india

img

தில்லியில் பல்வேறு பகுதியில் தொலைதொடர்பு சேவைகள் துண்டிப்பு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இன்று காலையில் தில்லியில் போராட்டம் நடைபெற்ற நிலையில், பல்வேறு பகுதிகளில் தொலைதொடர்பு சேவை முற்றிலும் 1 மணி வரை துண்டிக்கப்பட்டது. இது பொதுமக்கள் இடையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இன்று மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தில்லியில் ஜாமியா பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டம் நடைபெறும் சுற்றியுள்ள பகுதிகளில், ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டன. கால்கள், எஸ்.எம்.எஸ், இணையம் என அனைத்து சேவைகளும் முற்றிலும் முடக்கப்பட்டன.

இதுதொடர்பாக நெட்டீசன்கள், டிவிட்டரில் ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களிடம் கேள்வி எழுப்பின. அதற்கு பதிலளித்த ஏர்டெல் நிறுவனம், ‘அரசு உத்தரவுப்படி, உங்கள் பகுதியில் தொலைதொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அசௌகரியத்துக்கு வருந்துகிறோம்’ என்று பதிலளித்துள்ளது. அதே போல் வோடபோன் நிறுவனமும், ‘அரசு உத்தரவுப்படி, டெல்லியின் ஜாமியா, சஹீன் பாக், பாவானா, சீலம்புர், ஜாஃப்ராபாத், மண்டி இல்லம் ஆகிய பகுதிகளில் தொலைதொடர்பு சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தன’ என்று பதிலளித்துள்ளது. தில்லியின் முக்கிய பகுதிகளில் தொலைதொடர்பு சேவை துண்டிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், ஒரு மணி அளிவில் தொலைதொடர்பு சேவை திரும்ப வழங்கப்பட்டன. 

மேலும் தில்லியில் பல பகுதிகளில் மெட்ரோ ரயில் நிலையங்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்துகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. சாலைகளில் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு செல்ல வழியில்லாமல் அடைந்து கிடக்கின்றன. டெல்லி-குர்கான் எல்லை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

;