india

img

3 ஆண்டுகளாக ஒரு இளைஞரை குறிவைத்து தாக்கும் காகங்கள்!

காக்கை குஞ்சை கொன்றுவிட்டதாக எண்ணி, காகங்கள் மூன்று ஆண்டுகளாக ஒரு இளைஞரை குறிவைத்து தாக்கி வருகின்றன.

மத்திய பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டம், சுமேலா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சிவா கேவத். இவர் வீட்டை விட்டு எப்போது வெளியில் வந்தாலும் காகங்கள் அவரை கொத்துகின்றன. இதனால் அவர் பெரும்பாலும் கையில் ஒரு குச்சியுடனே வெளியில் சென்று வருகிறார். 3 ஆண்டுகளுக்கு முன் வலையில் சிக்கிய காக்கை குஞ்சு ஒன்றை சிவா காப்பாற்ற முயன்றபோது, அந்தக் குஞ்சு இறந்துவிட்டது. அன்று முதல் காக்கைகள் அவரை தாக்க துவங்கின.

இதுகுறித்து சிவா கேவத் கூறும்போது, “நான் அந்தக் காக்கை குஞ்சை காப்பாற்றவே முயன்றேன். ஆனால் அது எனது கைகளில் இருக்கும் போதே இறந்துவிட்டது. ஆனால் நான் கொன்றுவிட்டதாக காக்கைகள் நம்புகின்றன. எனவே திடீரெனவும் என்னை அச்சுறுத்தும் வகையிலும் அவை தாக்குகின்றன. இதில் பலமுறை தலையில் காயம் அடைந்துள்ளேன்” என்றார்.

இதுகுறித்து பறவைகள் மற்றும் விலங்குகளின் நடத்தை குறித்து ஆய்வு செய்தவரும் போபாலில் உள்ள பர்கதுல்லா பல்கலைக்கழக பேராசிரியருமான அசோக் குமார் முஞ்சால் கூறும்போது, “பிற பறவைகளை விட காக்கைகள் அதிக அறிவு கொண்டவை. ஆட்களை நினைவில் வைத்திருக்கவும், தங்களிடம் தவறாக நடந்து கொண்டவர்களை தாக்கும் குணமும் கொண்டவை. இருப்பினும் இந்தப் பழிவாங்கும் உணர்வு மனிதர்களை போன்ற கடுமையானதாக இருக்காது” என்றார்.
 

;