india

img

பூஸ்டர் டோஸ் எப்போது போடலாம்? இடைவெளி குறித்த முக்கிய தகவல் வெளியீடு 

இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளியை ஒன்பது மாதங்கள் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் நிலையில், தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் ஊடரங்கையும், கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா இரண்டு தவணை தடுப்பூசிகளை அடுத்து, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தவும் ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக மருத்துவப் பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், இணை நோய் உள்ள 60 வயதுக்கும் மேலான முதியவர்களுக்கு எதிர்வரும் ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என ஒன்றிய அரசு அறிவித்தது.

ஆனால், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான கால இடைவெளி குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் ஐசிஎம்ஆர் மற்றும் ஃபரிதாபாத்தில் உள்ள டிரான்ஸ்லேஷனல் ஹெல்த் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட ஐந்து அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ்களுக்கு இடையே 9 மாத கால இடைவெளியைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும், அதன் படி கடந்த ஜனவரி  16, 2021 முதல் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.  

மேலும், சுகாதாரப் பணியாளர்களுக்கு அடுத்தபடியாக, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்ட முன்களப் பணியாளர்களுக்கு அடுத்த கட்ட முன்னுரிமை வழங்கப்படும் எனவும், கடந்த ஏப்ரல் அல்லது மே மாதங்களில் இரண்டாவது டோஸ் பெற்ற மூத்த குடிமக்களுக்கும் இந்த இடைவெளியின் அடிப்படையில் பிப்ரவரியில் முதல் பூஸ்டர் டோஸ் போடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, இந்தியாவில் 15 - 18 வயது சிறார்களுக்கு ஜனவரி 3 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முன்திவு தொடங்கும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

;