politics

img

இது கேரளம்; எங்களிடம் வாலாட்ட வேண்டாம்.... நீங்கள் இதுவரை எதிர்கொண்டவர்களைப் போன்றவர்கள் அல்ல, நாங்கள்.... அமித் ஷாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி...

கண்ணூர்:
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கேரளத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்த மத்தியஉள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரள முதல்வர் பினராயி விஜயனை, ‘தங்கக் கடத்தல்’ வழக்குடன் இணைத்து பொய்ப்பிரச்சாரங்களை அவிழ்த்து விட்டிருந்தார்.

அந்நியச் செலாவணி கடத்தல் வழக்கில்தொடர்புடைய முக்கிய குற்றவாளிக்கு (ஸ்வப்னா சுரேஷ்) உங்கள் முதன்மைச் செயலராக இருந்தவா் போலிச் சான்றிதழ் வழங்கி அரசு திட்டத்தில் பணிபுரிந்திட முக்கிய பொறுப்பில் பணியமா்த்தினாரா? இல்லையா? அந்தப் பெண் உங்கள் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு வந்தாரா; இல் லையா? சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டதங்கம் விமான நிலையத்தில் பிடிபட்டபோது, அதுதொடர்பான விசாரணையில் சுங்கத்துறைக்கு உங்கள் அலுவலகம் அழுத்தம் தந்ததா? இல்லையா? என்று 7 கேள்விகளையும் பினராயி விஜயனுக்கு அமித்ஷா எழுப்பியிருந்தார்.

இதற்கு, கண்ணூரில் நடைபெற்ற இடதுஜனநாயக முன்னணியின் (எல்டிஎப்) தேர்தல் பிரச்சார துவக்கப் பொதுக்கூட்டத் தில், முதல்வர் பினராயி விஜயன் வலுவானபதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
வகுப்பு வாதத்தின் அடையாளமாகவே அறியப்படுபவர்தான் அமித்ஷா. முஸ்லிம் என்ற வார்த்தையை உச்சரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அவரது குரல் கரகரப்பாக மாறிவிடுகிறது. இதுதான் அவரதுவழக்கம். வகுப்புவாதத்தை வளர்ப்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்காதவர் அமித் ஷா. குஜராத்தில் இனப்படுகொலை நடந்தபோது ஊடக செயற்பாட்டாளரான ராஜீவ் ஷா, தனக்கு அமித் ஷா-விடமிருந்து கிடைத்த அனுபவத்தை பதிவு செய்துள்ளார். ‘கலவரத்தைக் குறித்து எதற்காக வருத்தப்படுகிறீர்கள்’ என்று அமித்ஷா தன்னிடம் எந்த உறுத்தலும் இன்றி கேட்டதாகவும், இந்து - முஸ்லீம் ஒற்றுமை பாதிக்கப்படுகிறதே என்றபோது, ‘உங்கள் வீடு இந்துக்களின் குடியிருப்பு அருகிலா அல்லது முஸ்லிம்களின் குடியிருப்புக்கு அருகிலா?’ என்று பதில் கேள்வியெழுப்பி ‘நீங்கள் ஒரு இந்துப் பகுதியில் இருந்தால் பயப்பட வேண்டாம், தாக்குதல் எதுவும் நடக்காது’ என்று அமித்ஷா ‘ஆறுதல்’ கூறியதாகவும் ராஜீவ் ஷா எழுதியுள்ளார்.

இனவெறியின் ஒரு மனித வடிவத்தைநீங்கள் கற்பனை செய்தால், அதுதான் அமித் ஷா. புதிய நிலையை எட்டியுள்ளபோதிலும் அவரிடம் பெரிய மாற்றம் ஒன்றும்வந்துவிடவில்லை. அவர்தான் இங்கு வந்துஉரக்கப்பேசிக் குதித்துள்ளார். அவர் என்னிடம் சில கேள்விகளையும் கேட்டுள்ளார்.போலி என்கவுண்டர் (சொராபுதீன்) கொலை வழக்கு  உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? அந்தக் கொலைகளுக்கு சதித்திட்டம் தீட்டியதாக யார் மீது குற்றம் சாட்டப்பட்டது, தெரியுமா? குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவர் பெயர் தெரியுமா? அமித் ஷா-வேதான்... அப்படிப்பட்ட நபர் தான் கேரளாவில் நீதி உணர்வைப் பற்றி நமக்குப் பாடம் நடத்துகிறார்.

