந்து கொண்டே போகக்கூடிய இப்போதைய நவீன அரசியல்வாதிகளின் உலகில் எளிய தோழராகவே வாழ்ந்துகாட்டினார் நம்பூதிரிபாட்.”

1998-ம் ஆண்டு மார்ச் 19 அன்று தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் காலமானபோது அவரைப் பற்றி தினமணி ஏடு இவ்வாறு போற்றிப் புகழ்ந்து தலையங்கம் எழுதியிருந்தது.மார்க்சிய ஞானியாகிய எழுத்து வேந்தர் இ.எம்.எஸ்.தமது வாடகை வீட்டில் அமர்ந்தபடி பத்திரிகைகளுக்குக் கட்டுரை தருவதற்காக கட்டுரை வாசகங்களைத் தமதுஉதவியாளர்க்குச் சொல்லிக் கொண்டிருந்தார். இரண்டுகட்டுரைகள் முடிந்துவிட்டன. மூன்றாவது கட்டுரையொன்று தேசாபிமானிக்குத் தரவேண்டும். கட்டுரை வாசகங்களை உதவியாளர்க்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார். திடீரென்று அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. உடன் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இ.எம்.எஸ் இறந்துவிட்டார்!தமது இறுதி மூச்சு நிற்கும்வரை - 89 வயதுவரை தேசத்தின், உழைக்கும் வர்க்கத்தின் நலன் குறித்தே சிந்தித்த அந்த மகத்தான தலைவர் கடைசியாக எழுதிய கட்டுரையின் தலைப்பு “தொங்கு மக்களவை - வர்க்க அரசியல் கண்ணோட்டத்தில்”.

வாழ்க்கையில் தடம்பதித்தவை
இ.எம்.எஸ்.1909 ஜூன் 13 அன்று ஏலங்குளம் என்ற ஊரில் பிறந்தார். தந்தை பரமேஸ்வரன் நம்பூதிரிபாட், தாயார் விஷ்ணுதத்தா. திருச்சூர் செயின்ட் தாமஸ் கல்லூரியில் பி.ஏ.படிக்கும்போது சட்டம் மறுப்பு இயக்கத்தில் பங்கேற்பதற்காக கல்லூரியிலிருந்து வெளியேறினார். தோழர் பி.கிருஷ்ணபிள்ளை முதலானோருடன் சேர்ந்து1934-ல் கேரளா காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை உருவாக்கினார். 1934 முதல் 1940 வரை காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் அகில இந்திய இணைச்செயலாளராகப் பொறுப்பு வகித்தார். 1934-லும்,1938-40-லும் கே.பி.ஸி.ஸி. செயலாளரானார். கேரளத்தில் 1937-ல் உருவானகம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது குழுவில் உறுப்பினரானார். 1939-ல் கேரளத்தில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்கிளையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளையாக மாற்றுவதில் மிக முக்கிய பங்கு வகித்தார். 1941-ல் இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரானார். 1950-ல் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரானார். 1953 முதல் 1956 வரை கட்சியின் செயல் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்தார். 1962-63ல்கட்சியின் பொதுச்செயலாளரானார். 1964-ல் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அதன் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரானார். 1978 முதல் 1991 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகச் செயல்பட்டார். தொடர்ந்து, அவர் காலமாகும் வரை கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகச் செயல்பட்டார்.

‘மார்க்சிஸ்ட் ஸம்வாதம்’ என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும், தேசாபிமானி நாளிதழின் முதன்மை ஆசிரியராகவும், ஏ.கே.ஜி.ஆய்வு மையத்தின் இயக்குநராகவும் பல நிலைகளில் அவர் செயல்பட்டார். 1939-ல் அன்றையசென்னை சட்டமன்றத்திற்கும், 1957, 1960, 1965, 1967,1970, 1977 ஆகிய ஆண்டுகளில் கேரள சட்டமன்றத்திற்கும் இ.எம்.எஸ். தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957-59லும், 1967-69லும் கேரள முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தார். 1998மார்ச் 19 அன்று தோழர் இ.எம்.எஸ்.காலமானார். 

