india

ஊடகவியலாளர்களைக் குறிவைத்துத் தாக்குவதை நிறுத்துக - தில்லி பத்திரிகையாளர்கள் சங்கம் அறிக்கை

புதுதில்லி, ஜூன் 19-

பல முனைகளிலிருந்தும் ஊடகவியலாளர்கள் குறிவைத்துத் தாக்கப்படுவதற்கு, தில்லி பத்திரிகையாளர் சங்கம் (DUJ-Delhi Union of Journalists) வருத்தம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் எஸ்.கே.பாந்தே மற்றும் பொதுச் செயலாளர் சுஜாதா மாதோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்து குழுமத்தில் பணிநீக்கங்கள்

“தி இந்து” குழுமம், நிதி நிலைமை நெருக்கடியாக இருப்பதாகக் காரணங்காட்டி, எண்ணற்ற ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திருக்கும் முடிவிற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். 2020இல் கோவிட்-19 தொடர்பாக அறிவிக்கப்பட்ட சமூக முடக்கத்தின்போது பல ஊடகக் குழுக்கள் பலரை வேலை நீக்கங்கள் செய்தன. இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் பலர் மாற்று வேலையில்லாமலும் வருமானம் இல்லாமலும் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏபிபி இதழாளர் கொலை

உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இதழாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. 2021 ஜூன் 13 அன்று பிரதாப்கார் என்னுமிடத்தில் மதுபான மாஃபியா கும்பலால் சுலாப் ஸ்ரீவஸ்தவா என்னும் ஏபிபி செய்தி இதழாளர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கு நாங்கள் கண்டனம் செய்கிறோம்.

இக்கும்பலால் ஏற்கனவே மிரட்டல்களை எதிர்கொண்ட சுலாப் ஸ்ரீவஸ்தவா இதுகுறித்து பிரயாக்ராஜ் காவல்துறையினருக்கு தெரிவித்திருந்தார். எனினும் அதன்மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அடுத்தநாள் அவர் கொல்லப்பட்டிருக்கிறார். ஏபிபி செய்தி நிறுவனம்,  இவ்விஷயத்தைக் கையிலெடுத்துக் கொண்டு கொலைகாரர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும். அதேபோன்று இறந்த சுலாப் ஸ்ரீவஸ்தவா குடும்பத்திற்கும் உரிய இழப்பீடு அளித்திட வேண்டும். இதுபோன்ற தாக்குதல்கள் ஊடகவியலாளர்கள்மீது ஏற்படும்போது அவர்களைப் பாதுகாப்பதற்கு செய்தி நிறுவனங்களில் பல எவ்விதமான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாதிருப்பது மிகவும் வருந்தத்தக்கதாகும். செய்தி நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். ஏபிபி நிறுவனம் இந்தக் கொலை விஷயம் சம்பந்தமாகவும் இதில் கொல்லப்பட்டவருக்கு நீதி கிடைத்திட மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை வெளியிட வேண்டும்.

ட்விட்டர் மீது குறிவைக்கப்பட்டிருத்தல்

அடுத்து, ஒரு மூத்த முஸ்லீம் நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக சில இதழாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ட்விட்டரில் செய்திகள் வெளியிட்டதுதொடர்பாக காசியாபாத் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பது குறித்து அதிர்ச்சி அடைந்திருக்கிறோம். பல்வேறு குழுவினருக்கிடையே கலகங்கள் மற்றும் குரோதம் ஏற்படும் விதத்தில் நடந்துகொண்டார்கள் என சபா நக்வி, ரானா அய்யூப், முகமது சுபயர் மற்றும் தி ஒயர், ட்விட்டர் இந்தியா நிறுவனங்கள் மீதம் முதல் தகவல்அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்தியத் தண்டனைச் சட்டம் 153, 153-ஏ, 295-ஏ, 505, 120-பி உடன் 34 ஆகிய பிரிவுகளின்கீழ் இவ்வாறு முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ட்விட்டருக்கும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கும் இடையேயான தாவாவில் இதழாளர்கள் சிக்கிச்கொண்டிருப்பது துரதிர்ஷ்ட வசமானது. இந்த வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

அதே சமயத்தில், தில்லி நீதிமன்றம் ஒன்றில் இதழாளர் நேஹா தீட்சித்திற்கு எதிராக, ஆர்எஸ்எஸ் குழந்தைக் கடத்தலில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டி ஒரு ட்விட் பதிவு செய்தமைக்காக குற்றவிசாரணை முறைச்சட்டம் 156(3) பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுபோன்று ட்விட்டர், முகநூல் பதிவுக தொடர்பாக சகிப்பின்மை வளர்ந்துகொண்டிருப்பதற்கு எதிராகவும், அவர்களுக்கு எதிராக தன்னிச்சையாகக் குற்றச்சாட்டுகளின்மீது வழக்குகள் பதிவு செய்வதற்கும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம்.

கப்பன் வழக்கு

2021 ஜூன் 15 அன்று இதழாளர் சித்திக் கப்பானுக்கு ஓரளவுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். எனினும் அவர்மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழான குற்றச்சாட்டு இன்னமும் நிலுவையில்இருக்கிறது. கப்பனுக்கு சிறையில் கோவிட் தொற்று ஏற்பட்டு, தற்போது அதிலிருந்து நலமடைந்து வருகிறார்.

இவ்வாறு டியுஜே அறிக்கையில் கூறியுள்ளது.

(ந.நி.)

;