22 நவம்பர் 2005 அன்று ஹைதராபாத்திலிருந்து மகாராஷ்டிர மாநிலத்திற்கு பயணித்த சொராபுதீன் சேக் மற்றும் அவரதுமனைவி கவுசர் பீவி ஆகியோர் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்பட்டதுளசிராம் பிரஜாபதியும், 2006-ஆம் ஆண்டு குஜராத் காவல் துறையால் நடத்தப்பட்ட மற்றொரு போலி என்கவுண்ட்டரில் கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைகளின் பின்னணியில் அமித் ஷா இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.சொராபுதீன் ஷேக் போலி எண்கவுண்டர்சம்பவத்தில், மும்பை சிபிஐ நீதிமன்ற நீதிபதியாக இருந்து வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த நேரத்தில், இறந்துபோன நீதிபதி லோயாவின் மரணம் இன்றளவும் மர்மமாக உள்ளது.

நீதிபதி லோயாவின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது குடும்பத்தினர் இன்றளவும் போராடி வருகின்றனர். அமித் ஷா அதைப் பற்றி ஏதேனும் பேச முடியுமா? பாஜகவில் உள்ள ஏதேனும் ஒரு தலைவர் இதைப் பற்றி பேசமுடியுமா? ஒரே ஆண்டில் தனது சொத்து மதிப்பை16 ஆயிரம் மடங்கு அதிகரித்து ‘அச்சே தின் ’உருவாக்கிய நபரை (அமித்ஷா மகன்ஜெய்ஷாவை) உங்களுக்குத் தெரியாதா…? அந்த நபர் ஒன்றும் பினராயி விஜயன் அல்ல. உங்கள் (பாஜக) கலாச்சாரம் எங்கள்(கேரள) கலாச்சாரத்திலிருந்து வேறுபட்டது. அதை வைத்துக் கொண்டு எங்களைமதிப்பிட்டு விடலாம் என்று நினைக்காதீர்கள்.நீங்கள் இதுவரை எதிர்கொண்டவர் களைப் போன்றவர்கள் அல்ல நாங்கள். நாங்கள் வித்தியாசமானவர்கள். நீங்கள் என்ன செய்தாலும் இந்த மண் (கேரளா) எங்களை அவதூறாகப் பேசாது. ஏனெனில் இங்கு எங்களின் வாழ்க்கை திறந்த புத்தகம் போன்றது.இவ்வாறு பினராயி விஜயன் பேசியுள்ளார்.

                                   **************

அமித்ஷாவுக்கு பத்து கேள்விகள்...

தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக அமித்ஷா 7 கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில், அவருக்கு பினராயி விஜயன் 10 கேள்விகளை எழுப்பி பதிலடி கொடுத்துள்ளார்.

1.     தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்தியதன் பின்னணியில் உள்ள முக்கியமான நபர் சங்-பரிவாரைச் சேர்ந்தவர்தான் என்பதை அமித்ஷா மறுக்க முடியுமா?

2.     தங்கக் கடத்தலைத் தடுக்கும் முழு பொறுப்பும் சுங்கத் துறைக்கு உண்டா; இல்லையா? 

3.     திருவனந்தபுரம் விமான நிலையம், மத்திய அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கிறதா, இல்லையா?

4.     தூதரக பார்சல் அல்ல என்று கூறுமாறு குற்றம் சாட்டப்பட்டவரை (ஸ்வப்னாவை) வற்புறுத்தியது உங்கள் தொலைக்காட்சி சேனலின் தலைவரா, இல்லையா?

5.     உங்கள் அமைச்சரவையில் உள்ளவர் ஒருவர் சிக்குவார் என்பது தெரியவந்தபோது திடீரென விசாரணையை திசைத்திருப்பினீர்களா, இல்லையா?

6.     விசாரணை சரியான திசையில் நகரும் போது அதிகாரிகள் ஏன் இடம் மாற்றம் செய்யப்பட்டனர்?

7.     முதல்வரின் பெயரைக் குறிப்பிடுமாறு குற்றம்சாட்டப்பட்டவர் (ஸ்வப்னா) நிர்பந்திக்கப்பட்டார் என்பது உங்களுக்குத்தெரியுமா, தெரியாதா?

8.     கேரள அரசுக்கு எதிராக விசாரணையைத் திசைதிருப்ப விசாரணை அமைப்புகளை வற்புறுத்தியது யார்?

9.     நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கடத்தல் அதிகரித்திருக்கிறதா, இல்லையா?

10.     தங்கத்தை அனுப்பிய நபர் எட்டு மாதங்களாகியும் விசாரிக்கப்பட்டாரா? இல்லையென்றால் ஏன் விசாரிக்கப் படவில்லை..?

இவ்வாறு பினராயி விஜயன் கேட்டுள்ளார்.