india

img

பிபிசி செய்தி நிறுவனத்திற்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை வெளியிட்ட பிபிசி செய்தி நிறுவனத்திற்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி (British Broadcasting Corporation - BBC) செய்தி நிறுவனம், ஆவணப்படம் ஒன்றை அண்மையில் வெளியிட்டது. 'India: The Modi Question’ என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாக வெளியான இந்த ஆவணப்படத்தில், குஜராத் கலவரத்தில் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடிக்கு நேரடித்தொடர்பு இருந்தது என்பதை உரிய ஆதாரங்களோடு எடுத்துக் காட்டும் வகையிலிருந்தது. இதனால் பதறிப்போன மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசானது, தகவல் தொழில்நுட்ப  சட்டம் 2021-இன் விதி 16 வழங்கும் அவசரகால தணிக்கை அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்தியாவில் பிபிசி ஆவணப்படத்திற்கு தடை விதித்தது. யூடியூப், முகநூல், டிவிட்டர், இன்ஸ்டா கிராம் போன்ற சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்பப்படுவதை தடுத்து  நிறுத்தியது. எனினும், வாட்ஸ் ஆப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளின் மூலமாக  இந்தப் படம், இந்தியாவிலுள்ள பல்வேறு மாநில பல்கலைக்கழகங்களில் மாணவர்களால் திரையிடப்பட்டன. காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இப்படத்தை பொது இடங்களில் திரையிட்டு, நரேந்திர மோடியின் மதவெறி கோர முகத்தை அம்பலப்படுத்தினர்.
இந்த சூழலில், கடந்த பிப்ரவரி மாதம் தில்லி, மும்பை ஆகிய இடங்களில் உள்ள பிபிசி அலுவலகங்களுக்குள் மோடி அரசின் வருமான வரித்துறை புகுந்து சோதனையில் ஈடுபட்டது. இது இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் விவாதமாகி, பிபிசி ஊடகத்தை மிரட்டும் நோக்கத்துடனே இந்திய அரசு வருமான வரித்துறை சோதனையை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. 
இந்த நிலையில், ஆவணப்படம் வெளியிட்டது தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனத்திற்கு அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனத்திற்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.