internet

கூகுள் மேப்ஸில் பேருந்துகள் மற்றும் ரயில்கள் குறித்த விவரங்களை அறியும் வசதி அறிமுகம்

கூகுள் மேப்ஸில் இனி பேருந்துகள் மற்றும் ரயில்கள் குறித்த விவரங்களை அறியும் வகையில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் முக்கிய 10 நகரங்களில், கூகுள் மேப்ஸ் பயனர்கள், அந்நகரங்களில் பேருந்து இருக்கும் இடம், பயனருக்கும், பேருந்திற்கும் இடையில் உள்ள போக்குவரத்து நெரிசலால் ஏற்படும், தாமத நேரம் போன்றவற்றை நேரடியாகக் காணும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வசதி டெல்லி, பெங்களூரு, மும்பை, ஐதராபாத், பூனே, லக்னோ, சென்னை, மைசூர், கோவை மற்றும் சூரத் ஆகிய நகரங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்திய ரயில்வே துறை உடன் இணைந்து, புதிதாக அறிமுகம் செய்துள்ள ரயில் விவரங்களில், ரயில் வரும் நேரம், ரயில் இருக்கும் இடம், தாமதமாகும் நேரம் போன்ற அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ளும் வசதி இடம் பெற்றுள்ளது. இந்த சேவையைக் கூகுள் நிறுவனம் "வெர் இஸ் மை ட்ரெயின்" செயலியுடன் இணைந்து செயல்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை அடுத்து, முதல் முறையாக ’மிக்ஸுடு மோடு டைரெக்ஷன்ஸ்’ என்ற சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய சேவை மூலம் பயனர் செல்ல வேண்டிய இடத்தை குறித்த விவரங்கள், பயண தூரம், பயண நேரம், மீட்டர் கட்டணம் உள்ளிட்டவை காண முடியும். இந்த வசதி தற்போது டெல்லி மற்றும் பெங்களூருவுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.