சென்னை,ஜூலை 20- காந்தி தேசத்தில் ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே மதம் என வெறுப்பு அரசியல் நடத்தும் மத்திய பாஜகவை திமுக தலைவர் கடுமையாக சாடினார். தமிழக சட்டப்பேரவையில் சனிக்கிழமை யன்று (ஜூலை20) பொதுத்துறை, மாநிலச் சட்டமன்றம், ஆளுநர், அமைச்சரவை, நிதி, வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சி, திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள், ஓய்வூதியங்கள், ஏனைய ஓய்வுக்கால நன்மைகள் ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்ட எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது வருமாறு:- நாட்டுப்பற்று, அரசமைப்பு சட்டம், இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு போன்ற உயர்ந்த கண்ணியம் செறிந்த நெறிகளைப் போற்றுபவர்கள், கவலை கொண்டிருக்கும் காலம் இது. வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு என்று திசை வேறாகினும். பேசும் மொழி, பின்பற்றும் மதம் வேறாகினும். உணவு, உடை, பழக்க வழக்கங்கள் வேறாகினும். போற்றும் கலை பண்பாடு கலாச்சாரம் வேறாகினும். அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வே அனைவரிடமும் மேலோங்கி நிற்கும் குணமாக, வாழையடி வாழையாக வளர்ந்து இணைத்து வாழவைத்துக் கொண்டிருக்கிறது.
அந்த நற்குணத்தைத்தான் “முப்பது கோடி முகமுடையாள்” என நாடு விடுதலை அடைவதற்கு வெகுகாலத்திற்கு முன்பாகவே பாடியுள் ளார் பாரதி. ஒன்று, ஒன்று, ஒன்று என பாரதியார் திரும்பச் திரும்பச் சொன்னது ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும்தான். முகம் வேறாயினும் உறவு ஒன்றே. மொழி வேறாக இருந்தாலும் சிந்தனை ஒன்றுதான் என்று வேற்றுமையில் ஒற்றுமை என்கிற நமது ஆணி வேரைத்தான் பாரதியார் இப்படி குறிப்பிட்டிருக்கிறார். “முப்பது கோடி முகம்” என்று பாரதி சொன்னது, நமது பன்முக பண்பாட்டைத்தான். அந்த வேரில்தான் வெந்நீர் ஊற்றும் வேலை வேகமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் அனைவரும் உணர்வோம். உணர்வதை வெளியே சொல்ல சிலர் வெட்கப்பட்டாலும் அல்லது பயப்பட்டாலும், அதுதான் உண்மை. அடிமனதில் அதுதான் இன்றைக்கு உறுத்திக் கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.
மக்களாட்சியின் அடிப்படைகளில் ஒன்று எண்ணிக்கை. அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் பெரும்பான்மை பெற்றிருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? அந்த பெரும்பான்மையைக் கொண்டு ஆக்கப்பூர்வமான வேலைத் திட்டங்களில் ஆர்வம் காட்டும் அணுகுமுறை வேண்டும். நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளைக் கடந்த பின்பும், வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் மொத்த மக்கள் தொகையில் 21.9 சதவிகிதம் பேர். வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை கடந்த 45 ஆண்டுகளில் அதிகரித்துவிட்டது. எனவே, பெரும்பான்மையைப் பயன்படுத்தி, முக்கியமான இந்த இரு பிரச்சனைகளிலும் கவனம் செலுத்தி, ‘இல்லாமை - போதாமை’யை விரட்டி விட்டால், நாட்டில் விபரீதம் ஏற்படாது. உண்மையான வளர்ச்சி ஏற்படும். உடனடியாகச் செய்ய வேண்டிய வேலைத் திட்டம் இதுதான். “செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்” செய்ய வேண்டிய வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தேவையற்ற வேலைகளை மேற்கொள்வது, நாட்டை எங்கோ இட்டுச் செல்லும், எத்தகைய கேடு ஏற்படும் என்பதை, சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ‘நீட்’ தேர்வு, ஒரே ரேசன் அட்டை; ஒரே மின்சாரக் கட்டமைப்பு, ஒரே கல்விமுறை, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே மாதிரியான கலாச்சாரம் என்று அனைத்து முனைக ளையும் வலிந்து “மைய”ப் படுத்தும், எதிர்மறை ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை, நாம் அனைவரும் தெளிவாக அறிந்து கொண்டிருக்கிறோம். இவற்றை மட்டும் அல்ல; அறம், அன்பு, அஹிம்சை, சகிப்புத் தன்மை ஆகிய உயர்ந்த பண்பு நெறிகளைக் கொண்ட‘காந்தி தேசத்தில்”, வெறுப்பு அரசியல் விரவிப் பரவுகிறது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.