politics

img

தீக்கதிர் அரசியல் விரைவுச் செய்திகள்....

புயல் நிவாரண நிதியில் ஊழல் செய்தவர் மம்தா...

“மேற்குவங்கத்தில் கடந்த ஆண்டு ஆம்பன் புயல் தாக்கியபோது மத்திய அரசு ரூ. 10 ஆயிரம் கோடி நிதி அளித்தது. ஆனால், அதில் ஒரு பைசா கூட மக்களுக்கு கிடைக்கவில்லை. அந்தப் பணம் முழுவதையும் மம்தா பானர்ஜியும், அவருடைய சகோதரர் மகன் அபிஷேக் பானர்ஜியும் சுரண்டி விட்டனர்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். “பாஜக ஆட்சி அமைந்த பிறகு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, புயல் நிவாரண நிதியை மோசடி செய்தவர்களை சிறைக்கு அனுப்புவோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

                                   ************

பாஜக-வை நம்பி ஏமாந்த மிதுன் சக்கரவர்த்தி

திரிணாமுல் கட்சி எம்.பி.யாக இருந்தபோது, சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கில் சிக்கி, ரூ. 1 கோடியே 20 லட்சத்தை திருப்பிக் கொடுத்தவர் பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. இவரை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மூலம் தன்பக்கம் இழுத்துக் கொண்ட பாஜக, அவருக்கு மேற்குவங்கத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என்று ஆசை காட்டியிருந்தது. தெற்கு கொல்கத்தா தொகுதியில் மிதுன் போட்டியிடுவார் என்றும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், பாஜகவின் இறுதி வாக்காளர் பட்டியலிலும் மிதுன் சக்கரவர்த்தி பெயர் இல்லை. இது மிதுனை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

                                   ************

மோடியின் பொய் தொழிற்சாலை மட்டும்தான் இயங்குகிறது..

“மேற்கு வங்க மக்களிடம் மிகப்பெரிய வாக்குறுதிகளை பாஜக அளிப்பதாகவும், ஏற்கெனவே திரிபுரா, அசாம் மாநிலத்தில் அளித்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றி விட்டார்களா? என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். “அசாம், திரிபுரா மாநில பாஜக அரசால் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். மத்திய அரசுக்குச் சொந்தமான பல்வேறு நிறுவனங்கள் பாஜக ஆட்சிக்கு வந்தபின் மூடப்பட்டுள்ளன” என்று கூறியிருக்கும் மம்தா, தற்போது மோடியின் பொய் தொழிற்சாலை மற்றும் பாஜகவின் மோசடித் தொழிற்சாலை மட்டும்தான் நாட்டில் இயங்குகிறது என்று சாடியுள்ளார்.

                                   ************

கேரளத்தில் 2.74 கோடி வாக்காளர்கள்..

கேரள மாநில வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 74 லட்சத்து 46 ஆயிரத்து 039 ஆக உயர்ந்துள்ளது. துணைவாக்காளர் பட்டியலில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இறுதி வாக்காளர்களின் பட்டியலை வெளியிட்ட பின்னர் பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து 7 லட்சத்து 40 ஆயிரத்து 486 புதிய பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டும், 25 ஆயிரத்து 956 பேர்களின் பெயர்கள் நீக்கப்பட்டும் உள்ளன. மேலும் 2790 என்.ஆர்.ஐ. வாக்காளர்களும், 69 திருநங்கை வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

                                   ************

தலைமை நீதிபதி ஆகிறார்  என்.வி. ரமணா!

உச்ச நீதிமன்றத்தில், தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் எஸ்.ஏ. பாப்டேவின் பதவிக் காலம் ஏப்ரல் 23-ஆம் தேதியோடு முடிவடைவதால், அடுத்த தலைமை நீதிபதியை நியமிக்கும் பணிகள் துவங்கியுள்ளன. ஓய்வுபெற்றுச் செல்லும் நீதிபதியே, அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்வது ஒரு மரபாக உள்ளதால், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இதுதொடர்பாக எஸ்.ஏ. பாப்டேவுக்கு கடிதம் எழுதி, அவரின் கருத்தைக் கேட்டிருந்தார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தனக்கு அடுத்த மூத்த நீதிபதியாக இருக்கும் என்.வி. ரமணா-வின் பெயரை, அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே பரிந்துரை செய்துள்ளார்.

;