india

img

இந்தியத் தொழிலாளர்களுக்காக பாடுபட்ட இங்கிலாந்து பட்டறைத் தொழிலாளி - ப.முருகன்

பெஞ்சமின் பிரான்ஸிஸ் பிராட்லி இந்தப் பெயர்  இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. அவர் கிரேட் பிரிட்டனில் உள்ள வால்த்தம்ஸ்டவ் நகரில் 1898ல் பிறந்தவர். இவர் கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியால் இந்தியாவில் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்காக அனுப்பப்பட்டவர். அவருடன் மற்றொரு கம்யூனிஸ்ட்டான  பிலிப் ஸ்பிராட்டும் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார்.  இந்தியாவில் அவர்கள் இருவரும் தொழிற்சங்க செயல்பாடுகளில் தீவிரமாகப் பணியாற்றினார். அந்தக் காலத்தில்தான் பிரிட்டிஷ் அரசாங்கம், வளர்ந்து வரும் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளை தேடிப்பிடித்து அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்து கவிழ்க்க முயன்றனர் என்று கூறி சதி வழக்குகளைப் போட்டது. அப்படி போடப்பட்ட உலகின் மிகப்பெரிய சதி வழக்கான மீரட் சதி வழக்கில் பெஞ்சமின் பிராட்லியும் பிலிப் ஸ்பிராட்டும் பிரிட்டிஷ் காவல்துறையினரால் சேர்க்கப்பட்டனர். 

 இந்த வழக்கு விசாரணையின்போது பெஞ்சமின் பிராட்லி, “அரசுத் தரப்பினர் என்ன விரும்புகின்றனரோ அதற்கு நேர் எதிரான விளைவையே இந்த வழக்கு ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். இந்த வழக்கு இந்திய மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டும். அதே நேரத்தில் காலனி நாட்டு மக்கள் போராட்டத்தில் இங்கிலாந்து தொழிலாளர்கள் மேலும் அதிகமாக பங்கேற்கும்படி உறுதியாக தூண்டிவிடும்” என்று கூறினார்.  ஐந்தாண்டுகள் நடந்த இந்த வழக்கில் பெஞ்சமின் பிராட்லிக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அது மேல் முறையீட்டின்போது ஓராண்டு கடும் காவல்தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்புக்குப் பின்னர் விடுதலையான பெஞ்சமின் பிராட்லி இங்கிலாந்து திரும்பினார். அங்கு பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அதேநேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளிலும் அதிக ஈடுபாடு காட்டினார்.

அவர் இயல்பிலேயே ஒரு பட்டறைத் தொழிலாளி. அதனால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமான ஈடுபாடு கொண்டிருந்ததில் வியப்பேதும் இல்லை. 1934-40 வரை ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியின் செயலாளர்களில் ஒருவராக பணியாற்றினார். அத்துடன் கம்யூனிஸ்ட் கட்சியின் காலனி நாடுகளுக்கான செய்திப்பிரிவிலும் செயல்பட்டார். அவர் இந்தக் காலத்தில் பத்திரிகை பணியில் ஈடுபட்டதோடு அதன் விநியோகப் பணிகளிலும் பங்கேற்றார். கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான ‘டெய்லி ஒர்க்கர்’ பத்திரிகை 1930ல் துவங்கப்பட்டது. 1945 முதல் அந்தப் பத்திரிகை பீப்பிள்ஸ் பிரஸ் பிரிண்டிங் சொசைட்டி மூலம் நடத்தப்பட்டது. அது 1966ஆம் ஆண்டு ‘மார்னிங் ஸ்டார்’ பத்திரிகை என  பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த பத்திரிகைகளில் பிராட்லி பல்வேறு கட்டுரைகளையும் செய்திகளையும் எழுதினார். தொழிற்சங்க நடவடிக்கைகளில் மட்டுமின்றி காலனி நாடுகளின் விடுதலைக்கான போராட்டத்திலும் தீவிரம் காட்டினார்.

அவர் பிரபல கம்யூனிஸ்ட் தலைவரான ரஜினி பாமிதத்துடன் இணைந்து காலனி நாடுகளுக்கான செயல் திட்டமாக தத் - பிராட்லி கோட்பாடு உருவாக்கினார். இது இந்தியாவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் முன்னணி ஒன்றை உருவாக்க வேண்டுமென கம்யூனிஸ்ட்டுகளைக் கேட்டுக் கொண்டது. அதனடிப்படையில் இந்தியாவில் இயங்கிய கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட்டனர். அத்துடன் காங்கிரஸ் கட்சியின் மாநாடுகளில் முற்போக்கான தீர்மானங்களை கொண்டுவருவதற்கு முயன்றனர். அது பல இடங்களிலும் மாநாடுகளிலும் சாத்தியமானதாகவே இருந்தது. இதுபற்றி இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களில் முக்கியமானவரான ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பின்னாளில் கட்டுரை ஒன்றில் சிறப்பாக குறிப்பிட்டிருக்கிறார்.

