internet

img

கணினிக்கதிர் : இந்த மாதம் இன்னும் கொஞ்சம் புதிதாக... - அப்டேட் தகவல்கள் -

குரோம் பிரௌசரில் புதிய வசதிகள்
குரோம் பதிப்பு 80 பல புதிய வசதிகளுடன் வந்துள்ளது. கோப்புகளை பதிவிறக்குவதை விரைவுபடுத்தும் பாரலல் டவுன்லோடிங் வசதி குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஒரு கோப்பை பதிவிறக்கும்போது பல பகுதிகளாக பிரித்து டவுன்லோட் செய்யும் வசதிக்கு தனிப்பட்ட மென்பொருள்களைப் பயன்படுத்தவேண்டியிருந்தது. இதனை தற்போது குரோம் கொண்டு வந்துள்ள பாரலல் டவுன்லோடிங் வசதி சாத்தியப்படுத்துகிறது.நாம் பார்க்கும் இணையப்பக்கங்களை நண்பர்களுக்கு அனுப்ப முகவரியை காப்பி செய்து அனுப்புவதற்கு பதிலாக QR கோட் வடிவில் அனுப்பும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.ஸ்மார்ட்போன் மற்றும் டேப்களில் குரோம் பிரௌசர் டேப்களை மாற்றிப் பார்க்கும்போது அடுக்கடுக்காக மிகப்பெரிய சாளரங்களாகக் காட்டும். இதனை மாற்றி ஒரு திரையில் திறந்திருக்கும் தளங்களின் சிறு வடிவப் படங்களை அடுக்காகக் காட்டும் வகையில் புதிய டேப் சுவிட்சர் அறிமுகமாகியுள்ளது. இந்த வசதிகள் தற்போது ஸ்மார்ட்போன்களில் மட்டும் அறிமுகமாகியுள்ளது. 

டிக்டாக்கிற்கு போட்டியாக வருகிறது லஸ்ஸோ
கூகுள், ஃபேஸ்புக் போன்ற பெரு நிறுவனங்கள் தங்களுடன் யாரும் போட்டிக்கு வந்துவிட்டால் அவர்களை வீழ்த்த பல முயற்சிகளைச் செய்வார்கள். அப்படி ஒரு முயற்சியைத்தான் தற்போது டிக்டாக் செயலிக்கு எதிராக ஃபேஸ்புக் புதிய ஆப் ஒன்றை கொண்டு வந்துள்ளது. வேகமாக உலக மக்களிடையே குறுகிய காலத்தில் புகழ்பெற்று வரும் டிக்டாக் செயலியின் வளர்ச்சி தங்கள் வருவாயை பாதிப்பதாக இருப்பதால், அதன் வசதிகள் சிறப்பம்சங்களை உள்ளடக்கி கடந்த ஆண்டில் லஸ்ஸோ என்ற செயலியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்தது. சோதனை முயற்சியாக அமெரிக்காவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட இந்த செயலி இன்னும் ஒரு சில மாதங்களில் உலக அளவில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. குறிப்பாக இந்தியா, இந்தோனேஷியா போன்ற முக்கியமான சந்தை கொண்ட நாடுகளில், டிக்டாக் செயலியின் ஆதிக்கத்தை வளர விடாமல் தடுக்க இச்செயலி உதவும் என்று ஃபேஸ்புக் நம்புகிறது. இதனை தனி செயலியாக கொண்டு சேர்ப்பது எளிதான காரியம் அல்ல என்பதால் வாட்ஸ்அப் செயலியுடன் ஒருங்கிணைத்து வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுகள், மேம்படுத்தல்கள் நடைபெற்று வருவதாக சிங்கப்பூர் ஃபேஸ்புக் குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்டோஸ் 7 மூடு விழா
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புகழ்பெற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இருந்து வந்த விண்டோஸ் 7 ஜனவரி 14ஆம் தேதியுடன் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் அதிகம் பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த விண்டோஸ் XPக்குப் பிறகு வந்த விஸ்டா பெரிய அளவில் சாதிக்கவில்லை. அதில் உள்ள குறைகளைக் களைந்து கடந்த 2009 ஜூலையில் விண்டோஸ் 7 இயங்குதளத்தை மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்தது . 10 ஆண்டுகளுக்கு மேலாக பயனாளர்களால் மிகவும் விரும்பப்படும் இயங்குதளமாக இன்றுவரை இதுவே இருந்துவருகிறது.விண்டோஸ் 8 தோல்வியால் தள்ளிப்போடப்பட்ட விண்டோஸ் 7 பதிப்பின் காலாவதி தேதி விண்டோஸ் 10 இயங்குதளம் வெளியிடப்பட்டபிறகு உறுதி செய்யப்பட்டது. ஜனவரி 14க்குப் பிறகு விண்டோஸ் 7 பயனாளர்கள் அப்டேட்களையோ, குறை களைவதற்கான பதில்களையோ மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து பெறமுடியாது. தன்னுடைய பொறுப்பை மைக்ரோசாப்ட் விலக்கிக் கொள்வதால் இதனைப் பயன்படுத்துபவர்களுக்கு வைரஸ், மால்வேர் உள்ளிட்ட தாக்குதல்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மைக்ரோசாப்ட் தீர்வுகளை வழங்காது. எனவே, பாதுகாப்பற்ற இயங்குதளமாக விண்டோஸ் 7 இருப்பதால் அனைவரும் புதிய விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கு மாறிக்கொள்ளவேண்டுமென மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

===என்.ராஜேந்திரன்====

;