india

img

நுகர்வோர் குறைகள் மீதான வழக்குகள் விரைவு நீதிமன்றங்கள் மூலமாக விரைந்து முடிக்கப்பட வேண்டும்

நுகர்வோர் குறைகள் மீதான வழக்குகள் விரைவு நீதிமன்றங்கள் மூலமாக விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் வழக்குரைஞர் ஏ.எம். ஆரிப் கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமையன்று மதியம் மக்களவையில், 2019ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டமுன்வடிவின்மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று ஏ.எம். ஆரிப் பேசியதாவது:

2019ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமுன்வடிவானது, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்திடும் எலக்ட்ரானிக் பொருள்கள் குறித்து மவுனம் கடைப்பிடித்துள்ளது. இதனால் கிராமப்புறப் பகுதிகளிலிருந்து வரும் நுகர்வோர் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

கிராமப்புற மக்களில் 70 சதவீதத்திற்கும் மேலானவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள். அவர்களில் 80 சதவீத நுகர்வுப் பொருள்கள் என்பவை அவர்களின் உணவுப் பொருள்கள் மட்டுமேயாகும். அவர்களிடம் பணம் ஏதாவது மீதம் இருப்பின் அப்போதுதான் அவர்கள் தங்களுக்குத் தேவையான உடை மற்றும் மருந்துப் பொருள்களை வாங்குவார்கள். இத்தகைய நிலையில் அவர்களைத் தரமான பொருள்களைத்தான் வாங்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்க முடியாது.

விவசாயத் தொழிலாளர்களின் ஆண்டு வருமானம் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இந்தச் சட்டமுன்வடிவில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளையெல்லாம் அலசி ஆராய்ந்துபார்த்து அதன் அடிப்படையில் பொருள்களை வாங்குவதற்கு அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. எனவே, அத்தகைய கிராமப்புற நுகர்வோரின் நலன்களைப் பாதுகாத்திடக்கூடிய விதத்திலும் நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், நேர்மையற்றமுறையில் வர்த்தகம் புரிவோர்மீது தாமாகவே முன்வந்த நடவடிக்கை எடுத்திட இந்தச் சட்டமுன்வடிவு வகைசெய்யவில்லை. இது ஏன்?

என் முதல் கவலை என்பது, நுகர்வோரைத் தவறான பாதையில் அழைத்துச் செல்லும் விளம்பரங்கள் குறித்ததாகும். இ-வணிகம் மூலமாக விற்பனை செய்யப்படும் எண்ணற்ற பொருள்கள் குறித்தும் இந்தச் சட்டமுன்வடிவு கவலைப்பட வேண்டியது அவசியமாகும்.

இந்தச் சட்டத்தை மீறுவோர்மீது நடவடிக்கை எடுத்திட அதிகாரிகளுக்கு இந்தச் சட்டம் அனுமதி அளித்திடவில்லை. தண்டனை நடவடிக்கைகளை மாநில அளவில் அல்லது மாவட்ட அளவில் இயங்கும் நுகர்வோர் குறைதீர்க்கும் அமைப்புகள் (Consumer Redressal Forums) மூலமாகவே மட்டுமே தண்டனை நடவடிக்கைகளை எடுத்திட முடியும்.

மற்றொரு பிரச்சனை, மிகவும் சிக்கலான விதத்தில் அதிகாரவர்க்க வலைப்பின்னல் இருப்பதால் வழக்குகளை விரைவாக முடிக்க முடியவில்லை. இதுபோன்ற வழக்குகளில் விரைந்து வழக்குகளை முடிப்பது அவசியமாகும். இதுபோன்ற வழக்குகளில் நீதி வழங்குவது தாமதப்படுவது என்பது,. நீதி மறுக்கப்படுவதேயாகும்.

இதுபோன்ற வழக்குகள் முடிப்பதற்கான சராசரி கால அளவை அரசாங்கம் விளக்கிட வேண்டும் என்று விரும்புகிறேன்.

 அடுத்து இந்தச் சட்டமுன்வடிவில் 11ஆவது பிரிவின்கீழ் போதாமை (deficiency) என்பதற்கான வரையறை மாற்றப்பட்டிருக்கிறது. இதன்காரணமாக மருத்துவர்கள் மீது  அவர்கள் மேற்கொள்ளும்  அறுவை சிகிச்சைகளுக்குப்பின் நோயாளிகளுக்கு ஏற்படும் குறைபாடுகளுக்காக மருத்துவர்கள் மீது  நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.  அறுவைக்குப்பின் நோயாளிகள் எப்படி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று முறையான அறிவுரைகள் கூற மருத்துவர்கள் தவறி விட்டார்கள் என்று அவர்கள்மீது வழக்குத் தொடர வாய்ப்பு உண்டு. இது தொடர்பாக மருத்துவர்கள் தங்கள் ஐயங்களை ஏற்கனவே வெளிப்படுத்தத் துவங்கி விட்டார்கள். எதிர்காலத்தில் மருத்துவர்கள் ஏழைகளுக்கும் படிப்பறிவற்றவர்களுக்கும் மருத்துவம் பார்ப்பதற்குத் தயங்கக்கூடிய நிலைமைகளும், மறுக்கக்கூடிய நிலைமைகளும் ஏற்படக்கூடும்.

மற்றொரு முக்கியமான விஷயம், இந்திய ரிசர்வ் வங்கி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அளித்துள்ள ஒரு பதிலில், வங்கிகளில் லாக்கர்களில் வைத்திடும் மதிப்புமிக்க பொருள்களுக்கு இழப்பு ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட வங்கிகள் பொறுப்பாகாது என்று கூறியிருப்பதை இந்த அவையின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.  இது ஒரு பெரிய கேள்விக் குறியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோன்று எண்ணற்ற இடைவெளிகள் இந்தச் சட்டமுன்வடிவில் காணப்படுகின்றன. இவற்றைச் சரிசெய்திட வேண்டும் எனில், நுகர்வோரின் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் எனில், இந்தச் சட்டமுன்வடிவு நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட வேண்டும்.

இவ்வாறு ஆரிப் பேசினார்.

(ந.நி.)

 

;