‘இந்த ஆவணம் (தத் - பிராட்லி கோட்பாடு) அந்தக் காலத்தில் சுதந்திரப் போராட்டத்தின் நடைமுறைகளில் நீண்டகால கொள்கை மற்றும் உடனடிக் கொள்கைகள் தொடர்பாக ஒரு முக்கியமான பங்கைச் செலுத்தியது. இந்த ஆவணத்தின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சி இயங்கியதால் நாட்டு விடுதலைப் போராட்டத்தில் முன்னணிக்கு வந்தது; அது மக்களிடம் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கைகளின் விளைவாக அடுத்தடுத்த காங்கிரஸ் மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அதன் செல்வாக்கை உயர்த்தின. பல காங்கிரஸ் கமிட்டிகள் கம்யூனிஸ்ட்டுகளின் கைகளுக்கு வந்தன. அதன் மூலம் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் அவர்களால் தீவிர மாற்றம் செய்ய முடிந்தது.  இந்த ஆவணம் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் சரியான நிலைபாட்டை எடுப்பதற்கு மிகப்பெரும் பங்காற்றியது. அத்துடன் காங்கிரசின் தலைமையில் செயல்பட்ட வர்க்க அமைப்புகளான விவசாயிகள் சங்கம் மற்றும் இதர  தொழிற்சங்கங்களில் இருந்தவர்களை புரட்சிகரமான நடவடிக்கைகளில் ஈடுபட செய்வதற்கு உதவியது’ என்று கூறியிருப்பது இந்த ஆவணத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதாகும்.

பிரிட்டனில் இருந்த இந்திய லீக் நடத்தும் கூட்டங்களில் 1930-1940 காலகட்டங்களில் பெஞ்சமின் பிராட்லி முக்கிய பேச்சாளராக இடம்பெற்றிருந்தார். அவர் இந்தியாவின் தலைவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பலருடன் தொடர்பு கொண்டிருந்தார். முற்போக்கு எழுத்தாளர் முல்க் ராஜ் ஆனந்த், இக்பால் சிங், கிருஷ்ணராவ் செல்வாங்கர், சசாதர் சின்கா போன்றோர் அவர்களில் முக்கியமானவர்கள். இந்தியாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கிருஷ்ணமேனனுடன் இருந்த தொடர்பு பரஸ்பரம் இருவருக்கும் உதவிகரமாக இருந்தது. 

பிரிட்டனில் தொழிற்சங்க, தொழிலாளி வர்க்க செயல்பாடுகளுக்கு பிராட்லி மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். அவர் பிரபல கம்யூனிஸ்ட் தலைவர்களான மிச்செல் காரிட், ஹாரிபாலிட் போன்றவர்களுடனும் இணைந்து செயல்பட்டார். அவர் 1934ஆம் ஆண்டு ‘இந்தியாவின் பின்னணி’ என்ற நூலை எழுதினார். 1936ல் ரஜினி பாமிதத்துடன் இணைந்து ‘இந்தியாவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் முன்னணி’ எனும் நூலை வெளியிட்டார். 1938ல் ‘இந்திய தேசிய காங்கிரசின் உதயம்’ குறித்து எனும் நூலை ஹாரிபாரிட், ரஜினி பாமிதத் ஆகியோருடன் இணைந்து எழுதியுள்ளார்.  இதுதவிர இந்தியாவின் புகழ்மிக்கத் தலைவராக பின்னாளில் மலர்ந்த ஜோதிபாசு, பி.பி.ராய் சௌத்ரி, எஸ்.எம்.குமாரமங்கலம், சாபுர்ஜி சக்லத்வாலா, ஹரால்டு லாஸ்கி, எஸ்.ஏ.விக்ரமசிங்கே போன்றோருடன் தொடர்புகொண்டிருந்தார். 

அத்துடன் அவர் இந்திய லீக், இந்திய தேசிய காங்கிரஸ், ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி ஆகிய அமைப்புகளில் செயல்பட்டார். அவர் தனது வாழ்நாளில் இறுதிக்காலத்தில் பிரிட்டன் - சீனா நட்புறவு சங்கத்தின் தேசிய அமைப்பாளராக செயல்பட்டார். அவர் பணியாற்றிய பத்திரிகையான ‘டெய்லி ஒர்க்கர்ஸ்’ சர்வதேசியத்தையும், கம்யூனிஸ்ட் செயல்பாடுகளையும்  உயர்த்திப் பிடிப்பதாக அமைந்திருந்தது. படக்குறிப்பு - நின்று கொண்டிருப்பவர்களில் (இடமிருந்து வலமாக) 5வதாக இருப்பவர் பெஞ்சமின் பிரான்சிஸ் பிராட்லி, 7வதாக இருப்பவர் பிலிப் ஸ்பிராட்.

;