internet

img

கணினிக்கதிர் : கூகுளில் நீங்கள் தேடிய தகவல்கள் பற்றிய விபரங்களை அழிப்பது எப்படி?

கூகுள் தேடலில் நமக்கு விருப்பமான தகவலைத் தருவதற்கு பல வழிமுறைகளைப் பின்பற்றுகிறது. அதில் முக்கியமானது உங்கள் முந்தையத் தேடல்களில் கிடைத்த விபரங்களை சேமித்து வைத்து அதன் அடிப்படையிலும் தேடுகிறது என்பதுதான். இதுபோல இணையம் சார்ந்த நம்முடைய பல்வேறு செயல்பாடுகளும் கூகுள் கணக்கில் சேமிக்கப்படுகின்றன. குறிப்பாக இருப்பிட வரலாற்றை (location history) கூறலாம்.

இந்தத் தேடல் விபரங்களை நாள் வாரியாக பட்டியலிட்டு கூகுள் பாதுகாக்கிறது. சேமிக்கப்பட்ட இந்த விபரங்களைப் பார்க்க வேண்டுமென்றால் கூகுள் அக்கவுண்ட்ஸ் பகுதியில் நுழைந்து Data & personalization என்பதைக் கிளிக் செய்து பார்க்கலாம். சிலர் இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக  இருப்பதாகக் கூறுகின்றனர். மற்றொரு சாரார் இது தங்களுடைய தனிமனித சுதந்திரத்தைப் (Privacy)பாதிப்பதாக உள்ளது என்கின்றனர். எப்படியிருப்பினும், உங்களைப் பற்றிய தேடல் விபரங்களை அழிக்க விரும்பினால் அதற்கு கூகுளே வசதியும் செய்து கொடுத்திருக்கிறது. 

கூகுள் பதிவு செய்துள்ள நம்முடைய பயன்பாட்டு விபரங்களைப் பார்க்க நினைப்பவர்கள், அதை அழிக்க நினைப்பவர்கள் இந்த எளிய முறையைப் பின்பற்றலாம். ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்துபவர்கள் கூகுள் ஆப் கிளிக் செய்து நுழையவும். அதில் இடது புறம் கீழே உள்ள மெனுவில் மேலும் (More) என்று காட்டும் மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்தால் தோன்றும் மெனுவில் Search Activity என்பதைக் கிளிக் செய்து நுழையவும். டெஸ்க்டாப் கணினியிலிருந்து பிரௌசர் வழியாக நுழைபவர்கள் உங்கள் கூகுள் கணக்கை சைன்இன் செய்து நுழையவும். அதில் https://myaccount.google.com/ என்ற பக்கத்திற்கு செல்லவும். அதில் Data & personalization  என்பதைக் கிளிக் செய்து நுழையவும். அதில் Activity controls என்பதற்கு கீழே Web & App Activity என்ற பகுதி காட்டப்படும். அதில் நம்முடைய டேட்டாக்கள் பதிவு செய்ய அனுமதி வழங்கியுள்ள விபரங்கள் காட்டப்படும். அதற்கு அடுத்ததாக Activity and timeline என்ற ஒரு பகுதி இருக்கும். இதில் My Activity என்பதைக் கிளிக் செய்தால் நீங்கள் இந்த நொடியிலிருந்து முந்தைய 7 நாட்களில் கூகுள் தேடலைப் பயன்படுத்தி பெற்ற விபரங்கள் பட்டியலிட்டுக் காட்டப்படும். இதனை பண்டல் வியூ அல்லது ஐட்டம் வியூ என இரண்டு முறைகளில் பார்க்க வசதி உள்ளது. 

தேடல் விபரங்களை நீக்க வேண்டும் என்று நினைக்கும் பயனர்கள், அதில் உள்ள Delete activity by என்பதைக் கிளிக் செய்தால் கடந்த 1 மணி நேரம் (Last hour), கடந்த நாள் (Last Day), அனைத்தும் (All Time) மற்றும் பயனர் விரும்பும் கால அளவு (Custom Range) என நான்கு வகை தேர்வுகள் கிடைக்கும். அதில் உங்கள் விருப்பத்தை தேர்வு செய்து நீக்கலாம்.இதுபோல இருப்பிட வரலாறு (Location History), யூ டியூப் தேடல், பயன்பாடு, கமெண்ட்கள் உள்ளிட்ட விபரங்களையும் நீக்கவும் நிர்வகிக்கவும் முடியும். அதற்கு அதே பக்கத்தில் Other Google Activity  என்பதைக் கிளிக் செய்யவும். தோன்றும் புதிய பக்கத்தில் Activity controls என்ற பட்டியலில் Web & App Activity, YouTube History, Location History ஆகியவை காட்டப்படும். அந்தந்த பகுதிக்குக் கீழ் உள்ள  மேனேஜ் ஆக்டிவிட்டி என்பதைக் கிளிக் செய்து மாற்றங்களை செய்யலாம்.

இதே பக்கத்தில் கூகுள் விளம்பரம் தொடர்பான விபரங்களை நீக்கவும் அல்லது மாற்றியமைக்கவும் வசதி உள்ளது. கூகுள் உங்களைப் பற்றி தெரிந்துகொள்வதுடன், விளம்பரதாரர்களுக்கும் உங்களை பற்றிய தகவல்களைக் கொடுக்கிறது. அதனால்தான் உங்கள் தேடல் வரலாற்றுடன் பொருந்தக்கூடிய விளம்பரங்கள் அடிக்கடி காட்டப்படுகின்றன. இதனையும் நீங்கள் மாற்றியமைக்க முடியும்.இப்படி அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து எச்சரிக்கை செய்தி ஒன்று கூகுளிடம் இருந்து வரும். ஆனால் உண்மையில், உங்கள் தேடல் வரலாறை அழிப்பது, உங்களது கூகுள் கணக்கில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

===என்.ராஜேந்திரன்===
;