politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

ரபேல் விவகாரம் தொடர்ந்து துரத்திக் கொண்டிருக்கிறது. உண்மையை எப்போதும் மறைத்து வைத்திருக்க முடியாது பிரதம மந்திர அவர்களே! ஏன் ரபேல் விமானங்களை வாங்குவதற்கு முதலில் போடப்பட்ட ஆர்டர் ரத்து செய்யப்பட்டது; புதிதாக வெறும் 36 விமானங்களை மிகமிக அதிகமான விலையில் வாங்குவதற்கு ஏன் ஆர்டர் போடப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தாமல் நீங்கள் தப்பித்து விட முடியாது. உடனடியாக சுயேட்சையான உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடுங்கள்.  நீங்கள் தொடர்ந்து விசாரணைக்கு மறுப்பது, இதில் ஏதோ பெரிய விஷயம் மறைந்திருக்கிறது என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.

                                           **************

உத்தரப்பிரதேசத்தில் தேசிய பாதுகாப்பு முகமை (என்எஸ்ஏ)யின் விசாரணை என்ற பெயரில் நடந்த கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. 2018 ஜனவரி முதல் 2020 டிசம்பர் வரையிலான காலத்தில் என்எஸ்ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டவர்களின் கதி என்ன? என்பது தொடர்பாக ஏராளமான வழக்குகள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தன. 120 ஆட்கொணர்வு மனுக்கள் (ஹேபியஸ் கார்பஸ்) தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த நீதிமன்றம் 94 கைது உத்தரவுகளை ரத்து செய்திருக்கிறது. இது, உத்தரப்பிரதேச பாஜக அரசு எத்தனை கொடிய எதேச்சதிகார அரசாக இருக்கிறது என்பதை அம்பலப்படுத்துகிறது. குடிமக்களின் ஜனநாயக உரிமைகளையும், குடிமை சுதந்திரங்களையும் அழித்தொழிக்கிறது உத்தரப்பிரதேச பாஜக அரசு; அதேபோல மக்களை மதரீதியாக துண்டாடும் கொடிய செயல்களையும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அழித்தொழிக்கும் இத்தகைய கயமைத்தனமான ஆட்சியை எதிர்த்து அணிசேர்வோம். 

                                           **************

மக்களின் சிறுசேமிப்புக்கான வங்கி வட்டி விகிதத்தை குறைப்பது என்ற மோசமான முடிவை அறிவித்து, கடும் எதிர்ப்பு எழுந்தவுடனேயே மத்திய அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது. ஆனால் உண்மையில் வங்கிகளில் வைப்பு நிதியாக சிறுக, சிறுக சேமித்து வைத்திருக்கும் மக்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வட்டி விகிதம் என்பது அதே அளவிற்கு கிடைக்கவில்லை என்பது தெரிகிறது. உதாரணத்திற்கு பாரதிய ஸ்டேட் வங்கியில் ஓராண்டு கால வைப்பு நிதி தொகைக்கான வட்டி விகிதம் என்பது வரி மற்றும் பணவீக்க விகிதங்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட 1.53 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது. 5 சதவீதம் வட்டி விகிதம் கணக்கிட்டு வைப்புத் தொகையுடன் சேர்ப்பதற்கு பதிலாக வெறும் 3.5 சதவீதம் என்ற அளவில் மட்டுமே வட்டியை சேர்த்திருக்கிறார்கள். இது எத்தனை கொடூரமானது. வாழ்நாள் முழுவதும் உழைத்துச் சேமித்த பணத்தை சூறையாடுவதாகும். 2020 ஏப்ரல் முதலே ஒவ்வொரு மாதமும் வங்கி டெபாசிட் தொகைகளுக்கான உண்மையான வட்டி விகிதம் என்பது யாருக்கும் தெரியாமல் குறைக்கப்பட்டு வருகிறது. பாஜக அரசு தேசத்தின் சொத்துக்களை சூறையாடுகிறது; பொருளாதாரத்தை அழித்துக் கொண்டிருக்கிறது; மக்களின் வாழ்வாதாரங்களை சிதைத்து விட்டது; இப்போது அவர்களது சிறு சேமிப்பையும் நாசமாக்குகிறது. ஆனால் அதே வேளையில் மகா கோடீஸ்வரர்களுக்கு - பிரதமரின் கூட்டுக்களவாணி நண்பர்களுக்கு வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.

                                           **************

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது. இந்த தேர்தல்களின் மையமான அம்சமாக, மாநிலங்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட உரிமைகள் எந்த விதத்திலும் பறிக்கப்படக்கூடாது என்பது முன்னுக்கு வந்திருக்கிறது. மாநில அரசுகளின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. மிக சமீபத்திய உதாரணமாக, மத்திய அரசு பெட்ரோலிய பொருட்கள் மீது மிகப் பெருமளவு வரி விதிக்கிறது. அதன் மூலம் வருவாய் ஈட்டுகிறது. ஆனால் அதிலிருந்து வெறும் 1.7 சதவீதம் அளவிற்கு மட்டுமே மாநிலங்களுக்கு கொடுக்கிறது. பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி வருவாய் பங்கு மட்டுமல்ல, மத்திய அரசு வசூலிக்கிற ஒவ்வொரு வரியிலிருந்தும் மாநில அரசுக்கு கிடைக்கும் பங்கு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதுபோல ஏராளமான உதாரணங்கள் உள்ளன. 

;