india

திரிபுரா முன்னாள் அமைச்சர் கைது...

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் பாதல் சவுத்ரி, அகர்தலாவில் உள்ள மருத்துவமனையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட, அவரை கைது செய்திருப்பதை கட்சியின் அரசியல் தலைமைக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இடதுமுன்னணி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக பாதல் சவுத்ரி செயலாற்றிய காலகட்டத்தில் சில குறிப்பிட்ட திட்டங்களை நிறைவேற்றியது தொடர்பாக ப குற்றச்சாட்டுக்களை அவர் மீது தற்போதைய பாஜக மாநில அரசு புனைந்துள்ளது. இதுதொடர்பான முதல் தகவல் அறிக்கையில் மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் உள்பட இதர மூத்த அதிகாரிகளின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை குறி வைத்து ஆதாரங்களும் அடிப்படையும் இல்லாத குற்றச்சாட்டுகளை புனைந்து எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்லும் என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.அதுமட்டுமல்ல, பாதல் சவுத்ரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது முன்ஜாமீன் மனு 

மீது திரிபுரா உயர்நீதிமன்றம் மறுநாள் காலை உத்தரவு பிறப்பிக்க இருந்த நிலையில், முன்கூட்டியே அவர் கைது செய்யப்பட்டிருப்பது, அப்பட்டமான பழிவாங்கும் செயல் என்பதை வெளிச்சமிட்டு காட்டுகிறது.இத்தகைய செயல்கள் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு போதும் ஒடுக்கிவிட முடியாது; கட்சி மீது எந்தக் களங்கத்தையும் கற்பித்துவிட முடியாது; ஏனென்றால் இடதுமுன்னணி அரசாங்கத்தின் ஆட்சி எத்தனை சிறப்பாக இருந்தது என்பதையும் எவ்வளவு நேர்மையான முறையில் நடந்தது என்பதையும் திரிபுரா மக்கள் நன்றாகவே அறிவார்கள். தோழர் பாதல் சவுத்ரி மீது புனையப்பட்டுள்ள வழக்கினைமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும் உறுதிபட எதிர்கொள்ளும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

;