புதுதில்லி:
மொபைல் டேட்டா பயன்பாட்டில் சீனர்களைக் காட்டிலும் இந்தியர்களே முன்னிலையில் உள்ளனர்.இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இதனால் மொபைல் மூலமாக இணைய தளத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது.
2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் மொபைல் டேட்டா கட்டணம் 95 சதவீதம் குறைந்திருப்பதாகவும், இணையதளப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் மெக்கின்சே ஆய்வு கூறுகிறது. தற்போதுள்ள ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் இரட்டிப்பாகும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
இதுகுறித்து வெளியாகியுள்ள மெக்கின்சே குளோபல் நிறுவனத்தின் புதிய ஆய்வறிக்கையில், ‘இந்தியாவில் டிஜிட்டல் நுகர்வோர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் இணையதளப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 56 கோடியாக அதிகரித்தது. இது சீனாவுக்கு அடுத்து இரண்டாவது இடமாகும். இந்திய மொபைல் டேட்டா பயன்பாட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 8.3 கிகா பைட் டேட்டா பயன்படுத்துகின்றனர். இது சீனாவை விட அதிகமாகும். சீனாவில் ஒவ்வொரு மாதமும் 5.5 கிகா பைட் டேட்டாவை மொபைல் பயன்பாட்டாளர்கள் பயன்படுத்துகின்றனர். தென்கொரியாவில் 8 முதல் 8.5 கிகாபைட் டேட்டா பயன்படுத்துகின்றனர்.
இந்தியர்கள் சராசரி யாக ஒவ்வொரு வாரமும் 17மணி நேரம் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர். இது சீனர்கள் மற்றும் அமெரிக்கர்கள் சமூகவலைதளங்களை ஒரு வாரத்துக்குப் பயன்படுத்தும் நேரத்தை விட கூடுதலாகும் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.