கூகுள் நிறுவனம், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஆட்வேர் மறைந்து இருக்கும் 85 செயலிகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
டிரெண்ட் மைக்ரோ எனும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் குழு கூகுள் செயலிகளில் தீங்கு ஏற்படுத்தும் தன்மை கொண்ட ஆட்வேர் AndroidOS_Hidenad.HRXH மறைந்திருந்ததை கண்டறிந்தது. இந்த ஆட்வேர்கள், கூகுள் பிளே ஸ்டோரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதாகவும், வழக்கமான ஆட்வேர்களை போன்று இல்லாமல் இவற்றில் தோன்றும் விளம்பரங்களை விட்டு வெளியேறுவது கடினமாக இருப்பதாகவும், ஆட்வேர்களின் தன்மை கூகுள் பிளே ஸ்டோரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் டிரெண்ட் மைக்ரோ தெரிவித்துள்ளது.
மேலும், ஆட்வேர் நிறைந்ததாக கண்டறியப்பட்ட செயலிகளில் பெரும்பான்மையானவை புகைப்படம் மற்றும் கேமிங் சார்ந்து உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை சுமார் 80 லட்சத்திற்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்திருந்தனர். இதில் சூப்பர் செல்ஃபி, காஸ் கேமரா, ஒன் ஸ்டிரோக் லைன் பசில் உள்ளிட்டவை பிரபல செயலிகளாக அறியப்படுகின்றன.
இந்த செயலிகள் வெவ்வேறு டெவலப்பர் அக்கவுண்ட்களில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றை பல்வேறு டிஜிட்டல் சான்றிதழ்கள் மூலம் கையெழுத்திடப்பட்டு இருக்கின்றன. எனினும், இவை ஒரே மாதிரியான அம்சங்கள் மற்றும் கோட்களை பயன்படுத்தியிருக்கின்றன என்று டிரெண்ட் மைக்ரோ தெரிவித்திருந்தது. இந்நிலையில், கூகுள் நிறுவனம், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.