politics

img

தீக்கதிர் அரசியல் துளிகள்...

தீப்ஷிதாவின் பதிலடி

மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்த உத்தரப்பிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்,“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வங்கத்தில் ரோமியோ எதிர்ப்புப் படை” என்று கூறி, வங்கத்து இளைஞர்கள் பெண்களை எப்போதும் கேலி செய்து கொண்டிருக்கிறார்கள், அவர்களை விடமாட்டோம் என்று அநாகரிகமான முறையில் பேசினார். அதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்திய மாணவர் சங்க தலைவரும், பால்லி தொகுதி சிபிஎம் வேட்பாளருமான தீப்ஷிதா தர், “வங்கத்திற்கு தேவை ரோமியோ எதிர்ப்புப் படை அல்ல; வேலையின்மை எதிர்ப்புப்படை; ஊழல் எதிர்ப்புப் படை; உங்களைப் போன்றவர்களின் இழிவான வசவுச் சொற்களுக்கு எதிரான படை” என்று கூறியுள்ளார். 

                              ***************

ஒரு தலைவரின் வேதனை!

“1957 ஆம் ஆண்டு முதல் நான் மேற்குவங்கத்தில் சட்டமன்றத் தேர்தலை பார்த்து வருகிறேன். இப்போது நடக்கும் தேர்தலை போல ஒருபோதும் வங்கத்தில் மதரீதியாக எந்தக் கட்சியும் மக்களை பெரியளவிற்கு அணிதிரட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டதில்லை. பாரதிய ஜனதா கட்சி வங்கத்தின் அடிப்படை மாண்புகளை முற்றாக அழித்துக் கொண்டிருக்கிறது. திரிணாமுல் கட்சி அதற்கு துணைபோகிறது. இது வேதனை தருகிறது” என்று வங்கத்தின் ஜனநாயக குரலை ஒலித்திருக்கிறார் இடது முன்னணியின் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பிமன் பாசு.

                              ***************

வெறும் ‘கவலை’ தான்!

அமெரிக்காவுடன் மிக நெருக்கமான ராணுவ உறவை உருவாக்கியிருப்பதன் விளைவை அனுபவிக்கத் துவங்கியிருக்கிறது மோடியின் இந்தியா. லட்சத்தீவுக்கு அருகே உள்ள கடற்பகுதியில் இந்தியாவின் அனுமதி ஏதுமின்றி அமெரிக்க கப்பற்படை கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட்ட தகவல் இந்திய கப்பற்படையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. லட்சத்தீவுக்கு அருகே உள்ள இந்தியாவின் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைந்துள்ள கடற்பகுதிக்குள் எந்த அனுமதியுமின்றி அமெரிக்க போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜான் பால் ஜோன்ஸ் நுழைந்துள்ளது. இதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்கவில்லை; மாறாக அமெரிக்காவிடம் தனது கவலையை மட்டும் பதிவு செய்திருக்கிறது.  

                              ***************

தலித் மக்களைப் காப்போம்!

“நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் தமிழகம் முழுவதும் தலித் சமுதாயத்தினர் இரட்டை இலை சின்னத்தின் பிடியிலிருந்து வெளியேறி திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதை சகித்துக் கொள்ளாததன் விளைவே அரக்கோணம் இரட்டை படுகொலை. தலித் சமுதாயத்தினரை பாதுகாக்க தீவிர கவனம் செலுத்த வேண்டும்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கோபண்ணா கூறியுள்ளார்.

                              ***************

பாமகவின் யோக்கியதை!

வாக்குப்பதிவின்போது உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறிய முதியவரை ஏமாற்றி மாம்பழம் சின்னத்தில் ஓட்டுப் போட வைத்த பாமகவைச் சேர்ந்த நபர் பற்றிய உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது கள்ள ஓட்டுக்கு சமம் என்பது மட்டுமல்ல, தனது எஜமானர்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக அதை வீடியோ எடுத்தும் வெளியிட்டிருக்கிறார். அந்த நபர்மீது தேர்தல் ஆணையம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. பாமக ராமதாஸ் இப்படி ஒரு முதியவரை ஏமாற்றித்தான் ஜெயிக்க வேண்டுமா என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

                              ***************

பிரகாசுக்கு என்ன தண்டனை?

வேளச்சேரியில் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகியிருந்தன என்றும் விதிமீறல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றும் தலைமை தேர்தல்அதிகாரி சத்ய பிரதாசாகு விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அதற்கு முன்னதாக “ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்டது தேர்தலில் பயன்படுத்திய இயந்திரங்கள் அல்ல என்றும், பழுதான இரண்டு விவிபேட் இயந்திரங்கள் தான் என்றும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் கூறியிருந்தார். அப்படியானால் பகிரங்கமாக பொய் கூறிய பிரகாஷ் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் என்ற கேள்விக்கணைகள் எழுந்துள்ளன.

                              ***************

எழுத்தாளரின் குமுறல்

“எவ்வளவோ சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டு விசயங்களை விவாதிக்க வேண்டிய நம்மை திரும்பப் திரும்ப கொலைக்களத்தில் குமுறிக் கிடக்கும்படி தள்ளிவிடுகிறது பாட்டாளி மக்கள் கட்சி” என்று அரக்கோணம் தலித் இளைஞர்களின் படுகொலையை கண்டித்து உள்ளக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா.

                              ***************

பொன்பரப்பியைத் தெரியுமா?

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின்போது சிதம்பரம் தொகுதி பொன்பரப்பி கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சாதிவெறிக் கும்பல், தலித் குடியிருப்புகளுக்குள் புகுந்து வீடுகளை அடித்து நொறுக்கினர். இப்போது அரக்கோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச்சேர்ந்த இரண்டு தோழர்களை கொன்றுள்ளனர் என்று, பாமகவின் தொடர்ச்சியான தேர்தல் வெறியாட்டங்களை அம்பலப்படுத்தியிருக்கிறார் சமூக ஊடக எழுத்தாளர் மான்னு.

                              ***************

தர்மம், மனுதர்மம்

“இரு பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்திருக்கிறார். பசுமைத் தீர்ப்பாயத்தின் உறுப்பினரை மோடி நியமித்திருக்கிறார். புதிய அரசு அமையும் வேலையில் இதை செய்திருப்பது தமிழர்களது தீர்ப்பை அவமதிக்கும் செயல். இவர்களது ஆட்களுக்காக தவறிழைப்பதற்கு இவர்கள் தந்துள்ள பெயர் தர்மம், மனுதர்மம்” என்று விமர்சித்திருக்கிறார் பேராசிரியர் அருணன்.

                              ***************

உங்கள் நோக்கம் என்ன?

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. கொரோனா விதிமுறைகளை முன்வைத்து, அவற்றை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ஒவ்வொரு மண்டலமும் நாள் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1.5 லட்சம் வரை பொதுமக்களிடம் அபராதம் வசூலித்தே ஆக வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் இலக்கு நிர்ணயித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இவர்களது நோக்கம் கொரோனா பரவலை தடுப்பதா? அல்லது காசு வசூலி செய்வதா? என்ற கேள்வி எழுந்துள்ளது,

;