politics

img

தீக்கதிர் அரசியல் துளிகள்...

‘பொய்யர் திரு.சீமான்’

தேர்தல் பிரச்சாரத்திலும் பொதுவான சமயங்களிலும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் முன்வைத்து வருவது ஜனநாயகத்திற்கு எதிரான - பாசிச ரீதியான இனவாதமே என்று சமீப காலமாக தமிழ்த் தேசியவாதிகள் உட்பட பல தரப்பினரும் விமர்சித்து வருகிறார்கள். “வலதுசாரி அரசியலின் மூலவர்களான சாவர்க்கர், கோட்சே ஆகியோரின் வாரிசுதான் பொய்யர் திரு சீமான். பொய், வெறுப்பு, மதவாதம், கும்பல் மனநிலை, சாதி பெருமை இவற்றின் மீது வலதுசாரி தமிழ்த் தேசியத்தை கட்டமைக்கிறார். இதுதான் வலதுசாரிகளின் தொடக்கமும், சனநாயகத்தின் அழிவும்” என்று குறிப்பிட்டு விமர்சித்திருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் வன்னி அரசு.

                           ***************

அஞ்சாதீர்!

தேர்வுகளை கண்டு அஞ்சாதீர் என்று பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார். “ஆமாம். பத்திரிகையாளர் சந்திப்புகளை கண்டே அஞ்ச வேண்டும்” என்று பகிடி செய்திருக்கிறார் பேராசிரியர் அருணன். 

                           ***************

இன்னும் தாமதிப்பதேன்?

“வாக்கு எண்ணும் மையத்துக்கான கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அரசியல் கட்சி முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் - 24 மணி நேரமும் கடந்தும் - இன்னும் தாமதிப்பதேன்? தலைமை தேர்தல் அதிகாரியே விளக்கம் அளியுங்கள்” என்று கூறியிருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன். 

                           ***************

பேருந்துகளை நிறுத்தாதே!

கோவிட் இரண்டாவது அலையை காரணம் காட்டி தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் இப்போதே பல கிராமங்களுக்கு பேருந்து வசதியை நிறுத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்டுப்பாடுகள் அறிவிப்பில் அப்படியேதும் இல்லை என்ற போதிலும் ஆங்காங்கே போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் இஷ்டத்திற்கு முடிவுகள் எடுக்கின்றன. இந்நிலையில் “போதிய பேருந்துகளை இயக்கிடு; பொதுமக்களை அலைக்கழிக்காதே” என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

                           ***************

நீக்கமற...

“இந்த தேர்தல் களம் எனக்கு ஓர் நற்செய்தியை உரக்கச் சொன்னது. மேற்கு வங்கம், கேரளம், தமிழ்நாடு எங்கும் சிபிஎம் களப்பணியில் மாணவர்களும், இளைஞர்களும் நீக்கமற நிறைந்திருந்தனர். கம்யூனிசத்திற்கு எதிர்காலம் இல்லை என்று எவன் சொன்னது?” என்று மூத்த பத்திரிகையாளர் சு.பொ.அகத்தியலிங்கம் பதிவிட்டுள்ளார். 

                           ***************

இது ‘ஹாட் ஸ்பாட்’ இல்லையா?

கும்பமேளா பிரம்மாண்டமாக நடக்கப்போகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுகிற கும்பமேளா கடந்தாண்டும் சரி, இந்தாண்டும் சரி, கோவிட் ஹாட் ஸ்பாட்டாக - அதாவது கோவிட் பரவுவதற்கான வாய்ப்புள்ள இடமாக கருதப்படவில்லை. கும்பமேளாவில் பங்கேற்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒருபோதும் கொரோனாவை பரப்ப வாய்ப்பு இருப்பவர்களாக கருதப்படவில்லை. இது என்ன பாரபட்சம் என்று, கும்பமேளா படத்தை பதிவிட்டு சமூக ஊடகவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

                           ***************

போனவங்க என்ன செஞ்சாங்க!

“கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதுரையில் வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் ஒரு அதிகாரி பூட்டை உடைத்து உள்ளே போன சம்பவத்தால், இப்போது ஜாக்கிரதையாக இருங்கள் என்று ஸ்டாலின் எச்சரிப்பது நியாயம்தானே என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் நெறியாளர் கார்த்திகேயன் எழுப்பிய கேள்விக்கு, பாஜகவைச் சேர்ந்த சுமந்த் சி.ராமன், “அந்த அதிகாரி வாக்குப்பெட்டி இருக்கும் அறைக்குள் போனது உண்மைதாங்க... ஆனா அவங்க வேறு எதுவும் பன்னலையே, அதனால தேர்தல் ஆணையத்தை சந்தேகப்படக்கூடாது” என்று பதில் கூறியிருப்பது விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது.

                           ***************

பிரஸ் மீட் நடத்துங்களேன்!

“மாணவர்கள் பரிட்சை பயத்தைப் போக்க பிரதமர் பேசுகிறாராம். பி.எம்.கேர்ஸ் நிதிக்கு யார்யார் எவ்வளவு கொடுத்தார்கள்? யார் யார் கணக்கில் பணம் மாற்றப்பட்டது? செலவழித்த தொகைபோக மீதியுள்ள அமவுண்ட் எவ்வளவு? ரபேல் பணம் கைமாறியது யாருக்கு? முதலில் ஒரு பிரஸ்மீட் நடத்தும் தைரியம் உண்டா என கேள்வி எழுப்பியுள்ளார் சிபிஎம் மதுரவாயல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.பீம்ராவ்.

                           ***************

தம்பிகளுக்கு சமர்ப்பணம்

ஆண்டு வருமானம் வெறும் 1000 ரூபாய் தான் என்று வேட்புமனுத்தாக்க லின்போது எழுதிக்கொடுத்து தமிழக மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட நாம் தமிழர் சீமான், சேலத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நாள் ஒன்றுக்கு 14 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தது சமூக ஊடகங்களில் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ளது. அவருடைய இத்தகைய நடைமுறையை விமர்சித்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒருவர் பகிரங்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

                           ***************

சிரிக்கிறது ‘தேச பக்தி’

இத்தாலிய கடற்படையினர் நமது மீனவர்களை ஈவிரக்கமில்லாமல் கொன்றிருக்கி றார்கள். நீங்கள் தேசபக்தி உள்ளவராக இருந்தால் சொல்லுங்கள், அவர்களை எந்த சிறையில் அடைக்கலாம் என்று - என 2014 மார்ச் 31 அன்று சோனியா காந்தியை பார்த்து நரேந்திர மோடி ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இப்போது அதே இத்தாலிய கடற்படையினரை எவ்வித தண்டனையுமில்லாமல் வழக்கை முடித்து வைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு செய்துள்ளது. “உங்க சோற்றில் உப்பிருக்கா?  உங்கள் தேசபக்திக்கு உயிர் இருக்கா? சோனியாவை பார்த்து மோடி கேட்ட அதே கேள்வியை நாம் இப்போது மோடியிடம் கேட்கலாம் தானே’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ்.

;