politics

img

தமிழ்ச் சமூகம் துரோகிகளிடம் விலை போகாது....

நாடாளுமன்றம் செயல்படுவதற்கான விதிகளின்படி, வழிமுறைகளின் படி செயல்படுகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.கடந்த இரண்டு வருடங்களில் தொழில்துறை, விவசாயத்துறை, சமூகத் துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் அனைத்தும் மத்திய அரசால் திட்டமிட்டு தானாக முன்வந்து உருவாக்கப்பட்டது. நூறு ஆண்டுகளுக்குப் பின் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் முடங்கிக் கிடந்த நிலையில், இந்த பிரச்சனையை சமாளிக்கவும் மக்களை காப்பாற்றவும் பல நாடுகளில், மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்றங்கள் கூட்டப்பட்டன. ஆனால் இந்திய நாடாளுமன்றம் கூட்டப்படவில்லை.எட்டு மாதங்களுக்கு பின் கூட்டப்பட்ட நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் விவசாயத்திற்கு எதிரான மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் விளைபொருட்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று உலகமே சிந்தித்துக் கொண்டிருந்த நிலையில், மத்திய அரசு விவசாயத்தையே படுகுழியில் தள்ள கூடிய மூன்று மசோதாக்களை தாக்கல் செய்தது.
வேளாண் திருத்த மசோதா குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் நேரம் கேட்டபோது மூன்று மணி நேரம் கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை. சுமார் இரண்டு ஆண்டுகளில் எதிர்க்கட்சிகள் சொன்ன எந்த ஒரு ஆலோசனையையும் மத்திய அரசு ஏற்கவில்லை. கூட்டணி கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் சொன்ன ஆலோசனையைக் கூட மத்திய அரசு கேட்டதில்லை.

நாடாளுமன்றத்தின் தெரிவுக்குழுவுக்கும், நிலை குழுவுக்கும் ஒரு மசோதா கூட அனுப்பப்பட்டது இல்லை.கடந்த குளிர்கால கூட்டத்தொடர் 20 நாட்கள் நடைபெற்ற நிலையில் தொடக்கத்திலும் நிறைவிலும் சிறிது நேரம் மட்டுமே பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நாட்டின் மிக உயரிய சட்டங்களை நிறைவேற்றும் அமைப்பான நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது என்று அறிவித்தால், 130 கோடி மக்களின் புதிய விதியை தீர்மானிக்கிறது என்று பொருள். இது குறித்து விவாதிக்க ஒரு நிமிடமோ அல்லது இரண்டு நிமிடமோ நாங்கள் கேட்கிறோம். அந்த இரண்டு நிமிடம் என்பது 130 கோடி மக்களின் வாழ்க்கையை எழுதுகின்ற விளையாட்டோடு தொடர்புடையது. என்னவெல்லாமோ நடக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் மூன்று நிமிடம் கேட்டால் கூட சபாநாயகர் அனுமதி மறுத்துவிடுகிறார். கற்பனை சக்திக்கு எல்லாம் அப்பாற்பட்டது அவர்கள் செய்கின்ற சட்டவிரோத காரியங்களுக்கான எல்லை அளவு.

இரவு பன்னிரண்டு முப்பது மணிக்கு நாங்கள் பேச ஒரு நிமிடம் அனுமதி கிடைக்கிறது. விவாதத்திற்கு நேரம் ஒதுக்காத மத்திய அரசு தற்போது பல சுற்று பேச்சு வார்த்தையை விவசாயிகளுடன் நடத்தி வருகிறது. கொரோனா காலத்தில் மக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என அரசு சொல்லியது. ஆனால் மக்கள் பிரதிநிதிகள், முன் களப்பணியாளர்கள், தன்னார்வலர்கள் என பலர் வெளியே வந்து பணியாற்றினார்கள். ஆனால் பிரதமர் மோடி மூன்று மாதங்களில் ஒரு முறை கூட வெளியே வரவில்லை. தன்னுடைய வீட்டில் இருந்த அறைக்குள் இருந்து மக்களிடம் ஆறுமுறை பேசினார். சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளுக்கு இருக்கும் தேசப்பற்று கூட பிரதமருக்கு இல்லை. கடுமையான தொற்று காலத்திலும் பணியாற்றிய செவிலியருக்கு இருந்த தேச பங்களிப்பு கூட நாட்டின் பிரதமருக்கு இல்லை. 

