india

img

குழந்தைகள் நல்வாழ்வு குறியீடு: முன்னிலையில் கேரளா, தமிழகம்; கடைசி இடத்தில் ஜார்கண்ட், மத்திய பிரதேசம்

குழந்தைகள் நல்வாழ்வு குறியீட்டில் கேரளா மற்றும் தமிழகம் முன்னிலையிலும், ஜார்கண்ட் மற்றும் மத்திய பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளது என்று வேர்ல்ட் விஷன் இந்தியா என்ற தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வேர்ல்ட் விஷன் இந்தியா என்ற தொண்டு நிறுவனம், குழந்தைகளின் நல்வாழ்வு குறியீடுகள் குறித்து மேற்கொண்ட ஆய்வு அறிக்கையை கடந்த 27-ஆம் தேதி வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வானது, மூன்று முக்கிய பகுதிகளில் உள்ள 24 குறியீடுகளை கொண்டு குழந்தைகள் நல்வாழ்வு குறியீடு கணக்கிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் சுகாதாரம், கல்வி, மனித உரிமை, குடும்ப வருமானம் உள்ளிட்டவை உள்ளடங்கும்.

குழந்தைகளின் வளர்ச்சியின்மை மற்றும் இறப்பு விகிதம், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மனநலம் மற்றும் நோய்கள், பாலின விகிதம், இளம் பருவ கர்ப்பம் (ஏற்கனவே தாய்மை அடைந்து/கர்ப்பமாக இருக்கும் 15 முதல் 19 வயதுடைய பெண்கள்) போன்ற சுகாதார குறியீடுகள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம், மாணவர்-ஆசிரியர் விகிதம், அடிப்படை வாசிப்பு மற்றும் கணித திறன்கள், 12-ஆம் வகுப்பு முடிக்காதவர்களின் விகிதம் போன்ற கல்வி குறியீடுகள், சிறார் குற்றங்கள், தற்கொலை விகிதங்கள், குழந்தைத் தொழிலாளர்கள் போன்ற குற்றக் குறியீடுகள் மற்றும் வீடு இல்லாத குழந்தைகள் விகிதம், ரூ .5 ஆயிரத்துக்கு குறைவான வருமானம் உள்ள குடும்பங்கள் விகிதம் போன்ற பொருளாதார குறியீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் குழந்தைகள் நல்வாழ்வு குறியீடு கணக்கிடப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வு அறிக்கையில், 0.76 புள்ளிகளுடன் கேரளா முதலிடத்திலும், 0.67 புள்ளிகளுடன் தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. அதே போல், 0.53 புள்ளிகளுடன் மேகாலயா, 0.50 புள்ளிகளுடன் ஜார்கண்ட், 0.44 புள்ளிகளுடன் மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களும் கடைசி மூன்று இடங்களைப் பெற்றுள்ளன. அதேபோல், யூனியன் பிரதேசங்களில் 0.77 புள்ளிகளுடன் புதுச்சேரி முதலிடத்திலும், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி 0.52 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
 

;