ஒரு தகவலைத் தேட வேண்டுமென்றால் உங்களுக்குப் பிடித்த கூகுள், பிங், டக்டக்கோ போன்ற ஏதேனும் ஒரு தளத்தில் போய்த் தேடுவது வழக்கம். நாம் தேடும் தகவலுக்கேற்ற படங்களைத் தேடவும் அதே முறையில் வார்த்தைகளை உள்ளிட்டு தேடுவோம். கிடைக்கும் படங்களைக் கொண்டு வேலையை முடிப்போம். அதேசமயம், இதே படம் கொஞ்சம் பெரிய அளவில் (Size) கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று உங்களுக்குத் தோன்றலாம் அல்லது அதே மாதிரியான வேறு படங்கள் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்றும் தோன்றலாம். இதுபோன்று நம் தேவைக்கேற்ப படங்களைத் தேடுவதற்கு உதவும் தொழில்நுட்பம்தான் ரிவர்ஸ் இமேஜ் சர்ச்.
பின்னணித் தேடல்
மலர்கள், பூக்கள் என்று ஒரு தலைப்பையோ வார்த்தையையோ பலவிதமாகக் கொடுத்து தேடுவோம். இதில் கிடைக்கும் முடிவுகளில் நமக்குத் தேவையானதை தேர்வு செய்வோம். அந்தப் படத்தின் அளவு நம்முடையத் தேவைக்கேற்ப இல்லாமல் சிறியதாக இருந்தால் என்ன செய்வது? பெரிய அளவுப் படத்தைத் தேட அடுத்து முயற்சிப்போம். இது நேரத்தை வீணாக்கும். நாம் தேர்வு செய்த படத்தின் வேறு பிரதிகளோ, அளவுகளோ தேவையென்றால் அந்தப் படத்தைக் கொண்டே தேடலை மேற்கொள்ள உதவுவதுதான் ரிவர்ஸ் இமேஜ் சர்ச்(Reverse Image Search) தொழில்நுட்பமாகும்.
ஒரு படத்தில் உள்ள கோடுகள், வளைவுகள், வண்ணங்கள் போன்ற அடிப்படைக் கூறுகளை ஆராய்ந்து (அல்காரிதம்), அந்த படத்தின் உட்பொருளை அறிந்து அதே போன்ற அல்லது அதனோடு ஒப்பிடத்தக்க படங்களைத் தேடித்தரும் வகையில் உருவாக்கப்பட்டது இந்தத் தொழில்நுட்பம். கைரேகை (Finger print) மற்றும் முக அடையாளம் (Facial Recognition) காணும் தொழில்நுட்பங்கள் எப்படி செயல்படுகிறதோ அதே போன்ற ஒரு செயல்பாடுதான் இம்முறையிலும் பயன்படுத்தப்படுகிறது. பின்னணித் தகவல் அல்லது பட உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி தேடும் இம்முறை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் என்று அழைக்கப்படுகிறது.
இணையத்தில் தேடிப் பெற்ற படம் அல்லது ஏற்கனவே உங்களிடம் உள்ள ஒரு படத்தினை இணையத்தில் பதிவேற்றி அந்தப் படத்தின் வேறு அளவுகள் கிடைக்கிறதா (Other sizes (dimensions) of the picture) என்று தேடலாம், அந்தப் படம் வேறு எந்தெந்த இணையதளங்களில் கிடைக்கிறது (The list of websites that contain these images) என்று அறிந்து கொள்ளவும் தேடலாம், அதே போன்றிருக்கும் வேறு படங்களைத் (Similar images) தேடவும் பயன்படுத்தலாம். இதுமட்டுமல்லாது நமக்கு வேறு சில வேலைகளுக்கும் இந்த வசதி உதவுகிறது. அனுமதியின்றி நம்முடைய படத்தை வேறு இணையதளங்கள் பயன்படுத்துகின்றனவா என்பதை கண்டறியலாம். படத்தில் உள்ள இடம் எது என்பதைக் கண்டறியத் தேடலாம், ஒரு படத்தின் உண்மைத் தன்மையை சோதிக்கவும், அதுகுறித்த விபரத்தை அறியவும் தேடலாம். இப்படி மறைமுகமாக வேறு சில வசதிகளையும் படத்தேடல் தருகிறது.
படங்களைக் கொண்டு எப்படித் தேடுவது?
வழக்கமாக நாம் பயன்படுத்தும் கூகுள் படத் தேடல் (https://www.google.co.in/imghp), பிங் படத் தேடல் (https://www.bing.com/images/) மற்றும் யாண்டெக்ஸ் (https://yandex.com/images/) போன்ற பிரபல தேடல் தளங்களில் இந்த வசதி உள்ளது. உங்களிடம் உள்ள படங்களை சர்ச் விண்டோவுக்கு அருகில் காட்டப்படும் கேமரா போன்ற படத்தைக் கிளிக் செய்து அப்லோட் செய்து தேடலாம் அல்லது அந்த படத்திற்காக உள்ள இணையதள முகவரியை உள்ளிட்டு தேடலாம். ஏற்கனவே தேடிப் பெற்ற படத்தின் மேம்பட்ட படங்களை அதே சர்ச் விண்டோவிலிருந்து டிராக் அண்ட் டிராப் முறையில் இழுத்து சர்ச் விண்டோ மீது விடும்போது அந்தப் படத்தைப் போன்றே வேறு இணையதளங்களில் உள்ள படங்களையும் காட்டும்.ரிவர்ஸ் இமேஜ் சர்ச் நுட்பத்தை மெருகேற்றி தனித்தன்மையுடன் பயன்படுத்தும் வேறு சில இணையதளங்களும் உள்ளன. டின்ஐ (https://tineye.com) என்ற இணையதளம் சிறப்பான சேவையை வழங்குகிறது. வோல்ஃப்ரம் இணையதளம் உருவாக்கியுள்ள https://www.imageidentify.com/ என்ற தளம் அப்லோட் செய்த படம் குறித்த தகவல்களைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை வழங்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் ஆப்கள் சிலவும் உள்ளன. கூகுளின் லென்ஸ் ஆப் மூலம் நாம் எடுக்கும் படங்களைக் கொண்டு இணையதளம் மூலமாக படங்களைத் தேடும் வசதி கிடைக்கிறது. பிண்ட்ரெஸ்ட் ஆப் மூலமாகவும் படத்தேடலை மேற்கொள்ளும் வசதி உள்ளது. பெரும்பாலான இணையதளங்கள் மற்றும் ஆப்கள் கூகுள், பிங், யாண்டெக்ஸ், டின்ஐ தளங்களின் சேவைகளை தனித்தனியாகவோ ஒருங்கிணைத்தோ வழங்கும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன.
===என்.ராஜேந்திரன்===