india

சர்ச்சை பேச்சு.... பாஜக தலைவருக்கு தேர்தல் ஆணையம் கண்டிப்பு....

இந்தூர்:
தேர்தல் பிரச்சாரத்தில் பொதுமக்கள் முன்னிலையில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள் என்று பாஜகதலைவர் விஜய் வர்கியாவுக்கு தேர்தல்ஆணையம் கண்டிப்புடன் அறிவுறுத்தி யுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் 28 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நவம்பர் 3 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் அக்டோபர் 14 ஆம் தேதி இந்தூர் மாவட்டம், சான்வர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக மூத்த தலைவர் விஜய் வர்கியா பேசும்போது, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல் நாத், திக்விஜய் சிங் இருவரையும் துரோகிகள் உள்ளிட்ட அவதூறான வார்த்தைகளாலும், சர்ச்சைக்குரிய சொற்களாலும் விஜய் வர்கியா விமர்சித்துள்ளார்.இதுகுறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய் வர்கியா மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் 26 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க விஜய்வர்கியாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. விஜய் வர்கியாவும், தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸுக்கு விளக்கம் அளித்திருந்தார். 

இதையடுத்து, தேர்தல் ஆணையம் வெள்ளியன்று வெளியிட்ட அறிவிப்பில், “பாஜக தலைவர் விஜய் வர்கியாவின் கருத்துகளையும், பேச்சுகளையும் தீவிரமாக ஆய்வு செய்தோம். அதில் அரசியல் கட்சி, வேட்பாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் பிரிவு(2)ன் கீழ் அவர் விதிமுறையை மீறியுள்ளது தெரியவந்தது.முதல் தவறு என்பதால், விஜய் வர்கியாபொதுமக்கள் மத்தியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும்போதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போதும், சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;