india

img

நிசர்கா புயல் : மும்பை அலிபாக் அருகே இன்று பிற்பகல் கரையை கடக்கிறது

அரபிக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற்ற நிசர்கா புயல், இன்று மும்பை அருகே உள்ள அலிபாக் பகுதியில் கரை கடக்கத் தொடங்கியது. 

தென் மேற்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள நிசர்கா புயல் இன்று பகல் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு மகாராஷ்டிரா, தெற்கு குஜராத்தில் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து, மும்பையில் கடற்கரை ஒட்டிய பகுதிகள், பூங்காக்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது இன்று காலை முதல் நாளை மதியம் வரை அமலில் இருக்கும். தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.  

இந்நிலையில், 11 மணிக்கு பிறகு அலிபாக் அருகே புயல் கரையை கடக்கத் தொடங்கியது. இதனால் கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசுகிறது. கனமழையும் பெய்கிறது. கிட்டத்தட்ட 2 மணி முதல் 3 மணி நேரத்திற்குள் புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நிசர்கா புயலால் மகாராஷ்டிராவின் மும்பையும், கடலோர மாவட்டங்களும் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், குஜராத்தை விட மகாராஷ்டிரா தான் அதிகம் பாதிக்கப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.

;