யூடியூப்பில், இனவெறியை தூண்டும் வகையில் இருக்கும் வீடியோக்களை தடை செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”யூடியூப் நிறுவனம் வெறுப்பு பேச்சுகளுக்கு எதிரான கொள்கையை எப்போதுமே கொண்டிருக்கிறது. தற்போது மக்களிடையே பாகுபாட்டை உருவாக்கும் நோக்கில், ஒரு இனம் உயர்ந்தது என்பது போல் சித்தரிக்கும் வீடியோக்களை முற்றிலும் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக அமலுக்கு வந்திருக்கும் இந்த நடவடிக்கையை முழுமையாக செய்து முடிக்க சில மாதங்கள் ஆகலாம். இருப்பினும், படிப்படியாக முழுவதுமாக அமலுக்கு வந்துவிடும்” என்று கூறப்பட்டுள்ளது.
நியூசிலாந்து மசூதிகளில் நடைபெற்ற தாக்குதல் நேரலையாக யூடியூப்பில் ஒளிபரப்பானதையடுத்து, உலக தலைவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பரவும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து பல்வேறு சமூக வலைத்தளங்கள் தாமாக முன்வந்து இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.