politics

img

பாஜகவுக்கு காவடி தூக்கும் அதிமுகவை வீழ்த்துவோம்!

வேலூர் தொகுதியில் கே.பாலகிருஷ்ணன் முழக்கம்

வேலூர், ஜூலை 31- வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்தை ஆதரித்து சிபிஎம் சார்பில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கலந்து கொண்டு திமுகவுக்கு வாக்குகள் கோரி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடந்தபோது தமிழகத்தில் வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டது.  இந்த ஒரு தொகுதியில் மட்டும் பண நடமாட்டம் இருந்ததாகக் கூறி பாஜகவும், அதிமுகவும் இணைந்து சதித் திட்டம் தீட்டி தேர்தலை ரத்து செய்தனர். வேலூரில் மட்டும்தான் பணம் செலவழிக்கப்பட்டதா? தேனி தொகுதியில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் ஓட்டுக்கு  ரூ.5 ஆயிரம் வரை பணம் கொடுத்தது குறித்து புகார் கூறியும் அங்கு தேர்தலை நிறுத்தாதது ஏன்?

எடுபிடியாக மாறிய ஆணையம்!

நடந்து முடிந்த தேர்தலில் பாஜக  சுமார் ரூ. 27 ஆயிரம் கோடி  செலவு செய்ததாக கணக்கு வெளி யாகியுள்ளது. அப்படியானால் 300 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேர்தலை ஆணையம் ரத்து செய்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை? இந்திய தேர்தல் ஆணையம் பாஜக ஆட்சிக்கு எடுபிடி வேலை செய்கிறது. தேர்தல் ஆணை யம் நேர்மையாக செயல்படுகிறது என்றால், இஎம்ஐ  எந்திரத்தில் பதிவான வாக்குக்கும் விவிபேட் எந்திரத்தில் பதிவான வாக்குக்கும் அதிக வித்தியாசம் இருந்தது ஏன்? தேர்தல் முடிந்து புதிதாக அரசு பதவியேற்றும்  இதுவரைக்கும் வாக்குப் பதிவு விவர அறிக்கையை வெளியிடாமலே உள்ளது ஏன்?

படிக்கவே முடியாது....

மும்மொழி பாடத் திட்டத்தை மத்திய பாஜக அரசு கட்டாயப் படுத்தி வருகிறது.  மூன்றாம் வகுப்பி லிருந்து பொதுத்தேர்வு எனவும் தொழிற் கல்வி திட்டத்தை அமல் படுத்துவதாகவும் கூறி வருகிறது. இதன் மூலம் குலக் கல்வி திட்டத்தை  மீண்டும் செயல்படுத்த பாஜக அரசு துடிக்கிறது. படித்த இளைஞர் களுக்கு வேலையில்லா கொடுமை இருக்கும் நாட்டில் 8 ஆம் வகுப்பி லிருந்து தொழிற்கல்வி அளிக்கப் படும் எனக் கூறுவது அபத்தம். பாஜக அறிமுகப்படுத்தும் புதிய கல்விக் கொள்கையால் நாட்டில்  இன்னும் 10 ஆண்டில் பெரும்பாலும் படித்தவர்களே இருக்கமாட்டார்கள். மடியேந்த வைக்கும் பாஜக.... மாநில அரசு உரிமைகளில், மத்திய அரசு தலையிட்டு மாநில அரசுகள் மத்திய அரசிடம் மடியேந்தி நிற்கும் நிலையை கொண்டு வருகிறது. மத்திய அரசு கொண்டு  வரும் மக்கள் விரோத கொள்கைகளை, மாநில அரசு உரிமைகளை பறிக்கும் சட்டங்களை எதிர்க்காத மாநில  அதிமுக அரசை தலையாட்டும் பொம்மையாகவே வைத்திருக்க மத்திய அரசு விரும்புகிறது. 

தன்மானம் இல்லா ஆட்சியாளர்கள்...

அதிமுக அரசு யாருக்கான அரசாக இருக்க வேண்டும்  தமிழ், சமஸ்கிருதம் இரண்டும் சிறந்த மொழிகள். அவற்றின் சிறப்பு அம்சத்தை தெரிந்து கொள்வோம் என மாநில அமைச்சர் பாண்டிய ராஜன் கூறுவதன் பொருள் என்ன?  தமிழ் நாட்டின் நலனை காவு கொடுத்து, மத்திய அரசுக்கு காவடி தூக்கும் அரசு வேண்டுமா? தன்மான உணர்வோடு மாநில  உரிமைகளை காக்க, மக்களவை யில் தமிழக நலனுக்காக குரல் கொடுக்க உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் கதிர் ஆனந்த் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்து தமிழகம், புதுவையிலிருந்து 39 வது உறுப்பினராக மக்களவைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார். கூட்டத்திற்கு குடியாத்தம் நகரச் செயலாளர் பி.காத்தவராயன் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் கே.சாமிநாதன், பேர்ணாம்பட்டு செயலாளர் பி.குணசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர்  எஸ்.செல்வசிங், மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கே.ஏ.சேகர் உள்ளிட்ட பலர் பேசினர்.
 

 

;