india

img

மகாராஷ்டிராவில் அணை உடைந்து 6 பேர் பலி, 20க்கும் மேற்பட்டோர் மாயம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை காரணமாக அணை உடைந்தது, அருகில் உள்ள 7 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதில் 6 பேர் பலியாகி உள்ளனர், 20க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில், தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் 5 நாட்களாக கனமழை  பெய்து வருகிறது. இதை தொடர்ந்து, ரத்னகிரியில் உள்ள திவாரே அணை வேகமாக நிரம்பி வந்த நிலையில், நேற்று இரவு திடீரென அணையின் ஒரு பகுதி உடைந்து தண்ணீர் ஆக்ரோஷத்துடன் வெளியேறியது.

இதன் காரணமாக, அணையின் அருகில் உள்ள 12 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அந்த வீடுகளில் இருந்தவர்களைக் காணவில்லை. அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுதவிர அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள 7 கிராமங்களை சூழ்ந்துள்ளது. 

இதையடுத்து மாவட்ட அதிகாரிகள், போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பேரிடர் மீட்புப் படையினரும் சென்றுள்ளனர். 6  பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் 20 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி மற்றும் மீட்பு பணி நடைபெறுகிறது.
 

;