internet

img

நாங்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும்???? மோடிஜீ

அன்புள்ள மோடிஜீ,


உங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள பாரதீய மொழியிலேயே உங்களுக்கு நமஸ்காரம் சொல்லிக் கொள்கிறேன்..


பெரும் கனவுகளோடு நாங்கள் இருந்தோம்..ரயில் நிலைய மேடைகளில் தேநீர் விற்றுக் கொண்டிருந்த ஒருவர், குடும்ப உறவுகள் இல்லாத ஒருவர், நாட்டை மிகுந்த வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வேன் என உரத்து சொன்ன ஒருவர் எங்களை ஆளப் போகிறார் என்று ஐந்தாண்டுகளுக்கு முன் இறுமாந்திருந்தோம்..


எங்கள் பாட்டன் திருவள்ளுவன் வல்லரசு நாடு என்றால் என்னவென்று வரையறுத்த வல்லரசை நீங்கள்  உருவாக்குவீர்கள் என்ற பெரும் கனவோடு இருந்தோம்..


நடந்தாய் வாழி காவேரி என்று எங்களால் சீராட்டப்பட்ட காவேரி, நுங்கும்,   நுரையுமாய் எங்கள் தஞ்சை மண்ணில் உங்களால் சீறிப்பாய்வாள் என்றும் கனவு கண்டோம்...


சோழ வளநாடு சோறுடைத்து என்றும், மாடுகட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டிப் போரடித்த எம்மண், மீண்டும் உங்கள் குஜராத் மண்ணைப்போல் அதிரும் என்றும் ஆசையாய் நம்பினோம்... 


எங்கள் கனவுகளில் அனிதாக்கள் ஸ்டெதாஸ்கோப்புகளோடு வலம் வந்தார்கள்.. 


எங்கள் மகன்களும், மகள்களும், எந்த வேலைக்குச் செல்வதென முழிக்கப் போகிறார்களே என உங்கள் வேலை வாய்ப்பு உறுதியை நெஞ்சுக்குள் வைத்து அகமகிழ்ந்தோம்...


எங்களுக்கு சோறிடும் விவசாயிகள் அறுவடை முடிந்ததுடன் தாங்கள் பெற்ற இரட்டிப்பு வருமானத்தில் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதிகளில் ஹோலிப் பண்டிகையை வண்ணம் பூசிக் கொண்டாடுவார்கள் என்று கூட கனவு கண்டோம்...


நீங்கள் பாராளுமன்றப் படிக்கட்டுக்களை தொட்டு வணங்கிய உடன் நாங்கள் மிசாக்கால நினைவுகளை அழித்து விட்டு ஜனநாயகம் உங்களால் புத்தெழுச்சி பெற்று விட்டது என்று மிகவும் ஆனந்தப் பட்டோம்...


அதுவும் போக, நீங்கள் ஐந்தாண்டுக்குப் பிறகு பிராக்ரஸ் ரிப்போர்ட்டுடன் வருவேன் என்று அப்போது அடித் தொண்டையிலிருந்து முழங்கியது எங்களை ஆரவாரம் கொள்ளச் செய்தது...


ஏமாற்றி விட்டீர்களே மோடி...


தேநீர் விற்ற ஓர் ஏழைத்தாயின் மகன், ஒன்பது லட்சம் ரூபாய்க்கு கோட் அணிந்தது, எங்களுக்கு ஏமாற்றமாக மட்டும் அல்ல, அருவருப்பாகவும் இருந்ததே...


நீங்கள், வெளியுறவு அமைச்சர் ஒருவர் இருக்கிறார் என்பதையே மறந்து விட்டு அதானிகளோடும், அம்பானிகளோடும் வெளிநாடுகள் சென்று, கூடவே அருந்ததி பட்டாசார்யா போன்ற அரசு வங்கி இயக்குநர்களையும் அழைத்துச் சென்று பெரிய முதலாளிகளுக்கு நாங்கள் சிறுக சேமித்த வங்கிப் பணத்தை தாரை வார்த்து கொடுத்த போது வல்லரசு கனவு சுக்கு நூறானதே...


காவேரி மேலாண்மை வாரியம் என்ற பெயரில் நீங்கள் உச்ச நீதி மன்றத்தில் scheme என்ற பெயரில் நடத்திய வார்த்தை விளையாட்டில் எங்களுக்கு உங்களை விட, உடைத்துக் கொண்டு வர மாட்டாளா என காவேரி மேல் கோபம் வந்ததே...


நாங்கள் எங்கள் தொல் பாரம்பரியமான ஆதிச்சநல்லூரையும், கீழடியையும், தோண்டுங்கள் என வலியுறுத்தியபோது அதை புறந்தள்ளி நான் ஹைட்ரோகார்பனுக்காகவும், சேல்கேஸ் காகவும் தஞ்சை மண்ணை தோண்டுவேன் என்று நீங்கள் உறுதி கொண்டபோது உண்மையில் எங்கள் மனது அதிர்ந்து போனதே...


உலகப் புகழ்பெற்ற மருத்துவர்கள் எல்லாம் தமிழர்களாய் இருக்கும் உண்மையை கணக்கில் கொள்ளாமல், ஏழைகளுக்கு மருத்துவம் தேவையில்லை என்று கணக்கெடுத்து நீட் என்ற கொடுங்கரங்களால் எங்கள் அனிதாக்களை கொன்றீர்களே..  


பணம் செல்லாது என்று ஓர் நள்ளிரவிலும், புதிய வரி விதிப்பு (ஜி.எஸ்.டி) என்று இன்னொரு நள்ளிரவிலும் அறிவித்து அதற்கு புதிய இந்தியா என்று புனை சூடி, உங்களுக்கு ஓட்டளித்த எங்கள் பல லட்சம் சொந்தங்களை நடுத்தெருவில் நிறுத்தினீர்களே... 


எங்கள் விவசாயிகள் நம் தலைநகர் தெருக்களில் அரை நிர்வாணத்தோடு சுட்டெரிக்கும் வெயிலில் எலிக்கறியும், பாம்புக்கறியும் தின்று போராடியபோது நீங்கள் சுட்டு விரல் அசைக்காமல் அலட்சியப் படுத்தினீர்களே... 


இதுதானா உங்கள் பிராக்ரஸ் ரிப்போர்ட்????


நாடு என்பது ஆயுதம், மதவெறி, போர், முதலாளிகளுக்குச் சேவகம் என்பதல்ல..


போலிப்புள்ளி விவரங்களும் அல்ல...போட்டா ஷாப்பும் அல்ல....


அமைதி, சமூக நல்லிணக்கம், ஒருமித்த நிலைத்த வளர்ச்சி என்பதுவே... 


மீண்டும் கேட்கிறேன் மோடிஜீ..


மனசாட்சியோடு பதில் சொல்லுங்கள்...


நாங்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும்????


இப்படிக்கு, 

உங்களுக்கு வாக்களித்து ஏமாந்த ஓர்  

தேசபக்தை...

;