india

img

கேரளாவில் 3வது நபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு - கேரள சுகாதார அமைச்சகம் தகவல்

கேரளாவில் மூன்றாவதாக ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை அம்மாநில சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள உகான் நகரில் இருந்து கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. சீனாவை தொடர்ந்து, தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளது. இந்தியாவிலும் கரோனா வைரஸால் கேரளாவைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டு, அவர்கள் மருத்துவமனையின் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவருமே சீனாவில் இருந்து சமீபத்தில் நாடு திரும்பியவர்கள். இந்நிலையில், காசர்கோடு பகுதியைச் சேர்ந்த ஒருவr, கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் சைலஜா இன்று தெரிவித்துள்ளார்.

அதே சமயம், இன்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஏற்கனவே நேற்று பயண அறிவுரைகள் வழங்கப்பட்ட நிலையில், இன்று மேலும் திருத்தியமைக்கப்பட்ட பயண அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. சீனாவுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும், 2020 ஜனவரி 15ம் தேதிமுதல் சீனாவுக்குப் பயணம் செய்தவர்களும், அண்மையில் பயணம் செய்தவர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், சீன பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான இ-விசா வசதி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறதாகவும், சீன நாட்டினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட இ-விசா தற்காலிகமாக செல்லாது எனவும், சீனாவிலிருந்து நேரடி விசா பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் அளிப்பதும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டாயமான காரணங்களால் சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் பயணம் செய்ய வேண்டியவர்கள் பீஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்தையோ அல்லது ஷாங்காய், குவாங்ஷூ-வில் உள்ள துணைத் தூதரகத்தையோ தொடர்புகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

;