internet

img

பார்வையற்றவர்களுக்கான புதிய மொபைல் செயலி உருவாக்க ரிசர்வ் வங்கி திட்டம்!

பார்வையற்றவர்கள் ரூபாய் நோட்டுகளை அடையாளம் காணும் வகையில், புதிய மொபைல் செயலியை உருவாக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. 

நாடு முழுவதும் சுமார் 80 லட்சம் பேர் பார்வை குறைபாடு உடையவர்கள் உள்ளனர். இவர்கள், ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண வசதியாக, தொட்டு உணரும் வகையில் குறியீடுகள் அச்சிடப்படுகின்றன. இருப்பினும், நூறு ரூபாய்க்கு மேல் உள்ள ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண சிரமம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதற்கு தீர்வாக மொபைல் செயலி ஒன்றை உருவாக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த செயலியில், மொபைல் கேமராவில் நோட்டை படம் பிடித்தாலோ அல்லது கேமராவுக்கு முன் நோட்டை காண்பித்தாலோ, ரூபாய் நோட்டை அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. இதை அடுத்து ஆப் ஸ்டோரில் இந்த செயலியை, குரல் கட்டளைகள் மூலம் தேடல் செய்து பதிவிறக்கம் செய்யும் வசதியும் கொண்டுவர உள்ளது. முதமையாக, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் குரல் அறிவிப்புகளுடனான வசதியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இணைய இணைப்பு இல்லாமலேயே செயல்படும் வகையில் இந்த செயலி, 2 நொடிகள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில், நோட்டுகளை அடையாளம் காணும் வகையில் வடிவமைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.