india

img

ஜெர்மன் மாணவரை தொடர்ந்து நார்வே பெண் ஒருவரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்காக நார்வே நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு குடியேற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மத்திய பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன், சென்னையில் நடந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில், சென்னை ஐஐடி-யில் படித்து வந்த ஜெர்மனியைச் சேர்ந்த மாணவர் ஜேக்கப் லிண்டன்தால் பங்கேற்றார். இதை அடுத்து, அவர் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், விசா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகவும் கூறி, இந்தியாவில் தங்கி படிப்பதற்கான அனுமதியை குடியுரிமை துறை ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து, அவர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறப்பட்டார்.

இதேபோன்று தற்போது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளா மாநிலம் கொச்சியில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு, புகைப்படங்களை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட நார்வேயை சேர்ந்த ஜேன்-மெட் ஜொஹன்சன் என்னும் பெண்ணை, நாட்டை விட்டு வெளியேறுமாறு குடியேற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.  

இதுகுறித்து ஜொஹன்சன் கூறுகையில், ”இன்று 6 மணிக்குள் நாட்டைவிட்டு வெளியேறவில்லை என்றால் என் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குடியேற்ற அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக எழுத்துபூர்வமாக தருமாறு கேட்டேன், அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர்” என தெரிவித்துள்ளார். 
 

;