india

img

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ராஜஸ்தான் முதலிடம் - தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தகவல்

கடந்த 2020 ஆம் ஆண்டு பதிவான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 5,310 வழக்குகளுடன் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் நாட்டின் குற்ற வழக்குகள் தொடர்பாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை வெளியிடும். அந்த வகையில், கடந்த 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற குற்றங்கள் தொடர்பான ஆவணங்களை நேற்று வெளியிடப்பட்டன.

அதில் கூறப்பட்டுள்ளதாவது. கடந்த 2020 ல் நாடு முழுவதும் மொத்தம் 28,046 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 28,153 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி 77 பாலியல் வன்கொடுமை வழக்குகள் என்ற விகிதத்தில் கடந்தாண்டு பதிவாகியுள்ளது. இதில், 1,279 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். 4,031 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குடும்ப நண்பர்கள், அண்டை வீடுகளில் வசிப்பவர்கள், உடன் பணியாற்றுவோர் மற்றும் பிற அறிமுகமான நபர்கள் என்பது தெரியவந்துள்ளது. ‘

மேலும், நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு பதிவான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 5,310 வழக்குகளுடன் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. உத்திர பிரதேசம் 2,769 வழக்குகளுடன் 2 ஆம் இடத்திலும், மத்தியப் பிரதேசம் 2,339 வழக்குகளுடன் 3 ஆம் இடத்திலும், மகாராஷ்டிரா 2,061 வழக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது.

பாலியல் வழக்குகளில் ராஜஸ்தான் முதலிடத்திலிருந்தாலும் அம்மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 16 சதவீதம் குறைந்துள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தான் 34,535 வழக்குகளுடன் 3 ஆம் இடத்தில் உள்ளது. 49,385 வழக்குகளுடன் உத்தரப்பிரதேசம் முதலிடத்திலும் 36,439 வழக்குகளுடன் மேற்கு வங்கம் 2 ஆம் இடத்திலும் உள்ளன.

அதேபோல், ராஜஸ்தானில் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான குற்றங்கள் 3 ஆண்டாக அதிகரித்துள்ளன. கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த குற்றங்கள் எண்ணிக்கை 4,607 ஆக இருந்தது. இது, 2019 ஆம் ஆண்டு 6,794 ஆகவும் 2020 ஆம் ஆண்டு 7,071 ஆகவும் உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

;