தில்லியில் போராடும் விவசாயிகள் பெரும்பாலானோர் மிகப் பெரிய செல்வம் படைத்தவர்கள். அவர்கள் கடும் குளிரிலும் போராடி வருகின்றனர். கடந்த 60 வருடங்களாக மிகப்பெரும் கார்ப்பரேட்டுகள் பற்றி கம்யூனிஸ்டுகள் மட்டுமே பேசி வந்த நிலையில், தற்போது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவரான ராகுல் காந்தி ‘இரண்டு பேர் இரண்டு பேருக்காக நடத்துவதுதான் இந்த நாடு’ என்று பேசுகிறார். 60 வருடங்களாக நாங்கள் நடத்தும் பாதையில்தான் அனைத்து இயக்கமும் வந்து சேர்ந்துள்ளன. இதை வரலாறு நிரூபித்து வருகிறது. 

கடந்த சில தினங்களுக்கு முன் பஞ்சாப்பில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதாக் கட்சி அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இந்த தேர்தலின் மூலம் பஞ்சாப் மக்கள் கொடுத்துள்ள செய்தி பாஜகவுக்கோ அல்லது காங்கிரசுக்கோ கிடையாது. பஞ்சாப் மக்கள் கொடுத்த செய்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு. பஞ்சாப்பில் பதிந்தா மாவட்டம் சிரோமணி அகாலி தளத்தின் கோட்டை, பதவியை ராஜினாமா செய்த ஹர்சிம்ரத் கவுல் அவர்களின் மக்களவைத் தொகுதி. ஏற்கனவே அப்பகுதியில் முதலமைச்சராக இருந்தவரின் மாவட்டம். அங்கு அகாலிதளம் படுதோல்வி அடைந்துள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து வெளிவந்துள்ள நிலையிலும் அகாலிதளத்தை பஞ்சாப் மக்கள் இந்த அடி அடித்து உள்ளனர். 

இந்த நிலையில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணியில் உள்ள அதிமுகவை தமிழக மக்கள் எந்த அடி அடிப்பார்கள் என தெரியவில்லை.ஏனென்றால், தமிழகத்தில் நாகரீகத்தை, மொழியை, பண்பாட்டை, தனித்துவத்தை, பகுத்தறிவு மரபை மத்திய அரசு அடித்துள்ளது. அத்தகைய அரசின் பாதந்தாங்கியாக உள்ளது எடப்பாடி அரசு. ஒவ்வொரு கட்சியின் பின்னரும் சில ஆயிரக்கணக்கானோர் இருப்பார்கள். ஆனால் ஏழரை கோடி தமிழர்களும் ஒரு மரபுக்கு சொந்தக்காரர்கள். இவர்கள் நிச்சயம் பாஜக - அதிமுகவுக்கு மரண அடி கொடுப்பார்கள்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ள 10 நகரங்களுக்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசால் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில் மூன்றில் ஒரு பங்கு கூட மக்களுக்கு சென்று சேரவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் அளித்தவாறு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி 2 வருடங்கள் ஆகியும் இதுவரை எந்தப் பணியும் நடக்கவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக எய்ம்ஸ் திட்டப் பணிகளுக்கு ஒரு பைசாகூட ஒதுக்கப்படவில்லை. இதுகுறித்து ஒவ்வொரு முறையும் நான் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் இடம் கேட்டு வருகிறேன்.

கடந்த 60 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றில் அதிகமாக தமிழ் பேசிய பிரதமர் மோடி மட்டும்தான். இதுதான் நமக்கு மிச்சம்.பெட்ரோல் விலை உயர்வு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ‘வருத்தம்’ தெரிவித்துள்ளார். வரப்போகும் சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் பூத் இருக்கும். ஆனால் கட்சியினர் அமைக்காத தேர்தல் பூத்தாக தமிழகத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களும் செயல்படும். வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் அனைவரும் நமது கூட்டணிக்காக வாக்கு சேகரிப்பார்கள்.

தமிழக மரபை அழிக்கவும், சிதைக்கவும் செய்துவிட்டு மோடி, ராஜ்நாத் சிங் போன்றோர் திருக்குறள் சொல்லி வருகின்றனர். தமிழர்களின் மரபை எவ்வளவு சிதைத்தாலும், ஒடுக்க நினைத்தாலும், வெட்டினாலும், உரிமையை பறித்தாலும் தகுந்த பதிலடியை, தகுந்த எதிர்ப்பை தமிழக மக்கள் வெளிப்படுத்தியே தீருவார்கள்.கார்ப்பரேட்டுகளிடம் கொள்ளை அடித்த பணத்தை வைத்து ஏழு கோடி தமிழர்களையும் விலைக்கு வாங்க முடியும் என மோடியும் எடப்பாடியும் கூட்டணி சேர்ந்துள்ளனர். ஆனால் தமிழ்ச் சமூகம் தன்மானத்தை கோழைகளிடம் துரோகிகளிடம் விற்பனை செய்யாது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் ஆற்றிய உரையிலிருந்து....

தொகுப்பு: கே.முத்துக்கூரி

;