india

img

தண்ணீர்... தண்ணீர்... நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது தமிழகத்தின் தாகம்

புதுதில்லி, ஜுன் 26 - தமிழகத்தில் பெரும்பிரச்சனையாக மாறியிருக்கும் குடிநீர் பற்றாக்குறைக்கு உரிய  தீர்வுகாண மத்திய அரசு உதவிட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.கே.ரங்கராஜனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் து.ராஜாவும் வலியுறுத்தினர். மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தின்போது பல்வேறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டிய டி.கே.ரங்கராஜன், தமிழக குடிநீர் பிரச்சனையை எடுத்துரைத்தார்.
டி.கே.ரங்கராஜன்
அப்போது அவர் கூறியதாவது: நாட்டில் இன்றைய தினம் 40 சதவீத அளவிற்கு தண்ணீர் இல்லை. மழை இல்லை. கடந்த ஐந்தாண்டுகளில் எண்ணற்ற புயல்கள். இதைப்பற்றியெல்லாம் குடியரசுத் தலைவர் தமது உரையில் குறிப்பிடவே இல்லை. கேரளம், ஒடிசா, தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இப்பேரிடர்களிலிருந்து மீள்வதற்காக சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மத்திய அரசை  உதவிடக் கோரின. கேரளம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பாதிப்புக்கு உள்ளானது. நிதிக் குழு உறுப்பினர்கள் என்ற முறையில் நாங்கள் அங்கே சென்றிருந்தோம். ஆனால், மத்திய அரசு ஒதுக்கிய தொகை மிகவும் சொற்பம்.  மத்திய அரசு, இழப்பினை மதிப்பீடு செய்திட வில்லை. மத்திய அரசு, கேரள அரசிடம் இப்படி  மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளக் கூடாது. அதேபோன்று தமிழ்நாட்டில் தற்போது குடிதண்ணீர்ப் பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு கேரள அரசு உதவ முன்வந்தது. ஆயினும் என்ன  காரணத்தாலோ தமிழ்நாடு அரசு அதனை ஏற்க  விரும்பவில்லை. தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தி மிகவும் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. தண்ணீர்ப் பற்றாக்குறை யைச் சந்தித்திட ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசிடமிருந்து சிறப்புத் திட்டமாகத் தமிழ்நாடு அரசு கோரியிருக்கிறது. கஜா புயல் நிவாரணத்திற்காக ஏற்கெனவே ஆறாயிரம் கோடி ரூபாய் கேட்டிருக்கிறது. மேலும் ஜிஎஸ்டி நிலுவைத்தொகையான 4,458 கோடி ரூபாயையும் தமிழ்நாடு அரசு கேட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் இத் தேவைகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும். தமிழ்நாட்டில் ஆள்பவர்கள் மத்தியில்  ஆள்பவர்களுக்கு மிகவும் நெருக்கமான வர்கள்தான். நீங்கள் இருவரும் இணைந்துதான் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டீர்கள். நாள்தோறும் தமிழ்நாட்டிலிருந்து முதலமைச்சரோ அல்லது வேறு அமைச்சர்களோ தில்லிக்கு  வந்து தங்களிடம் யாசித்துக் கொண்டிருக் கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
தங்கத்தை விட... 
புதனன்றும் இப்பிரச்சனையை டி.கே.ரங்கராஜன் மாநிலங்களவையில் எழுப்பினார். அப்போது அவர் பேசுகையில், “நாட்டில் குடிதண்ணீர் பற்றாக்குறைக்கு மிகவும் ஆளாகியுள்ள இந்தியப் பெருநகரங்களில் சென்னை முதலிடத்தில் இருக்கிறது. சென்னை யில், தங்கத்தின் விலை தண்ணீரின் விலையை விட மலிவாகிப் போனது. பன்னாட்டு நிறுவனங் களில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்கள் தண்ணீர் நெருக்கடி தீரும் வரையிலும் தங்கள் இல்லங்களிலிருந்தே பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். உணவுவிடுதிகள் நீரின்மை காரணமாக மூடப்பட்டுக் கொண்டி ருக்கின்றன. இவற்றுக்குக் காரணம் என்ன வெனில் நகரைச் சுற்றி ஓடும் ஆறுகள் அனைத் தும் சாக்கடைகளாக மாறிவிட்டன என்பதுதான். சென்னையில் நிலவும் குடிநீர்ப் பிரச்சனையை சரி செய்திட மத்திய அரசு உடனடியாக உதவிட வேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ள தண்ணீர் பிரச்சனையைப் போக்குவதும் மத்திய அரசின் பொறுப்புதான். எனினும் சென்னை ஒரு பெருநகரமாக இருப்பதால் சென்னையைக் காப்பாற்ற முன்வர வேண்டும்” என வேண்டு கோள் விடுத்தார்.
து.ராஜா
சிபிஐ தலைவர் து.ராஜா புதனன்று இவ்விவாதத்தில் பங்கேற்று பேசுகையில், “மாநிலங்களுக்கிடையே நிலவும் நதிநீர் தாவாக்களை சரி செய்திட மத்திய அரசு நட வடிக்கைகள் எடுத்திட வேண்டும். தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகள் அனைத்துமே மற்ற மாநி லங்களில் உற்பத்தியாகி தமிழகத்திற்கு வருபவை யாகும். எனவே தண்ணீர் பெரும் பிரச்சனை யாக மாறியுள்ள சூழலில் மேற்படி மாநிலங்கள்  போதிய அளவிற்குத் தண்ணீரைத் தமிழ்நாட்டி ற்குத் தருவதற்குத் தயக்கம் காட்டுகின்றன. எனவே இப்பிரச்சனையைத் தீர்த்திட நாடு தழுவிய அளவில் ஒரு கருத்தொற்றுமை உருவாக வேண்டும். நீரைத் தேக்கிப் பாதுகாக்கும் அமைப்புகளை முன்னுரிமை அடிப்படையில் உருவாக்கிட வேண்டும். நிலத்தடி நீரை சட்டவிரோதமாக எடுத்திடும் கார்ப்பரேட்டுகள் மற்றும் நிலக் கொள்ளைக் கும்பல்கள் மீது உறுதியுடன் நடவடிக்கை எடுத்திட வேண்டும்” என்று வலியுறுத்தினார். 

;