politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

18 வயது நிரம்பிய அனைவருக்கும் மே 1 முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு எந்தவிதத்திலும் அர்த்தப்பூர்வமானது அல்ல. ஏனென்றால் எத்தனை பேருக்கு தடுப்பூசி வழங்க முடியும் என்று மத்திய அரசால் இதுவரையிலும் பகிரங்கமாக அறிவிக்க முடியவில்லை. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்துவதற்கு இப்போது உங்களிடம் போதுமான தடுப்பூசிகள் உள்ளதா என்பது முக்கியமான கேள்வி. எனவே இதுபோன்ற வெற்று அறிவிப்புகளை வெளியிடுவதில், தலைப்பு செய்திகளில் இடம்பெறுவதில் மட்டும் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு உண்மையான தீர்வு என்னவென்று பார்க்க வேண்டும்.பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றுவரும் தடுப்பூசி நடவடிக்கைகளுக்கு போதுமான அளவு தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும் மாநிலங்களிடம் போதுமான நிதியில்லை. ஆனால் பிரதமரின் தனியார் நிதியான பிஎம்கேர்ஸ் நிதியில் லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் குவிந்து கிடக்கின்றன. அந்த பணத்தை எதற்காக வைத்திருக்கிறீர்கள்?

                                        *****************

மத்திய அரசு, 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, “அனைவருக்கும் தடுப்பூசி” என்ற விதிகளின் கீழ் தடுப்பூசி போடுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறது. இதுதான் மத்திய அரசு அறிவித்துள்ள புதிய தடுப்பூசி கொள்கையின் சாராம்சம் ஆகும். அதாவது தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் அல்ல. மாநிலங்களோ, தனிநபர்களோ அதை திறந்தவெளி சந்தையில் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. மத்திய அரசின் இந்த முடிவு முற்றிலும் அநீதியானது.பாரபட்சமானது. தனது பொறுப்பை கைகழுவிவிட்டு மாநிலங்கள் மீதும், மக்கள் மீதும் சுமையை ஏற்றுகிற கொடூரமானசெயல் இது. அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டம் என்பதே உடனடிதேவையாகும். இந்தியாவின் பாரம்பரியம் இதுதான். இதுவரையிலும் தடுப்பூசி என்றாலே அது அனைவருக்கும் இலவசமாக என்ற அடிப்படையில்தான் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. அதை முற்றாக மோடி அரசு கைவிடுகிறது. இதை வன்மையாக கண்டித்து எமது கட்சியின் அரசியல் தலைமைக் குழு விரிவான அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறது.
 

;