கொல்கத்தா:
மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில், கடந்த 10 ஆண்டுகாலமாக மாநிலத்தில் பேயாட்சி நடத்தி வரும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசை யும், வங்கத்து மக்களை மதத்தால் பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கும் பாரதிய ஜனதா கட்சியையும் உறுதியுடன் வீழ்த்துவோம் என கட்டியம் கூறும் விதமாக அமைந்தது பிப்ரவரி 28 அன்று பிரிகேட் பரேடு மைதானத்தில் குவிந்த மாபெரும் மக்கள் பேரணி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுஜனநாயக முன்னணியின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்திற்கு “மக்கள் பிரிகேட்” என்று பெயரிடப்பட்டிருந்தது. சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றஎழுச்சிமிகு கூட்டமாக இது அமைந்திருந்தது. சனிக்கிழமை இரவு முதலே கொல்கத்தா நகரிலிருந்தும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சாரை சாரையாக செங்கொடிகளையும் கூட்டணிக் கட்சிகளின் கொடிகளையும் கைகளில் ஏந்தியவாறு உணர்ச்சிப்பூர்வமாக மக்கள் பிரிகேட் மைதானத்திற்கு குவியத் துவங்கினர். ஞாயிறன்று காலை நடைபெற்ற இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் முகமது சலீம், மேற்குவங்க மாநிலச் செயலாளர் டாக்டர் சூர்யகாந்த மிஸ்ரா, மேற்குவங்க காங்கிரஸ் கமிட்டி தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் து.ராஜா, இந்திய மதச்சார்பற்ற முன்னணி தலைவர் அப்பாஸ் சித்திக், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஸ் பாகல் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.
சீத்தாராம் யெச்சூரி தனது உரையின் போது, வங்கத்தில் ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல் நுழைவதையும் வெற்றியை நோக்கி முன்னேறுவதையும் தடுத்து நிறுத்துவதற்கு முன்நிபந்தனையாக திரிணாமுல் காங்கிரசை முற்றாக வீழ்த்த வேண்டியது அவசியமாகும் என்றும், ஒரு வேளை இங்கு தொங்கு சட்டமன்றம் அமையுமானால் பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியை பிடிக்க திரிணாமுல் காங்கிரஸ் சற்றும் தயங்காது; எனவே திரிணாமுல் கட்சியை அனைத்து தொகுதிகளிலும் தோற்கடிக்க வேண்டியது அவசியம் என அழைப்பு விடுத்தார். பாஜகவுக்கும் திரிணாமுல்லுக்கும் இடையே நடப்பது ஒரு போலி மோதல்தான் என்பதை வங்க மக்கள் உணர்ந்திருக்கிறார்கள், இரு நாசகர சக்திகளையும் தூக்கியெறிவார்கள் என்றும் அவர் கூறினார்.