எழுதியவை எண்ணற்றவை
இ.எம்.எஸ். இளம் வயதில் முதலாவதாக எழுதியதுஒரு சிறுகதை! வடக்குக் கேரளத்தின் நாயர் சமூகத்தின்சார்பில்  கண்ணூரிலிருந்து வெளிவந்த “ஸ்வதேசாபிமானி”என்ற மாத இதழில் இவரது சிறுகதை வெளிவந்தது. திருச்சூர் செயின்ட் தாமஸ் கல்லூரியில் படிக்கிற காலத்தில்கல்லூரி மாத இதழில் நிறைய கட்டுரைகள் எழுதினார். அவற்றுள் ஒன்று “மலையாள இலக்கியமும் பத்திரிகைப் பணியும்” என்ற கட்டுரை. இ.எம்.எஸ். முதன்முதலாக எழுதிய நூலின் பெயர் “ஜவகர்லால் நேரு”. இவர் எழுதியமிகப்பெரிய நூல்  “இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு”-1148 பக்கங்கள். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலையாள வாரஇதழ் “சிந்தா” வின் கேள்வி-பதில் பகுதியில் பிரமிப்பூட்டும்விதத்தில் தமது அரசியல்-கட்சி ஸ்தாபனப் பணிகளுக்கிடையே இடைவிடாமல் ஒவ்வொரு வாரமும் பல ஆண்டுகள் வாசகர்களின் பலவிதமான கேள்விகளுக்குத்  தொடர்ந்து பதில்கள் எழுதியுள்ளார் இ.எம்.எஸ்.! இவற்றையெல்லாம் தொகுத்து வெளியிட்டால் 400 பக்கங்கள் கொண்ட 13 தொகுதிகள் வருமாம்!தோழர் இ.எம்.எஸ். எழுதிய நூல்கள் ஏராளம் என்பதுடன் பத்திரிகைகளுக்கு எழுதிய கட்டுரைகள் எண்ணற்றவை. கட்டுரைகள் தொகுப்பு நூல்களும் பல உண்டு. கேரளம் மலையாளிகளின் தாய் நாடு. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு, தன்வரலாறு, மார்க்சிசம்-லெனினிசம் ஒரு பாடப் புத்தகம், கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி, காந்தியிசமும் மார்க்சிசமும் மலையாள இலக்கியமும், மார்க்ஸ்-ஏங்கெல்ஸ்-லெனின் ஆய்வுலகம்: ஒரு முகவுரை, ஒருஇந்திய கம்யூனிஸ்ட்டின் நினைவுக் குறிப்புகள், முன்னாள்முதலமைச்சரின் நினைவுக் குறிப்புகள், வாசிப்பின் ஆழங்களில், இந்திய சுதந்திரமும் அதற்குப் பிறகும், காலத்தின்றெ நேர்க்குப் பிடிச்ச கண்ணாடி ஆகியவை இ.எம்.எஸ்.-ஸின் முக்கிய நூல்கள். “தேசாபிமானி வாரிக”என்ற வார இதழில் இ.எம்.எஸ்.டயரி என்ற பகுதியில் இ.எம்.எஸ்.எழுதிய கட்டுரைகள் மூன்று தொகுதிகளாகத் தொகுத்து வெளியிடப்பட்டன.  ஆங்கிலத்தில் இவர் எழுதிய கட்டுரைகள் தனி. இ.எம்.எஸ்.-ஸின் கட்டுரைகள் அனைத்தும் அரசியல்,தத்துவம், கட்சி ஸ்தாபனம், சமூகம், கலை-இலக்கியம், பத்திரிகை, விவாதம், விமர்சனம் மொழியாக்கம் எனப் பல துறைகள் சார்ந்தவை. சகல துறைகளையும் தழுவிய மிக விசாலமான சிந்தனை அவருடையது. கார்ல் மார்க்ஸின் “மூலதனம்” பெருநூலின் ஒருபகுதி உள்பட பல சமூக அறிவியல் நூல்களையும்  மொழியாக்கம் செய்துள்ளார். மொழிபெயர்ப்புக் கலை பற்றிய ஒரு கட்டுரையேகூட இ.எம்.எஸ்.எழுதியுள்ளார். 

நினைவில் ஏற்றவேண்டிய சிந்தனை
ஒருசமயம் செம்மலர் சார்பில் இ.எம்.எஸ்.அவர்களுக்கு பத்து கேள்விகள் அனுப்பப்பட்டன. அவற்றுள்ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதில் இன்றும் முக்கியத்துவமானது. “இடதுசாரி சக்திகள் வளர்ச்சியடைந்து தங்களின்மேலாண்மையை நிலைநிறுத்தாதவரை வெகுஜனங்கள் மீதான மதவாதத்தின் பிடி தொடரத்தான் செய்யும்” என்றார்.“இந்திய தேசியத்தின் ஆன்மா” பற்றிய தமது கட்டுரையில் இ.எம்.எஸ். பின்வருமாறு கூறியுள்ளார்:“இந்திய தேசியம் உருவானது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் வளர்ந்துவர ஆரம்பித்தபோதுதான் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை. அதற்கு முந்தைய  இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் ஆண்டுகளுக்கிடையே உருவான அனைத்தின் நல்லஅம்சங்களையும் தனதாக்கியும், அல்லாத அம்சங்களை நிராகரித்தும் ஒரு புதிய சமூகத்தையும் புதிய கலாச்சாரத்தையும் வார்த்தெடுக்கும் பணியையே இந்திய தேசியம்செய்தது. அதற்கு இருவிதங்களில் பங்களிப்பு செய்தவர்கள்தான் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்டுகளும் சுகுமார்அழிக்கோடன் போன்ற மார்க்சிஸ்ட் அல்லாத அறிஞர்களும். தேசிய இயக்கத்தின் மற்ற மக்கள் பகுதியினருடன் சேர்ந்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்டுகளும் மார்க்சிஸ்ட் அல்லாத அறிஞர்களும் உருவாக்கிய இந்திய கலாச்சாரக் கண்ணோட்டத்தைத்தான் இந்திய தேசியத்தின் ஆன்மாவாக நான் சிறப்பித்துக் குறிப்பிடுகிறேன்.”- இ.எம்.எஸ்.-ஸின் இந்த வார்த்தைகள் இன்றும் நம் மனதில் நிறுத்த வேண்டிய சிந்தனையாகும்.

தொகுப்பு : தி.வரதராசன்

;