politics

img

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆட்சி மாற்றம் அவசியம்

சென்னை, ஏப்.8-தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது அவசியம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.வடசென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் ஆகியோரை ஆதரித்து பெரம்பூர்,திரு.வி.க நகர் உள்ளிட்ட இடங்களில் ஞாயிறன்று (ஏப்.7) நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழகத்தில் தானாகவே எடப்பாடி ஆட்சி கவிழ்ந்து போகும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஏனென்றால் பிரதமர் மோடி மைனாரிட்டியாக இருக்கக்கூடிய இந்த ஆட்சியை முட்டுக்கொடுத்து வைத்துள்ளார். அவர் இருக்கின்ற காரணத்தினால் தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. அவர் இருக்கின்ற காரணத்தினால்தான் தொடர்ந்து கொள்ளையடித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.தமிழகத்தை ஒரு நல்ல மாநிலமாக மாற்ற வேண்டும். இந்தியாவை மற்றவர்கள் பாராட்டக்கூடிய அளவிற்கு மாற்ற வேண்டும். புதுவை உள்ளிட்ட தொகுதிகளில் நாடும் நமதே நாற்பதும் நமதே என்பது தான் நம் முழக்கம். 18 தொகுதிகளில் நடைபெறக்கூடிய சட்டமன்ற இடைத்தேர்தலில் 18 இடங்களில் நாம்தான் வெற்றிபெறப் போகின்றோம். தேர்தல் முடிவுகள் வந்த அடுத்த நொடியே தமிழ்நாட்டில் நிச்சயமாக எடப்பாடி ஆட்சி இருக்கப்போவது இல்லை. அதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.மோடி இந்தியாவின் பிரதமர் அல்ல, அவர் வெளிநாடுவாழ் பிரதமர். தேர்தல் நேரத்தில் மட்டுமே இந்தியாவைச் சுற்றிச் சுற்றி வருகின்றார். தேர்தல் முடிந்த பிறகு வெளிநாட்டிற்கு சென்று விடுவார்.


சென்னை மாநகர மேயராக நான் இருந்தபோது பெரம்பூர் மேம்பாலம் உள்ளிட்ட சென்னை மாநகரத்தில் இருக்கக்கூடிய 10 மேம்பாலங்கள் கட்டித் தரப்பட்டது. அதேபோல் சாலை வசதிகள், சோடியம் விளக்குகள், தரம் உயர்த்தப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சி பள்ளிகள், குடிநீர் திட்டத்திற்காக கடல் நீரை குடிநீராக மாற்றி அந்தத் திட்டத்தை நிறைவேற்றினேன். அதேபோல் மீஞ்சூரில் தென்சென்னை பகுதியான நெமிலியில் அந்தத் திட்டத்தைக் கொண்டுவந்து நாம் நிறைவேற்றி தந்தோம். அதுபோன்ற பணிகள் அனைத்தும் இப்பொழுது எதுவும் கிடையாது. சிங்காரச் சென்னையாக கொண்டு வரவேண்டும் என்று அந்த முயற்சியில் ஈடுபட்டு நான் ஓரளவிற்கு செயல்படுத்திக் கொண்டே இருந்தேன். ஆனால் இப்பொழுது, மாநகராட்சியே இல்லை, மாநகராட்சியில் மேயர் இல்லை, மாநகராட்சியில் கவுன்சிலர் இல்லை, இந்த நிலையில் தான் இன்றைக்கு இந்த உள்ளாட்சி அமைப்பு இருக்கின்றது. காரணம், உள்ளாட்சி அமைப்பின் தேர்தலை நடத்தவில்லை. ஏன் நடத்தவில்லை என்றால், அ.தி.மு.க தோற்றுப்போய் விடும் என்கின்ற பயம் ஒரு பக்கம். அதைவிட கவுன்சிலர் வந்து விட்டால், நாம் நேரடியாக கொள்ளையடிக்க முடியாது என்கின்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது.நீட் தேர்வு இருந்த போது தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியாத அளவிற்கு, உச்ச நீதிமன்றம் வரை சென்று தடுத்து நிறுத்தி வைத்திருந்தார் தலைவர் கலைஞர். நீட் நுழைவுத் தேர்வு பற்றி சட்டமன்றத்தில் நான் பலமுறை பேசியிருக்கின்றேன். சட்டமன்ற தீர்மானத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே, அதற்காகத்தான் அந்த மாணவியின் பெயரில், இந்த ஆட்சிக்கு புத்தி புகட்ட வேண்டும். நாம் எல்லோரும் அனிதா செய்த தியாகத்தை மறந்துவிடக்கூடாது.இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.